Posted Date : 09:06 (05/06/2012)Last updated : 17:06 (05/06/2012)
- அ.லெனின்ஷா படங்கள் : கே.ராஜசேகர்ஒளிப்பதிவு : கே. கார்த்திகேயன்
''ஐயையோ.. அந்தப் பெண்ணுக்கு என்னை விட நீளமானக் கூந்தல், ப்ச்.. இந்தப் பொண்ணோட புஸ் புஸ் கன்னம் என்னைவிட ரொம்ப அழகு.. ஹூம்.. அதோ அவங்களுக்கு நல்ல ஃபோட்டோஜெனிக் ஃபேஸ்.... இப்படி எல்லாம் எந்த விஷயத்துக்காகவும் நான் பயப்படவே இல்லை. என்னுடைய பெஸ்ட் எதுவோ அதை நான் கொடுக்க முயற்சி செய்தேன்; கடைசி வரைக்கும் என் நம்பிக்கையை கெட்டியா பிடிச்சுகிட்டேன்.. வெற்றி கிடைத்தது!'' - பெருமிதத்தோடு முகம் சிவக்கிறார் 2012-க்கான மிஸ் இந்தியா பட்டம் வென்ற சென்னை பொண்ணு ரோச்சல் மரியா ராவ்.
தியாகராய நகரில், அவரது வீட்டின் முன்பு இருக்கும் மைதானத்தில், ஜாக்கிங் செய்து கொண்டிருந்த ரோச்சல் மரியா ராவை அழகான காலைப் பொழுதில் சந்தித்தேன். 'மிஸ் இந்தியா’ பட்டத்தை வெல்வதற்கு தன்னை எப்படி எல்லாம் தயார்படுத்திக் கொண்டார் ரோச்சல் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவலோடு கேள்விகளைத் தொடுக்க ஆரம்பித்தேன். ஜாக்கிங் மட்டும் தானா... ஜிம் பயிற்சியும் உண்டா?
என்னுடைய உயரம் 5.7; எடை 48; இந்த கிரவுண்டில் 45 நிமிடங்கள் வரைகூடத் தொடர்ந்து ஓடுவேன். ஆனால், உடலை வருத்திக்கொண்டு எடையைத் தூக்கிச் செய்யும் உடற்பயிற்சிகள் என்றால், எனக்குக் கொஞ்சம் கஷ்டமான வேலை. மிஸ் இந்தியா போட்டிக்காக 'காம்பேக்ட் கைனட்டிக்ஸ்’ என்ற ஒரு பயிற்சி முறையைக் கற்றுக் கொண்டேன். இது சண்டை போடுவது மாதிரியான ஒரு பயிற்சி. களரி, கராத்தே, ஜுடோ பயிற்சிகளில் உள்ள நுணுக்கங்களை மட்டும் எடுத்துச் செய்கிற இந்தப் பயிற்சி முறையில், எந்த ஒரு எடையையும் தூக்க வேண்டியது இல்லை. இதைச் செய்யும் போது மனதும் உடலும் ஒருசேரப் புத்துணர்ச்சி அடைகிறது. அதிகப்படியான வியர்வை வெளியேறுவதோடு கலோரியும் எரிக்கப்படுகிறது. கலோரி எரிக்கப்பட்டாலே உடலுக்குத் தேவையான சக்தி கிடைத்துவிடும். தொடைச் சதை இறுகி, கால்கள் அழகாவதற்கு நடைப்பயிற்சிதான் நல்லது. அதனால் ஜாக்கிங் முடிந்ததும் நடைப்பயிற்சி செய்கிறேன்.
அம்மா ஆங்கிலோ இந்தியன்; அப்பா தெலுங்கு என்று கலந்து கட்டிய கலவையாக இருக்கிறீர்களே... வீட்டில் உங்களுடைய உணவுப் பழக்கம் எல்லாம் எப்படி?
என் அப்பா பாட்டி ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர். அந்தக் காலத்திலேயே சென்னை வந்து நிரந்தரமாகக் குடியேறிவிட்டார்கள். நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னைதான். அதனால் தமிழ்நாட்டு சாப்பாடுதான். உடல் பருமனா இருந்தாலே நிறைய நோய்கள் வந்து ஒட்டிக்கொள்ளும். அதனால் டயட் விஷயத்தில் நான் எப்போதுமே கவனமாக இருப்பேன். காலையில், முட்டையின் வெள்ளைக்கரு, ஓட்ஸ், ஒரு கப் பால்; மதிய வேளையில், தீட்டப்படாத பிரவுன் ரைஸ், பருப்புக் கூட்டு சாப்பிடுகிறேன். பிரவுன் ரைஸ் போன்ற தீட்டப்படாத அரிசிகளில், நமக்குத் தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது. மேலும் அதிக அளவிலான நார்ச்சத்து இருப்பதால் உடல் எடையையும் சரியான அளவில் பராமரிக்க முடியும். அது மட்டுமல்லாமல் இது பெருங்குடல் புற்று நோயையும் தவிர்க்கிறது. இதில் இருக்கும் 'செலீனியம்’ இதயப் பாதிப்பு மற்றும் விரல்கள், மணிக்கட்டுப் பகுதிகளைத் தாக்கும் 'ரொமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ்’ போன்ற பாதிப்புகளையும் குறைக்க உதவுகிறது. இதில் இருக்கும் 80 சதவிகித மெக்னீசியம் நரம்புகளின் செயல்பாட்டுக்கு நிறைய உதவி செய்கிறது. க்ரீன் டீ அளவுக்கு நிகரான 'ஆன்டி ஆக்சிடென்ட்’ பிரவுன் ரைஸில் இருக்கிறது. ரத்த அழுத்தத்தையும் சர்க்கரையின் அளவையும்கூட கட்டுப்பாட்டுக்குள் வைக்க பிரவுன் ரைஸ் பெஸ்ட் சாய்ஸ்! உப்பு சேர்க்காத கிரில்டு சிக்கன் அல்லது கிரில்டு மீன்தான் என்னுடைய இரவுச் சாப்பாடு.
உப்பில்லாத அசைவ உணவை எப்படி சாப்பிடுகிறீர்கள்?
எல்லாவற்றுக்குமே நம் மனதுதான் காரணம். 'இந்த உணவு ருசியாக இருக்காது’ என்று நினைத்துக்கொண்டே சாப்பிட்டால் அது அமிர்தமாகவே இருந்தாலும் ருசிக்காதுதான். 'இதுதான் உடம்புக்கு நல்லது’ என்று முதலில் மனதுக்குள் சொல்லிப் பழக வேண்டும். நெருப்பு என்ற ஒரு விஷயத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், இன்று வரைக்கும் எல்லோரும் பச்சையாகத்தானே சாப்பிட்டுக் கொண்டிருப்போம்.
உங்கள் சருமமும் கூந்தலும் பளபளப்பாக இருக்கிறதே.... ஏதாவது விசேஷ காரணம் உண்டா?
பாலிவுட் நடிகர்களுக்கான 'ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்’ டாக்டர் ஜமுனா பாய் கொடுத்த டிப்ஸ்தான் இதற்குக் காரணம். கேரட், பீட்ரூட் கலந்த 'ரெட் ஜுஸ்’ குடிக்கச் சொன்னார். காலையில் வெறும் வயிற்றில் ரெட் ஜூஸ் குடிப்பேன். மாலையில், நெல்லிக்காய் ஜூஸ். இதுதான் என் கூந்தல் மற்றும் சரும மினுமினுப்புக்கான காரணம்; கூடவே ஆழ்ந்தத் தூக்கமும். சரியானத் தூக்கம் இல்லை என்றால் சருமச் சுருக்கம், கண்ணுக்கு கீழே கருவளையம் மற்றும் மன அழுத்தப் பாதிப்பும் ஏற்படும். இரவு 12 மணியில் இருந்து காலை நான்கு மணி வரையிலும் கண்டிப்பாக உடம்பு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க வேண்டும். கண்களுக்கும், இதயத்துக்கும் நல்ல ஓய்வு கொடுப்பதால் மாரடைப்பு வராமல் தடுக்க முடியும். கூடவே ரத்த ஓட்டமும் சீராக இருப்பதால், 'ஸ்ட்ரோக்’ பாதிப்புகளும் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். நன்றாகத் தூங்கியிருந்தால், காலையில் ஐந்து மணிக்கே நம்மால் எழுந்திருக்க முடியும். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்துக்குள் திட்டம் போட்டு, சரியான நேரத்தில் செய்து முடிப்பவர்களில் பலரும் ஐந்து மணிக்கே எழுந்திருப்பவர்கள்தான். அன்றைய வேலைகளை அன்றைக்கே செய்து முடித்துவிட்டோம் என்ற திருப்தி கிடைக்கிறது. இந்தத் திருப்தியே நல்லத் தூக்கத்துக்கும் வழி வகுத்துவிடும்.
எப்படி உங்களால் இவ்வளவு ரிலாக்ஸ்டாக இருக்க முடிகிறது?
நான் நான்காம் வகுப்பு படிக்கும்போதே விளம்பரப் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டேன். விளம்பரப் படங்களில் எப்போதுமே முகத்தைப் புத்துணர்வாக வைத்திருக்க வேண்டும். நம்முடைய மனதுக்குள் என்ன நினைக்கின்றோமோ அதைத்தான் முகமும் பிரதிபலிக்கும். அதனால் நான் எதையும் நெகட்டிவாக நினைப்பது இல்லை. காலேஜில் படிக்கும்போது 'நான்தான் குயின்’ என்று தலை மேல் புத்தகங்களை அடுக்கி வைத்துக்கொண்டு நண்பர்கள் வட்டத்தில் நாடகம் செய்வேன். மற்றபடி 'மிஸ் இந்தியா’ கனவு எல்லாம் அப்போது எனக்குக் கிடையாது. மாடலிங் துறைக்கு வரவேண்டும் என நினைத்து அப்படிச் செய்தேன். அதனாலேயே எப்போதும் சிரித்த முகபாவத்துடனேயே இருப்பேன். பிரச்னைகள் மனதை அழுத்தும் சமயங்களில், நல்ல இசையை ரசித்துக் கேட்பேன்; மனது அப்படியே லேசாகிவிடும். யாருடனும் என்னை ஒப்பீடு செய்து, பொறாமைப்பட்டு மனதை வருத்திக்கொள்ளும் பழக்கம் எனக்குக் கிடையாது. இதுவும் மனதுக்கான ஒரு விளையாட்டுதான்''
பேட்டி முடிந்து நான் கிளம்பி வெளியே வந்து, வெகுநேரம் ஆன பின்னும் இன்னும் மனதில் அவரது சிரித்த முகம் நிறைந்திருந்தது. புன்னகை என்பது தொற்றிக் கொள்ளும் தன்மையுடையது என்பதை மீண்டும் ஒருமுறை உணர்ந்து கொண்டேன்.
விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் - வேண்டுகோளும்
வாசகர்களின் கருத்துக்கள் விகடனின் கருத்துக்கள் அல்ல.
கருத்துக்கள் நெறியாளுகைக்கு உட்பட்டவை.
தனி நபர்கள் மீதான தாக்குதல், கட்டுரை மற்றும் செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துக்கள் இணையதளத்திலிருந்து நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்த பகுதியை தவறாக பயன்படுத்துவோர் மற்றும் இணையதளத்தின் விதிகளுக்கு முரணாக செயல்படுவோர் இணையதளத்தை பயன்படுத்துவதை தடுக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
நல்ல முறையில் ஆரோக்யமான வகையில் கருத்து சுதந்திரத்தை பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம்.
தவறான கருத்துக்களை கண்டால் துஷ்பிரயோகம் தெரிவி (REPORT ABUSE) என்ற பட்டனை அழுத்தவும்.