ஐயையோ ரிசல்ட்..!
Posted Date : 18:06 (05/06/2012)Last updated : 18:06 (05/06/2012)

 - பட்டாணி


பரீட்சை அப்டீங்கற விஷயத்தை கண்டுபிடிச்ச புண்யவான் யாருன்னு தெரியலை.. தெரிஞ்சா, 108 தேங்காய் உடைக்கணும் - அவர் தலை மேல.!

பின்ன என்ன தலைவா.. பரீட்சைன்னு ஒண்ணு வெச்சா, ரிசல்ட்ன்னு ஒண்ணு வந்து தொலைக்குது.. எந்த பயத்தையும் விட இந்த ரிசல்ட் பயம் தான் பெரிய பயமா இருக்கு..!

பத்தாங்கிளாஸ்.. அதாங்க, எஸ்.எஸ்.எல்.சி-க்கு போனவுடனே, ஆளாளுக்கு 'பப்ளிக் எக்ஸாம்' 'பப்ளிக் எக்ஸாம்'னு நமக்கு பிரஷரை ஏத்துவாங்க.. வீட்ல நிம்மதியா கதை புக் படிக்க முடியாது, டிவி பாக்க முடியாது.. அட, ஒரு கல்யாணம், விசேஷம்னு யாராச்சும் கூப்பிட வந்தா, அவங்க கூட கொஞ்ச நேரம் பேசக் கூட விடமாட்டாங்க. படி படின்னு ஒரே ரோதணை. நாம படிச்சே தீரணும்னு ஒரு கூட்டமே நமக்கு எதிரா திரண்டிருக்கும்.

பரீட்சை நேரத்துல ஏற்கனவே பயந்து இருக்க நமக்கு, அட்வைஸ் பண்றேங்கற பேர்ல ஆளாளுக்கு ஆடியோ பேதி மருந்து குடுப்பாங்க.. இந்த பாட புஸ்தகம் இருக்கே.. ஹப்பா.. எனக்கு அதை தொறந்த அஞ்சாவது நிமிஷம் கொட்டாவி வரும், ஆறாவது நிமிஷம் தூக்கம் வரும். எட்டாவது நிமிஷம் டீ வரும்.

அம்மா டீ குடுக்கும் போது அவங்களை பாத்தா பாவமா இருக்கும். நம்மளை என்னவோ 'உலகம் சுற்றும் வாலிபன்' எம்ஜியார் (சயின்டிஸ்ட் முருகன்!) லெவலுக்கு மதிச்சு, மாத்தி மாத்தி டீ போட்டு குடுத்துகிட்டே இருப்பாங்க.. அது என்னமோ, என்ன மாயமோ தெரியலை.. அந்த டீயை குடிச்சா இன்னும் நல்லா Fresh-ஆ தூக்கம் வரும்.

பரிட்சை நேரத்துல என்னைத் தவிர எல்லாரும் என் படிப்பு மேலயே அக்கறையா இருப்பாங்க.. பத்தாக்குறைக்கு டிவில வர்ற விளம்பரம், பத்திரிகைகள்ல வர கட்டுரை எல்லாமே படிப்பு.. படிப்பு.. படிப்பு பத்தி தான்.

எனக்கு ஒரு சந்தேகம்.. அது எப்படி பரிட்சை நேரத்துல மட்டும் இந்த பாழாப்போன ஜுரம் வந்து தொலைக்க மாட்டேங்குது.? சினிமா பாட்டு கேக்கணும்னு ஏன் அவ்ளோ ஆசையா இருக்குது?

ஒரு வழியா கடைசி பரிட்சைய எழுதி முடிச்சதும் மனசுக்குள்ள வந்த சந்தோஷம் இருக்கே.. ஹைய்யோ.. அடுத்த ஒரு மாசம் கிரிக்கெட், சினிமா, ஃபிரண்ட்ஸ்னு கலக்கலா போச்சு..

காலைல எழுந்து பசங்களோட ஜாகிங்.. வீட்டுக்கு வந்து டிபன், மைதானத்துக்கு போய் கிரிக்கெட், மறுபடியும் வீடு. குளியல். சோறு. கிளம்பி எவன் வீட்டுக்காவது போய் செஸ் இல்லாட்டி கேரம் போர்டு ஆடிகிட்டே அரட்டை, டிவி, பிரவுசிங் சென்டர், நொறுக்கு தீனி, மறுபடியும் கிரிக்கெட். 6.30 மணிக்கு மேல Flood Light மேட்ச் நடக்கற இடத்துக்கு போய் அலப்பறை. ஆஹா.. நிம்மதியா போய்கிட்டிருந்தது.

"பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.. வரும் ஜூன் மாதம்.. " ஐயையோ.. அதுக்குள்ள ரிசல்ட்டா..?! என்ன அவசரம்.. நல்லா பொறுமையா டயம் எடுத்து இன்னும் ஒரு ரெண்டு மூணு மாசம் கழிச்சு ரிசல்ட்டை வெளியிடலாமே..

நல்லா படிக்கற பசங்களுக்கு கவலை இல்லை.. கண்டிப்பா புட்டுக்கும்னு தெரிஞ்ச பசங்களுக்கும் கவலை இல்லை.. என்னை மாதிரி மதில் மேல் மியாவ் தான் இதுல அவஸ்தைபடறோம்.

இன்னும் பத்து நாள்ல ரிசல்ட் வரப் போகுதுன்னு தெரிஞ்ச உடனே, எனக்கு மனசு பக் பக்குனு அடிக்க ஆரம்பிச்சிடுச்சு.. "பாஸ் பண்ணிடுவ இல்லை.. ?"னு அப்பா கேக்கும்போது "கண்டிப்பா.."ன்னு பலவீனமா சொன்னேன். அப்பா என் கண்ணையே ஒரு 3 செகண்ட் பாத்துகிட்டு இருந்தார்.. ஒருவேளை அப்பாவுக்கு நாம கணக்கு பரிட்சை சரியா எழுதலைன்னு தெரிஞ்சிருக்குமோ..?

அப்பா நகர்ந்ததும் அம்மா வந்து, " நல்லா தானே எழுதியிருக்க.. பாஸ் பண்ணிடுவ இல்லை..? உங்க அத்தை ஏற்கனவே என்னை மதிக்க மாட்டா.. நீ பெயில் ஆயிட்டா உங்க அப்பா பக்கத்து உறவுக்காரங்களுக்கு ரொம்ப இளக்காரமா போயிடும்டா.." அதாவது, நான் பாஸ் பண்ணி ப்ளஸ் ஒன் போறது கூட முக்கியமில்லை.. உறவுக்காரங்க மத்தில தலைக்குனிவு வந்திடக் கூடாது..! என்ன உலகம்டா இது..!

மறுநாள் பேப்பர் படிச்சிட்டிருந்த அப்பா, கண்ணாடியை கழட்டி வெச்சுட்டு, பாத்ரூமுக்கு போயிருந்தார் போல.. நான் கண்ணாடியை பாக்காம, பேப்பரை அப்டியே எடுக்க, கண்ணாடி 'க்ளிங்' ஆயிடுச்சு..!

அப்பா வந்து உடைஞ்சிருந்த கண்ணாடியை பாத்தார்.. கண்ணாடி போடாத அப்பாவோட முகத்தைப் பார்க்க சிரிப்பாய் இருந்தது. என்னை முறைச்சது கூட பரவால்ல.. திட்டியிருந்தா கூட திருப்தியா இருந்திருக்கும்.. ஒண்ணும் சொல்லலை.. உடைஞ்ச துண்டுகளை ஒரு பேப்பர்ல எடுத்து போட்டுகிட்டு, " ரிசல்ட் வரட்டும்.."ன்னு சொல்லிட்டு போயிட்டார். கண்ணாடி உடையறதுக்குக்கும், என் ரிசல்ட்டுக்கும் என்ன சம்மந்தம்.. ? கண்ணாடியை உடைச்சதுக்கு திட்டித் தொலைக்க வேண்டியது தானே. ரிசல்ட் புட்டுகிச்சுன்னா, இதுக்கு சேத்து வெச்சு.. ஐயோ..!

கடவுளே.. நான் எப்படியாவது பாஸ் ஆகிடணும்.. இந்த ஒரு தடவை மட்டும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணு.. உன் உண்டியல்ல 10 ரூபா போடறேன்.

எங்க செட்ல யாரெல்லாம் பெயில் ஆவான்னு யோசிச்சு பாத்தேன்.. ம்ஹூம்.. சொல்ல முடியாது.. எல்லாருமே பாஸ் ஆனாலும் ஆயிடுவானுங்க.. நான் மட்டும் பெயில் ஆகி, மத்தவன் எல்லாம் பாஸ் ஆகிட்டா.. ஐயையோ.. அதுமட்டும் நடக்கக் கூடாது.. குறைந்தபட்சம், பக்கத்து வீட்டு மகேஷ் மட்டுமாவது பெயில் ஆயிடணும்.. அவன் பிட் அடிச்சிருப்பானோ.. கடவுளே.. என்னை பாஸ் பண்ண வெக்க முடியாட்டி, அட்லீஸ்ட் எனக்கு கம்பெனி குடுக்க மகேஷையும் பெயில் ஆக்கிடு.. 20 ரூபா டீலிங்..!

அதுக்கப்பறம் எந்த எதிர்மறையான வார்த்தைகள் காதுல விழுந்தாலும், அது என் ரிசல்ட்டை பத்தி ஞாபகப்படுத்திகிட்டே இருந்தது. 'போச்சு' 'வராது' 'இல்லை'ன்னு எல்லா வார்த்தைகளையும் மாத்தி மாத்தி யாராவது சொல்லிகிட்டே இருந்தாங்க.

பஸ்ல போயிட்டிருக்கும்போது, கோவில், சர்ச், மசூதி எதையும் விடலை.. என் ரிசல்ட்டுக்காக எல்லா சாமிகிட்டயும் சொல்லி வெச்சாச்சு.. என் கணக்கு பேப்பரை திருத்தும்போது, திருத்தரவருக்கு பைத்தியம் பிடிச்சு, நூத்துக்கு 80 மார்க் போடற மாதிரி பகல் கனவெல்லாம் கண்டேன்.. திட்டமிட்டு காணும் கனவு எல்லாம் பலிக்குமான்னு தெரியலை.

ரிசல்ட் வந்த அன்னிக்கு பசிக்கவே இல்லை.. அம்மா என்னை விடாம "சீக்கிரம் சாப்பிட்டுடு.."ன்னு வம்படியா சாப்பிட வெச்சாங்க.. அன்னிக்கு வீட்ல எல்லாரும் மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி இருந்தாங்க.. அப்பா ஆபிஸுக்கு போவாரா மாட்டாரான்னு சந்தேகமா இருந்தது.. கடவுளே.. அவர் கிளம்பி ஆபிஸ் போயிடணும்.. உண்டியல் அக்கவுண்ட்டில் இன்னும் ஒரு 5 ரூபாய் கூடியது.

இப்ப மாதிரி ரிசல்ட்டை பிரவுசிங் சென்டர்ல எல்லாம் போய் பாக்க முடியாது.. பேப்பர் தான்.

ரிசல்ட் பேப்பர் இப்ப வரும்.. அப்ப வரும்னு அலைகழிய வெச்சிட்டாங்க.. பக்கத்து தெரு, அடுத்த தெருன்னு நாயா பேயா அலைஞ்சு, பேப்பரை வாங்கினா கை காலெல்லாம் நடுங்குது.

பேப்பர்ல நம்பரை தேட முடியலை.. கண்ல பூச்சி பறக்குது.. வயத்துல பட்டாம்பூச்சி பறக்குது.. பேப்பர்ல டுடோரியல் காலேஜ் விளம்பரம் எல்லாம் போட்டிருக்காங்க.. ஒரே அபசகுனமா இருக்குது..

என் நம்பர் சுத்தமா மறந்து போச்சு.. பேப்பரை தரைல விரிச்சு, அது மேலயே மண்டி போட்டு உக்காந்து, நம்பரை ஞாபகப்படுத்தி, கஷ்டப்பட்டு தேடிப் பாத்ததுல.. நம்பர் இல்லை.. இன்னொரு தடவை ஒழுங்கா பாக்கறேன்.. ம்ஹூம்.. இல்லை.. என்னமோ தெரியலை.. எல்லா டென்ஷனும் போய், நிம்மதியா இருந்தது..

நாம ஸ்டேட் ஃப்ர்ஸ்ட் மார்க் எதிர்பார்த்து அது வரலைனா வருத்தப்படலாம்.. பேப்பர்ல போட்டோ வர வேண்டாம் பாஸ்.. வெறும நம்பர் மட்டும் வந்தா போதும்னு பொன் செய்யும் மருந்தா மனசை வெச்சிருக்கோம்.. அதுக்கு கூட வழியில்லாம போயிடுச்சு..

திடீர்னு மகேஷ் வீட்லேந்து பயங்கரமா சத்தம் கேட்டது.. மகேஷை திட்டிகிட்டிருந்தாங்க.. ஆஹா.. அவனுக்கும் புட்டுகிச்சா..?! நன்றி நண்பா..!

மேட்டரை கன்ஃபர்ம் பண்ணிக்க மகேஷ் வீட்டு கிட்ட போனேன்.  " பக்கத்து வீட்டு பையனும் உங்கூட தானே படிக்கறான்.. அவன் பாஸ் பண்ணிட்டான்.. நீயும் இருக்கியே தண்டம்.. தண்டம்.. "

என்ன சொல்றாங்க.. நான் பாஸா.. ? எப்படி?

அட, ஆமா.. பதட்டத்துல என் நம்பருக்கு பதிலா மகேஷ் நம்பரை பேப்பர்ல தேடியிருக்கேன்.

பேப்பரை எடுத்து பார்த்ததுல, என் நம்பர் என்னைப் பார்த்து கண் அடிச்சுது.

அப்பா வீட்டுக்குள்ளேயிருந்து பயங்கர சந்தோஷத்துடன் வெளியே வந்து, முதுகைத் தட்டி விட்டு ஆபிஸுக்கு போனார். கண்ணாடி போடாத அப்பாவின் முகம் இப்ப அழகா இருந்தது.

மறுபடியும் மறுபடியும் பேப்பரை தரைல பரப்பி, என் நம்பரை பாத்துகிட்டே இருந்தேன்.

இப்ப நினைச்சு பாத்தா அந்த ரிசல்ட் டென்ஷன் இருக்கே, அதுவும் ஒருமாதிரி நல்லா தான் இருக்கு, இல்லை.!
 

உங்கள் கருத்து
Name:    Email Id:   
தமிழ்   English   (For type in tamil : அம்மா = ammaa, விகடன் = vikatan)
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவு நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும்)
விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் - வேண்டுகோளும்
krithika20 Days ago
நல்லாக இருந்தது. எனக்கும் கிட்டதட்ட இதே மாதிரி தான் ஆச்சு.. புட்டுகிச்சுனு நினைச்சு, பாஸ் பண்ணேன். இப்போ நினைச்சா சிரிப்பா இருக்கு.. 2 ல நல்ல மார்க் எடுத்து பாஸ் ஆயிட்டேன்.. பட்டாணி கலக்கல்.. எதாவது ப்ளாக் எழுதறீங்களா.. லிங்க் போடுங்கலேன்.. சுவாரஸ்யமான நடையில் எழுதரீங்க.. வாழ்த்துக்கள்.
Harini4 Months ago
Wow...Great...
rubandani5 Months ago
wow
Venkat11 Months ago
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பரே!

என்னுடைய பி.யு.சி ரிசல்ட் அனுபவம் ஞாபகத்துக்கு வருகிறது. பி.யு.சி என்றால் பெரும்பாலும் ஃபெய்ல் என்ற நம்பிக்கை இருந்த காலம். பெரும்பாலானவர்கள் English--ல் ஃபெய்ல் ஆகிவிடுவர்கள். ஒத்துக்கொள்கிறேன். பி.யு.சி ஆங்கிலத்தில் 40 100 வாங்கி பாஸ் செய்வது கொஞ்சம் (இல்லை இல்லை ரொம்ப) கஷ்டம்தான்.

நான் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவன். வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.யு.சி படித்தேன்.

அன்று ரிசல்ட் என்று சொன்னார்கள். எங்கள் கிராமத்தில் செய்தித்தாள் கிடைக்காது. பக்கத்தில் 6 கி.மீ தள்ளி உள்ள கிராமத்தில் சென்றுதான் செய்தித்தாள் வாங்கவேண்டும். அன்று காலையில் சீக்கிரம் எழுந்து 6 கி.மீ நடந்து சென்று ஒரு ரூபா கொடுத்து பேப்பர் வாங்க மனசு வராமல் வாங்கி பேப்பரை திறந்தால் பக்கம் பக்கமாக எண்கள் பயமுறுத்திக்கொண்டிருந்தன. எததனை முறை தேடியும் எங்கள் கல்லூரி ரிசல்ட் அதில் இல்லை. அப்பொழுதுதான் தெரிந்தது வட ஆற்காடு மாவட்ட ரிசல்ட் செங்கல்பட் பேப்பரில் வராது என்று. கடைக்காரர் என்னை ஏமாற்றிவிட்டால் என்று கோபம். பேப்பரை திருப்பி கொடுத்து என் ஒரு ரூபாயை திருப்பிக்கொடு என்று கேட்டால், அதற்கு அவர் .... (அதையெல்லாம் எழுத்தில் எழுத முடியாதுங்க). சரி, ஒரு ரூபா போனால் போகிறது என்று பேப்பரை அந்த கடையிலேயே வைத்துவிட்டு வந்து விட்டேன்.

எங்கள் கிராமத்துக்கு மீண்டும் 6 கி.மீ நடந்து வந்து சேர்ந்தேன். ஊரில் கேட்டார்கள் ரிசல்ட் என்ன ஆச்சி என்று. நான் எங்கள் கல்லூரி ரிசல்ட் இந்த பேப்பரில் வரலை என்று சொன்னதற்கு அவர்கள் பார்த்த பார்வை....

சரி, ரிசல்டை பார்த்தே ஆகவேண்டும். வட ஆற்காடு மாவட்ட பேப்பர் கிடைக்கும் டௌனுக்கு போய்வர குறைந்தது 8 ரூபாய் தேவைப்படும். அப்பாவிடம் கேட்டால் நிச்சயம் தரமாட்டார். ஏற்கெனவே என் பட்ஜெட்டில் 1 ரூபா காலி. துணிந்து அப்பாவிடம் கேட்டேன். அவர் சொன்னார், 'இப்ப ரிசல்ட் பாக்க ஒரு முறை அப்புறம் சர்டிஃபிகேட் வாங்க ஒரு முறை என்று இரண்டு முறை என்னால் காசு தர முடியாது. எப்ப சர்டிஃபிகேட் தர்றாங்களோ அப்பவே ரிசல்டையும் பாத்துக்கோ' என்று சொல்லிவிட்டார்.

டென்ஷன் கூடிக்கொண்டே வந்தது. ப்ரஷர் 1000, 2000 என்று எகிறி இருக்கும் (தெரியுங்க ப்ரஷர் 150 அளவில் தான் இருக்குமென்று. ஆனால் அப்ப 1000 கணக்கில் பறந்துக்கொண்டிருப்பது போல் ஒரு உணர்வு வேதனை).

சரி எப்படி ரிசல்ட் பார்ப்பது? அந்த நேரம் பார்த்து ஒரு நல்ல ஐடியா கூட தோன்றவில்லை. அடுத்த நாள் ஆந்திராவில் உள்ள ஒரு நகருக்கு ஒரு வேலையாக போகவேண்டிய அவசியம் வந்தது. அந்த நகரில் வட ஆற்காடு மாவட்ட பேப்பர் வர வாய்ப்புள்ளது என்று தெரியும். உடனே வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன். இரண்டு மணி நேர பயணம். வேலை விஷயம் என்பதால் பயணச்சீட்டுக்கு காசு பிரச்சனை இல்லை. அங்கு சென்று வேலையை முடித்துக்கொண்டு கடைக்கு சென்று 'நேற்றைய பேப்பர் வேண்டும் என்று கேட்டால்', என்னை ஏதோ ஒரு ஜந்துவை பார்ப்பது போல் பார்த்தார்கள். எந்த கடையிலும் முந்தைய நாள் பேப்பர் கிடைக்கவில்லை. ஒரு கடைக்காரர் மட்டும் அவரிடம் பேப்பர் வாங்கும் ஒரு சில வீடுகளைச் சொல்லி அங்கு போய் கேட்கச் சொன்னார். நானும் அம்மா, தாயே, என்று கேட்காத குறையாக வீடு வீடாக சென்று கேட்க ஆரம்பித்தேன். எங்கும் சரியான பதில் கிடைக்கவில்லை. ஒரு வீட்டில் ஒரு அம்மா மட்டும் 'என்ன தம்பி இப்படி வீடா வீடா பேப்பர் கேட்கிறே. என்ன விஷயம்' என்று கேட்டார். நான் விஷயத்தை சொன்னேன். உடனே சரி தம்பி நான் தறேன் என்று வீட்டுக்குள் சென்று பேப்பரை தேடிக்கொண்டு வந்தார். கோடாரிகளை ஆற்றில் தொலைத்த மரவெட்டிக்கு மூன்று கோடாரிகளையும் கொடுத்த தேவதை போல் எனக்குத் தெரிந்தார் அந்த அம்மா.

சரி விஷயத்துக்கு வருவோம். அப்போது முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு என்று பிரித்துதான் ரிசல்ட் வரும். நான் எப்படி எழுதினேன் என்று தெரியும். எனவே இரண்டாம் வகுப்பில் தேடினேன். அங்குதான் நிறைய எண்கள் இருந்தன. ஒவ்வொன்றாய் தேடினேன். என் நம்பர் இரண்டாம் வகுப்பில் இல்லை. அழுகையாக வந்து விட்டது. மூன்றாம் வகுப்பில் தேடினேன். அங்கும் என் நெம்பர் இல்லை. பெரும்பாலும் அன்று இறந்தே விட்டேன்.

ஒரு நப்பாசை. ஒருவேளை முதல் வகுப்பில் இருக்குமோ என்று. முதல் வகுப்பில் தேடினேன். என்ன ஆச்சரியம் என் நெம்பர் அங்கு இருந்தது. வானத்துக்கு வரை குதிக்க வேண்டும் போல் இருந்தது. இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் முதல் வகுப்பில் தேறி இருந்தவர்கள் எங்கள் கல்லூரியிலேய மொத்தம் 5 பேர்தான். அதில் நானும் ஒருவன். எப்படிப்பட்ட அனுபவம் தெரியுமா அது. Millions of dollars லாட்டரியில் அடிச்சாலும் அந்த சந்தோஷம் கிடைக்காது தெரியுமா?

( பிறகு கல்லூரியில் சென்று சர்டிஃபிகேட் வாங்க போகும்போதுதான் தெரிந்தது, நான எங்கள் கல்லூரியிலேயே மூன்றாவது மாணவனாக தேர்ச்சிப்பெற்ற விஷயம். ஆனால் ரிசல்ட் பார்த்த அன்று கிடைத்த சந்தோஷம்தான் அளப்பரியது.)

என் சந்தோஷத்தைப் பார்த்த அந்த அம்மாவும் சந்தோஷத்தில் மூழ்கி இருந்தது தெரிந்தது. அந்த அம்மாவிடம் எனக்கு அந்த பேப்பர் வேண்டுமென்று கேட்டேன். புதிய பேப்பர் ஒரு ரூபாய். பழைய பேப்பர் என்பதால் (தாராளமாக) 50 பைசா வரை கொடுத்து வாங்க தயாராகயிருந்தேன். அந்த அம்மாவிடம் எனக்கு இந்த பேப்பர் வேண்டுமென்று கேட்டேன். சரி எடுத்துக்கொள் என்றார்கள் காசு கொடுக்க கையை நீட்டினேன். 'வேண்டாம், பேப்பரை நீ எடுத்துக்கொள் என்றார்கள்'. பாரி வள்ளலை விட பெரிய வள்ளலாக என் முன் தெரிந்தார் அந்த அம்மா அன்று. அது மட்டுமல்ல. 'தம்பி ரொம்ப களைத்து போயிருக்கிறாய். இந்தா மோர் சாப்பிடு என்று ஒரு டம்ப்ளர் நிறைய மோர் கொடுத்தார். பிறகு அவரது கணவரிடம் என் ரிசல்ட் விஷயத்தை சொல்லி எனக்காக அவரும் சேர்ந்து சந்தோஷபாட்டார்.

நல்லார் ஒருவர் உளறேல் அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை என்று சும்மாவா சொன்னார்கள்.

பிறகு ஒரு வாரம் கழித்து கல்லூரி சென்று சர்டிஃபிகேட் வாங்கி வந்து ரேங்க் விஷயம் சொன்னபோது வீட்டில் மட்டுமல்ல எங்கள் கிராமத்திலும் சொம்ப சந்தோஷப்பட்டார்கள். அப்பாவும் ரொம்ப சந்தோஷப்பட்டார், ஒரு கவலை கலந்து. இந்த சந்தோஷமெல்லாம் தீருமுன் ஒரு பெரிய குண்டை என் தலையில் தூக்கிப் போட்டார். 'என்னால் முடிந்தவரை உன்னை படிக்கவைத்துவிட்டேன். இனிமேல் விவசாய வேலையோ அல்லது எங்காவது வேலைக்கு போவதோ பார். இனிமேல் கல்லூரிக்கு போய் படிக்கிறேன் என்றேல்லாம் கேட்காதே.' அதிர்ச்சியின் உச்சத்துக்கே போய் விட்டேன்.

...

Let us fast forward.

இப்போது Software துறையில் வெளிநாட்டில் வாழ்கிறேன். எங்கள் பிள்ளைகள் x-box வாங்கிக்கொடு. It is just $300 என்பார்கள். நான் என் பி.யு.சி அனுபவத்தை சொல்ல ஆரம்பிக்குமுன் 'you told us this million times. let us go to game store' என்பார்கள். ஒரு ரூபாக்கும் 300 டாலர்களுக்கும் உள்ள வித்தியாசம் அவர்களுக்கு எப்படி தெரியும்?

மலரும் நினைவுகளை கொண்டுவந்த அன்பர் பட்டாணியே நன்றிகள் கோடி!
mani6 Months ago
மலரும் நினைவுகளை கொண்டுவந்த அன்பர் பட்டாணியே நன்றிகள் கோடி.............
riswan7 Months ago
A massive Wow.. Hilarious
Arun7 Months ago
Super...Pattani
Ezhirko7 Months ago
H I L A R I O U S
s lakshmanan7 Months ago
I had the same experience when I had my P U C exam results. I had good marks in my s s l c. So I was confident that i will pass in the I Class but (unfortunately) I didn't study well. When I saw my result in I Class, it was not there. So, I lost hope and look in III Class, there also, to my shock it was not there. Later, to my surprise, I saw in my number in II Class, Thank God, I am relieved. Later, I finished my B. Com in I Class and also completed my Post-graduate.
வெங்கட்7 Months ago
@renuka

>>> :) my father also has similar story..I ve heard that millions of times..but I still enjoy the happiness in his face when he tells the story again :)

Yes, every generation had a similar story to pass on to their kids. My dad used to tell me the kind of struggle he went through too. "I had to write in sand with my fingers, there was no proper school, etc...". That was during pre-independent India.

Once my son was saying "I will tell my kids what kind of struggle I had to go through, I did not even my own car when I was in high school ..." :)

It is true, my dad thought I had lot compared to him; that is school, teachers, government programs, etc which he did not have.

I used to think my kids had lots more than I did; such as going to school by car, living in a foreign country, Internet, their own cell phones etc...

He son says he will tell his kids how difficult it is for him not to have his own car...

That is the way life is and it will always get better and every generation will say they had tough time.

>>You all had a wonderful, stressless schooling..not like us..

Renuka, I agree the kids nowadays go through lots of (unwanted) stress. But keep in mind those days we also went through different kinds of stress. எப்ப வாத்தியார் மூங்கில் கொம்பால் ரத்தம் வரும் வரை அடித்துவிடுவாரோ என்கிற பயத்திலேயே வகுப்பில் உட்கார்ந்திருந்தவர்கள் நிறைய பேர். உடுத்த (நல்ல) துணியில்லாமலும், சாப்பிடாமலும், புத்தகங்கள் இல்லாமலும் வகுப்புக்கு வந்தவர்கள் நிறைய பேர்.

The other side is always green சகோதரி :)


abdoul8 Months ago
வயத்துல பட்டாம்பூச்சி பறக்குது.. பேப்பர்ல டுடோரியல் காலேஜ் விளம்பரம் எல்லாம் போட்டிருக்காங்க.. ஒரே அபசகுனமா இருக்குது..


super matter
Emmanuel8 Months ago

It was really awesome man.
you took me back to 1989, it was during that time, my SSLC results were published. unfortunatly, I was attempted, huh! but coming out of that shame, tension and pressure was...like, 'oh my God!'
Udhaya8 Months ago
Super. Pakkaaa...!
Rameshkumar9 Months ago
10 ஆம் வகுப்பு,12-ஆம் வகுப்பு ரிசல்ட் வரும் தினத்தில் பேரூந்து நிலையத்தில் கால் கடுக்க ரிசல்ட் பேப்பர் வரும் பஸ் நோக்கி நின்று இரட்டிப்பு விலை கொடுத்து இருதயம் தட தடக்க பிரித்து பார்த்து நமது தேர்வு எண் கண்டு அப்பாடா ஒரு வழியா பாஸாயிட்டம்லெ- நு சாலமன் பாப்பையா மாதிரி கெத்தா அடுத்தவங்களை பார்த்த பார்வை இன்றும் நினைக்க நினைக்க இனிமை.
kani9 Months ago
உடைஞ்ச துண்டுகளை ஒரு பேப்பர்ல எடுத்து போட்டுகிட்டு, " ரிசல்ட் வரட்டும்.."ன்னு சொல்லிட்டு போயிட்டார். கண்ணாடி உடையறதுக்குக்கும், என் ரிசல்ட்டுக்கும் என்ன சம்மந்தம்.. ? கண்ணாடியை உடைச்சதுக்கு திட்டித் தொலைக்க வேண்டியது தானே. ரிசல்ட் புட்டுகிச்சுன்னா, இதுக்கு சேத்து வெச்சு.. ஐயோ..!..really super.......
Aravindan10 Months ago
"திடீர்னு மகேஷ் வீட்லேந்து பயங்கரமா சத்தம் கேட்டது.. மகேஷை திட்டிகிட்டிருந்தாங்க.. ஆஹா.. அவனுக்கும் புட்டுகிச்சா..?! நன்றி நண்பா..!"

அருமை!! அருமை!!
Shahul Abu10 Months ago
என்னது "வெங்கி" பாஸாயிட்டானான்னு கேட்டாங்களா உங்க ஏரியாவுல?
Allwarappan10 Months ago
வெங்கட் அருமை நண்பா...
Allwarappan10 Months ago
தம்பி நீங்க இன்னும் 25 ரூவா தரல.
Jothi10 Months ago
வெங்கட், ஒரே பக்கத்தில் 2 கதைகள் படித்த திருப்தி.....இரண்டுமே மிகவும் நன்றாக இருக்கிறது.....
Baskaran10 Months ago
@Venkat, your story is equally awesome.. Last paragraph was really true. Nowadays, kids don't get such opportunities to realise the value of the money even with the lower income people as they spend anything for their kids. Thanks for sharing it to us.
Baskaran10 Months ago
Awesome... It remembered my good olden and golden days.
balu10 Months ago
அருமையான கதை
நான் தான்...11 Months ago
அருமையாக இருக்கிறது எழுத்து நடை...
DR11 Months ago
I remember the same tension before seeing my marks in the mark sheet. and also waiting outside to know my friends marks with the hope no one is above me :D
 Displaying 1 - 25 of 45