- சைபர்சிம்மன்

வலைப்பதிவு மூலம் பிரபலமானவர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றனர். இந்த பட்டியலில் 9 வயது பள்ளி மாணவி ஒருவரும் சேர்ந்திருக்கிறார்.
ஸ்காட்லாந்தை சேர்ந்த மார்த்தா பைனே என்னும் அந்த 9 வயது மாணவியின் வலைப்பதிவு பற்றி தான் இணைய உலகில் பேச்சாக இருக்கிறது. பள்ளியின் மதிய உணவை புகைப்படத்தோடு பகிர்ந்து கொள்ளும் மார்த்தாவின் வலைப்பதிவு மிக குறைந்த காலத்திலேயே உலகம் முழுவதும் பிரபலமாகியது. அதற்கு பள்ளி நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்க முற்பட்ட போது, அதற்கு எதிராக நட்சத்திரங்கள், இணைய பிரமுகர்கள் மற்றும் இணையவாசிகளை போர்கொடி தூக்க, பள்ளியின் அந்த முடிவையே மாற்ற வைத்தது.
மார்த்தா வலைப்பதிவை தொடர அனுமதிக்க வேண்டும் என இணைய உலகமே பொங்கி எழுந்தது தான் அந்தச் சிறுமியை இணைய நட்சத்திரமாக உருவாக்கியுள்ளது.
இது எல்லாமே எந்தவித திட்டமிடலும் இல்லாமல் மார்த்தாவின் வீட்டு பாடத்தில் இருந்து ஆரம்பமானது.
ஸ்காட்லாந்தின் மேற்கு பகுதியில் உள்ள லாகில்ப்ஹெட் நகர பள்ளியில் பயிலும் மார்த்தா, பள்ளி பாடத்திற்காக கட்டுரை எழுதி சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. தந்தை டேவிட் பைனேவின் உதவியோடு மார்த்தா கட்டுரைகளை வலைப்பதிவாக எழுதத் துவங்கினார்.
இப்படி அவர் துவக்கியது தான் 'நெவர் செகன்ட்ஸ்' வலைப்பதிவு.
பள்ளி கேன்டினில் பரிமாறப்படும் மதிய உணவு பற்றிய கருத்துக்களை புகைப்படங்களோடு மார்த்தா பகிர்ந்துகொள்ளத் துவங்கினார். இதற்காக வகுப்பு ஆசிரியரின் அனுமதியையும் பெற்று, தினமும் தனக்கு கிடைக்கும் மதிய உணவைப் பற்றி எழுதி வந்தார்.
'ஒரு தொடக்க பள்ளி மாணவியின் தினசரி மதிய உணவின் துளிகள்' என்னும் அறிமுகத்தின் கீழ் வெளியான அந்த பதிவுகள் எளிமையானதாக, ஆனால் சுவாரஸ்யமாக அமைந்திருந்தன.
பள்ளியில் ஒவ்வொரு நாளும் சாப்பிட்ட மதிய உணவின் புகைப்படத்தை வெளியிட்டு அந்த உணவின் தன்மையையும் அழகாக வர்ணித்து வந்தார். ஒவ்வொரு பதிவும் ஒரு அட்டவணை போல நேர்த்தியாக இருந்தது. முதலில் உணவு பற்றிய வர்ணனையும் அதன் கீழே வரிசையாக உணவுக்கான மதிப்பெண் (ஃபுட்டோ மீட்டர்), அதை சாப்பிட எத்தனை முறை தேவைபட்டது (மவுத்ஃபுல்) அதன் ஆரோக்கியத்தன்மை (ஹெல்த் ரேட்டிங்) மற்றும் விலை ஆகியவற்றை குறிப்பிட்டு வந்தார். இவற்றோடு உணவில் தலைமுடி ஏதேனும் இருந்ததா என்றும் குறிப்பிட்டிருந்தார்.
முதல் பதிவில் மதியம் தான் உண்ட பிட்சா உணவையும் அதனோடு கொடுக்கப்பட்ட உணவு வகையையும் வர்ணித்து விட்டு, " வளர்ந்து வரும் பெண்ணுக்கு இது போதுமா? " என கேட்டிருந்தார். முடிவில் முத்தாய்ப்பாக " இந்த பதிவினால் ஏற்படக்கூடிய நன்மை என்னவென்றால், வீட்டிற்கு வந்ததுமே நான் ஏன் பசியால் துடிக்கிறேன் என அப்பாவால் புரிந்து கொள்ள முடியும்" என எழுதியிருந்தார்.
குழந்தைகளிடம் எப்போதுமே ஒரு அப்பாவித்தனம் இருக்கும் அல்லவா?அதில் நேர்மையும் கலந்திருக்கும்.மார்த்தாவின் பதிவுகளும் இதே போல குழந்தையின் அப்பாவித்தனத்தோடு உணவின் தன்மையை விவரிக்கும் அதே நேரத்தில், அதனை விமர்சிக்கும் வகையிலும் அமைந்திருந்தது. மார்த்தா நேரடியாக உணவை குறை சொல்லாவிட்டாலும் அவர் எழுதிய கருத்துக்கள் குறைகளை புரிய வைத்தன.

பள்ளி மாணவர்கள் சாப்பிடும் மதிய உணவு எப்படி சுவையிலும் அளவிலும் ஊட்டசத்திலும் குறைபாடு கொண்டவையாக இருக்கின்றன என உணர்த்திய இந்த பதிவுகள் பலரது கவனத்தை ஈர்த்தன. பெற்றோர்கள் அதனை விரும்பிப் படித்தனர். விளைவு, முதல் வாரத்திலேயே வலைப்பதிவின் வாசகர் எண்ணிக்கை ஆயிரங்களைக் கடந்தது. ஊட்டசத்து நிபுணர்களும் இந்த பதிவுகளை விரும்பி படித்ததோடு அதில் மார்த்தா பகிர்ந்து கொண்ட விஷயங்களை மனதார ஆதரித்தனர்.
ஜேமி என்னும் புகழ்பெற்ற சமையல் கலைஞர் மார்த்தாவின் வலைப்பதிவுக்கு பாராட்டு தெரிவித்து ஊக்குவித்தார்.
அது மட்டுமல்ல, பெற்றோர்கள் சிலர் தங்கள் பங்கிற்கு மதிய உணவின் புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டனர். மார்த்தா அவற்றையும் ஆர்வத்தோடு வெளியிட்டார்.
இதனிடையே மார்த்தா வலைப்பதிவிற்கு வாசகர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்திருந்தது. ஒரு பள்ளி மாணவியின் வலைப்பதிவு இப்படி வரவேற்பை பெற்றிருப்பது பிபிசி தொலைக்காட்சியின் கவனத்தை ஈர்த்து, மார்த்தாவின் சிறிய பேட்டியும் அதில் ஒளிபரப்பானது.
மாணவர்களின் மதிய உணவின் தன்மை மற்றும் தரம் பற்றிய விவாதத்தை ஏற்படுத்தும் இந்த வலைப்பதிவினை பல்வேறு தரப்பினரும் வரவேற்க, மார்த்தாவோ தன் மீதான கவனத்தை ரசித்தபடி தொடர்ந்து மதிய உணவு பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வந்தார். மார்த்தாவின் வர்ணனையில் இவற்றை பார்க்க முடிந்தது.


இதனிடையே இரண்டு விஷயங்கள் நடந்தன. ஒன்று மார்த்தாவின் கேன்டினில் வழங்கப்பட்ட உணவின் தரமும் அளவும் மேம்பட்டது. மற்றொன்று, மார்த்தா தனது வலைப்பதிவுக்கு கிடைத்த பேராதரவால் வியந்து போய், அதனை நல்ல விதமாக பயன்படுத்தி கொள்ளும் நோக்கத்தில் ஆப்பிரிக்கா நாடான மளாவியில் உள்ள ஒரு பள்ளிக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்திற்கு நிதி திரட்டத் துவங்கினார்.
இந்த நிலையில் தான், சற்றும் எதிர்பாராத விதமாக பள்ளியை நிர்வகிக்கும் நகரசபை பள்ளியின் மதிய உணவை புகைப்படம் எடுக்கக் கூடாது என தடை விதித்தது.
இந்த வலைப்பதிவை பற்றி நாளிதழ் ஒன்று வெளியிட்ட கட்டுரை, பள்ளியின் கேன்டின் வசதியை குறை கூறும் வகையில் அமைந்திருந்ததை காரணம் காட்டி நகரசபை அதிகாரிகள் இனி மார்த்தா மதிய உணவை புகைப்படம் எடுக்கக் கூடாது என தெரிவித்திருந்தனர்.
சிறுமி மார்த்தா இந்த கட்டுப்பாடு பற்றியும் தனது வலைப்பதிவில் குறிப்பிட்டு, மதிய உணவை இனி புகைப்படம் எடுக்க முடியாது என வருத்தத்தோடு கூறியிருந்தார்.
மார்த்தாவின் தந்தையும், 2 லட்சத்துக்கு மேல் பார்வைகளை பெற்ற இந்த வலைப்பதிவு முடக்கப்படுவது குறித்து வேதனை தெரிவித்திருந்தார்.

ஆனால், அதன் பிறகு தான் அவர் சற்றும் எதிர்பாராதது நடந்தது. மார்த்தாவுக்கு இணைய உலகில் ஆதரவு குவிந்தது. மார்த்தாவின் வலைப்பதிவை படித்து வந்தவர்கள் இந்த தடைக்கு எதிராக குரல் கொடுத்தனர். பேஸ்புக் மூலமும் இந்த நடவடிகையை கண்டித்து கருத்து தெரிவித்தனர்.
டிவிட்டரில் மார்த்தாவின் வலைப்பதிவை அடையாளக் குறியாக (# - Hash Tag ) கொண்ட பதிவுகள் குவிந்தன.
நட்சத்திர சமையல் கலைஞரான ஜேமி ஆலிவர் குறும்பதிவு ஒன்றில் மார்த்தாவுக்கு ஆதரவு தெரிவித்ததோடு தனது லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களையும் நகரசபைக்கு கண்டனம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
பொதுவாகவே இணைய உலகில் தணிக்கை செய்யப்படுவதை யாரும் பொறுத்துக் கொள்வதில்லை.அப்படி இருக்க, 9 வயது பள்ளி மாணவியின் வலைப்பதிவுக்கு தடை போட்டால் சும்மா இருந்து விடுவார்களா? 'ஒரு சிறுமியின் விமர்சன குரலை மௌனமாக்கும் செயல் இது' என்று கண்டனம் தெரிவித்தனர். மார்த்தாவின் வலைப்பதிவை திரும்ப கொடுங்கள் என்றும் குரல் கொடுத்தனர்.
இணைய உலகில் மார்த்தாவுக்கு ஆதரவு குவிந்து வந்த நிலையில், நகரசபை நிர்வாகம் வேறு வழியில்லாமல் தனது முடிவை மாற்றிக்கொண்டது.
மார்த்தா வலைப்பதிவின் மீதான தடை நீக்கப்பட்ட மகிழ்ச்சியையும் பலர் டிவிட்டரில் உற்சாகமாக பகிர்ந்து கொண்டனர்.
இந்த செய்தியை வெளியிட்ட நாளிதழ் ஒன்று மார்த்தாவை 'உணவுக்காக குரல் கொடுத்த சாம்பியன்' என்று வர்ணித்திருந்தது.
இதனிடயே மார்த்தா மளாவி பள்ளி நன்கொடைக்காக 64 ஆயிரம் டாலர்களையும் திரட்டியிருந்தார்.
இன்று மாணவி மார்த்தாவை எல்லோரும் வியப்புடனும் பெருமையுடனும் பார்க்கின்றனர். இணையத்தில் மார்த்தாவை பின் தொடரும் வாசகர்களின் எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டி, நிமிடத்துக்கு நிமிடம் கூடிக் கொண்டே போகிறது.
ஒரு மதிய உணவு பதிவு இப்படி ஒரு பெரிய விளைவை ஏற்படுத்தும் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்!
மார்த்தாவின் வலைப்பதிவு முகவரி : http://neverseconds.blogspot.co.uk/