- மா.நந்தினி , படங்கள் : செ.சிவபாலன்
திருமணம், காதணிவிழா, மஞ்சள்நீர் சடங்கு, என்று எல்லா விதமான சுபநிகழ்ச்சிகளையும் ஆடி மாதத்தில் செய்தால் சரிப்பட்டு வராது என்பது நம்மில் பலரால் பலகாலமாக பின்பற்றப்படும் நம்பிக்கை. அதே சமயம் கோயில், தெய்வம் சார்ந்த அனைத்து விசேஷங்களுக்கும் ஆடி மாதம் தான் கொண்டாட்ட மாதமாக இருக்கிறது. குறிப்பாக அம்மன் கோயில்களில் தீக்குழி இறங்குவது, பூச்சொரிதல், காவடி எடுப்பது, கூழ் ஊற்றுவது, கஞ்சி ஊற்றுவது, செடல் உற்சவம் என ஆடி மாத விசேஷங்களே தனி விழா தான்.

ஒருபுறம் ஸ்ரீ துர்க்கை அம்மன், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ நாகாத்தம்மன், ஸ்ரீ வேம்புலியம்மன், ஸ்ரீ பச்சையம்மன் என அம்மன் கோயில் திருவிழாக்கள் இருக்கும் ஆடி மாதத்தின் இன்னொரு முக்கிய சிறப்பு ஆடி மாதம் 18ம் நாள், ஆடிப்பெருக்கு நாள்.
முன்னாட்களில் கிராமப்புற மக்கள், விவசாயம் செய்யும் மக்கள் தங்களுக்கு ஏற்படும் உடல் உபாதை நீங்க வழிபாடு செய்தது தான் அம்மன் வழிப்பாடு. ஊர் வளம் பெறவேண்டி நதிகளை போற்றுவதுமாக தான் இன்றும் தொடர்கிறது.
முக்கியமாக, சித்திரையில் அறுவடை முடிந்து வைகாசி-ஆனி மாதம் வரை நெல்லோ, தானியங்களோ சேமிப்பில் வைத்திருக்கும் ஏழை மக்கள், ஆடியில் அது தீர்ந்து உணவுக்கு தடுமாறுவார்கள். மழை இன்றி பஞ்சத்தில் இருக்கும் அவர்கள் ஆடி மாதத்தில் விதைவிதைத்து, விளைச்சல் அமோகமாக இருக்க வேண்டி விளைச்சலுக்கு முக்கிய காரணமான தண்ணீரை போற்றியும், விளைச்சலுக்கு ஏற்ற மாரி மழை பொழிய வேண்டும் என்பதற்காகவும் வழிப்படுகிற விழா ஆடிப் பெருக்கு.

ஆடிப் பெருக்கு நன்னாளில், நதிப் பெண்ணான காவிரியை வணங்கினால் விவசாயம் செழிப்பது போல், கன்னிப்பெண்கள் இந்த நாளில் காவிரி நதிக்கரையில் வழிப்பட்டால் மனசுக்கு ஏற்ற மன்னவர் வாய்ப்பர், சுமங்கலிகள் வழிபட்டால் வம்ச விருத்தி, கணவனின் ஆயுள் கூடும் என்பதும் ஐதீகம்.
தமிழகத்தில் காவிரி நதி ஓடுகிற ஊர்களில் ஆடிப் பெருக்கு வைபவம் நடக்கிறது. காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சேலை, திருமாங்கல்யம், பழங்கள், கருமணி, சீர்வரிசை பொருட்கள், காப்பரிசி ஆகியவற்றை வைத்து காவிரியை வணங்கி, படைத்த மஞ்சள் சரடை பெரியவர்களிடம் கொடுத்து, பெண்கள் கழுத்திலும் ஆண்கள் வலதுகையிலும் கட்டிக்கொள்வார்கள்.
இதனால் வாழ்வில் தொட்டதெல்லாம் வளமாக அமையும் என்றும், குறிப்பாக புதுமணத் தம்பதியர்கள் காவிரிக் கரையில் குடும்பத்தோடு வந்து, திருமணத்தின் போது அணிவித்த மாலையை ஆற்றில் விட்டுவிட்டு, தாலிபிரித்து கட்டும் சடங்கு காவிரிக் கரையில் செய்வதால், காவிரிக் கரையில் தண்ணீரில் புரண்டோடுவதுப் போல் நம் வாழ்விலும் இன்பம் பெருகுமாம்.

ஆனால் இந்த வருடம் காவிரிக் கரை வறண்ட கரையாகவே காட்சியளிப்பதால், விவசாயிகள் மட்டுமல்லாமல் ஆடிப் பெருக்கு விழாவை காவிரி நதிக்கரையில் கொண்டாடி, நதிதேவதையை வணங்கலாம் என்ற ஆர்வத்தில் இருந்த மக்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. சிலர் வீட்டிலேயே கிணறு, பம்பு என காவிரியை மனதில் வைத்தே வழிப்பட்டனர். அதேசமயம் கும்பகோணம் காவிரிக் கரையில் ஆடிப் பெருக்கு முதல் நாள் வரை புதுத் தண்ணீர் வரும் என காத்திருந்த மக்கள் வேறு வழியின்றி, கும்பகோணம் மகாமக குளத்தில் தங்கள் 'ஆடிப் பெருக்கு' நாளை 'ஆடித்தேக்க'மாக குளத்தில் கொண்டாடினர். புதுமணத் தம்பதிகள் பலர் இங்கு தாலி பிரித்து கட்டி கொண்டாடினர். சிலர் காவிரிக் கரையில் தான் கொண்டாடுவோம் என அடம் பிடித்து காவிரிக் கரையில் ஊற்று வெட்டி, பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறு கட்டி மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
தங்களது புதியசிந்தனை, முயற்சி மேலோங்க வேண்டி, புதிய காவிரி நீரில் நீராடி கொண்டாட வேண்டிய ஆடி 18ம் நாள், 'ஆடிப் பெருக்கு' நாளை மகாமக தீர்த்தகுளம், ஊற்று வெட்டி கொண்டாடி செல்லும் மக்கள் போக, ஓரிருவர் "வாட்டர் பாக்கெட்டில் 'ரெடிமேட் காவிரித் தண்ணீர் எங்கேயும் கிடைக்குமா?" என விசாரித்துக் கொண்டிருந்தனர்.

'ரெடிமேட் காவிரித் தண்ணீர் பாக்கெட்'ங்கறது இப்ப கேட்க புதுசா இருந்தாலும், போற போக்கை பாத்தா வரப்போற வருஷங்கள்ல காவிரித் தண்ணிய பாக்கெட்ல வித்தாலும் ஆச்சர்யப்படறதுக்கில்லை..! எவ்வளவோ பாத்துட்டோம்.. இதை பாக்க மாட்டோமா" என்று வருத்தத்துடன் சொல்லியவாரே நடந்து போனார் ஒரு பெரியவர்.
ஆடிப் பெருக்கு : ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்புக்கு இங்கே க்ளிக் செய்க