- பகவத் அருண்
சமீபத்தில் 'நண்பன்' படம் பார்க்கப் போயிருந்தேன். மனதில் புதைந்துப்போன பல கேள்விகளையும் கோபங்களையும் அது தட்டி எழுப்பி விட்டது.
எனது 3ம் வகுப்பில் குப்பை தாள்களை வைத்து வகுப்பறையில் பல கலையம்சங்களை படைத்த தோழி அனிதா.. வீட்டிலும் வகுப்பிலும் மக்கு மாணவியே. 9-ம் வகுப்பில் சிறு காந்தங்களை வைத்து பொம்மை கார்களை அறிவியல் வகுப்புகளில் ரகசியமாக ஓட வைத்த நண்பன் வினோத் 10ம் வகுப்பில் அறிவியலில் தோல்வி..

மொக்கை போடும் தமிழ் வகுப்பில் நாங்கள் போடும் வாத்தியார் நையாண்டி நாடகங்கள் தான் எத்தனை அழகான இலக்கியம், அதிகார எள்ளல் இலக்கியம், புறக்கணிக்கப்பட்ட இலக்கியம்... பூட்டி விட்ட வகுப்பறையில் சிக்கி விட்ட வாத்தியாரின் பையை நுட்பத்தோடு எடுத்துக் கொடுத்த அந்த கடைசி பெஞ்ச் 'மக்கு' மாணவனுக்கு கிடைத்த பாராட்டு ' நீ இதற்குத்தான் லாயக்கு ! '
12ம் வகுப்பு வேதியியல் லேப்பில், பாடத்தில் அல்லாத புது வேதிவினைப் பயனை கொண்டு வந்த மாணவனுக்கு டியூபை உடைத்தற்கு அடுத்த நாள் விதிக்கப்பட்டது 50 ரூபாய் அபராதம். 11ஆம் வகுப்பில் கணிதத்தில் தோல்வியடைந்ததற்காக முட்டி போட வைக்கப்பட்ட சுரேஷ் அந்த 20 நிமிடத்தில் மண்ணில் வரைந்தது எப்பேற்பட்ட கலை.. வலியும் புறக்கணிப்பும் வெளிப்பட்ட அற்புதமான ஓவியம் அது. அதற்கு அவனுக்கு கிடைத்தது இன்னும் 20 நிமிட முட்டி தான்.
கல்லூரியில் உயிர் வேதியியல் தேர்வில் மரபணு சம்பந்தப்பட்ட ஒரு கேள்விக்கு மட்டுமே நான் இரண்டரை மணி நேரமும் என்னையறியாமல் விடையை தாண்டி பல புதிய புதிய சாத்தியங்களை வரையறுத்ததற்காக எனக்கு கிடைத்தது 100க்கு 12 மதிப்பெண்ணும் துறையிலேயே குறைந்த மதிப்பெண் என்ற பட்டமும். ஆனால், நிச்சயம் என் வாழ்விலேயே ரசித்து அனுபவித்து எழுதிய ஒரே தேர்வு அதுதான். நிச்சயமாக அதில் ஏதோ ஒன்று புதிதாக கண்டறியப்பட்டிருந்தது.
இப்படி எத்தனை விஞ்ஞானிகளை, கலைஞர்களை தொழில்நுட்ப வல்லுனர்களை மக்கு மக்கு என பட்டம் கட்டி , காலம் முழுக்க தலையாட்டும் ஆட்டு மந்தைகளை ஊக்குவித்து, ஜெயித்தவன் புத்திசாலி என்று கூறிக்கொள்ளுங்கள்.. நாங்கள் விமர்சிக்கவில்லை..
ஆனால் ஒரேயொரு கேள்வி.. உங்களால் மக்கு பட்டம் பெற்றவன் நாளை விஞ்ஞானியாகவோ கலைஞனாகவோ ஆகும்பொழுது மக்கு பட்டம் கட்டிய நீங்கள் தானே மக்கு?
ஐன்ஸ்டீன், எடிசன் என வரலாறும் இதனை நிரூபித்தே வந்திருக்கிறது. தூக்கி இடுப்பில் வைத்து கொஞ்சுங்கள் உங்கள் மந்தை கூட்ட செல்லப்பிள்ளைகளை.. நாங்கள் பெருமையோடு இருக்கிறோம் சுயம் உள்ள மக்குகளாகவே..!