விசாரணைக்குப் பின் கைதானவன் : 'ஆலிவ்’ மரத்துப் பறவை
Posted Date : 22:04 (05/04/2012)Last updated : 15:04 (06/04/2012)

 - ந. வினோத்குமார்

 

(  " உண்மையில் பிரியங்களை வெளிப்படுத்துவதற்குத்தான் பிறந்தநாள் இல்லையா" என்று கேட்டேன் அவனிடம். ஆமோதித்தான்.

"அதே சமயம் பிரிவுகளை மேலும் ரணமாக்குவதும் அவைதான்" என்றேன். அதற்கும் தலையசைத்தான்.

புரியாமல் அவனைப் பார்த்தேன். என்னைப் புரிந்துகொண்டான்.

"முரண்களால் பின்னப்பட்டதுதான் மனித வாழ்வு" என்றான். "பின்னல்களுக்குள் சிக்குண்டு சோர்வடையும் தருணத்தில் இளமை போய்விடுகிறது. முதுமையில் ஓய்வு அல்ல... சோர்வு" என்றேன். "இப்படி வாருங்கள்... இந்த மரத்தின் நிழலில் அமரலாம்" என்று அழைத்துச் சென்றான்.

"இந்த மரத்தின் பின்னணியில் ஒரு காதல் கதை இருக்கிறது. அதைச் சொல்கிறேன். கேட்டு இளைப்பாறுங்கள்" என்றான்.

அந்த மரத்தில் ஆர்டின் வடிவம் வரையப்பட்டு அதற்குள் ஒரு ஆண், பெண் பெயர்கள் செதுக்கப்பட்டிருந்தது. சொல்ல ஆரம்பித்தான். இது அவனின் ஏழாவது கைது. )

`His beauty shall be as the olive tree'
                  - Hosea 14:6


மனம் திரும்பி இருந்தேன். காதல் சாம்ராஜ்யம் எனக்கு உரியதாகப்பட்டது, அவளைப் பார்த்த பொழுது!

இளநிலை கல்லூரிப் படிப்பு முடிந்து ஒரு வருடம் வீட்டில் இருந்தேன். பி.எஸ்.ஆர். சன்ஸ் துணிக்கடையில் டேட்டா என்ட்ரி வேலை பார்த்ததில் மூன்று மாதங்கள் ஓடின. அதன் பிறகு 'சேரன் டைம்ஸ்' ஆங்கில உள்ளூர் பத்திரிகையில் ஸ்டாஃப் ரிப்போர்ட்டர் ப்ளஸ் விளம்பரங்கள் பிடிக்கிற ஏஜெண்ட் என இரண்டு மாதங்கள் ஓடின. மீண்டும், வீட்டில் அயன் ரான்ட் உடனும், ரஷ்ய மக்கள் பதிப்பு புத்தகங்களோடும் இரண்டு மாதங்கள் சென்றன. அதற்குப் பிறகான மாதங்களில் பெங்களூரூவில் எலக்ட்ரானிக் சிட்டிக்கும் சிவாஜி நகருக்கும் பஸ்ஸில் பயணங்கள் செய்து எம்.பி.ஏ. மேட் தேர்வுக்கு என்னை தயார் செய்துகொண்டிருந்தேன்.

மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்த சொந்த அண்ணனின் வாடகை அறையில் தங்கி, 'முங்காரு மலே’ கணேஷின் காமெடி காட்சிகள் பார்த்துச் சென்ற மினி பஸ் பயணம், பொம்மனஹள்ளி நிறுத்தத்தின் பெட்டிக் கடைகளில் 'கட்டில் கதைகளும்’, 'பருவகாலமும்’ வாங்கிக் கிறங்கி, சிவாஜி நகர் 'மேட்’ கோச்சிங் சென்டருக்குப் படிக்க வந்த 'ஒம்பத்து கண்டிக நா மெக்டொனால்ட்ஸ் ஹோக பேக்கு’ கன்னடிகா பைங்கிளிகளை நோட்டம்விட்டு, இடை இடையே கொஞ்சம் படித்து... என முழுக்க முழுக்க அண்ணன் தரும் பாக்கெட் மணியிலேயே ஆட்டையப் போட்டு ஒருவாராக 'மேட்’ தேர்வில் தேறினேன்.

நான் எடுத்திருந்த மார்க்கிற்கு மூக்கனாம்பட்டியில் புதிதாகத் திறந்த திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூர வழிக் கல்வி முறையில் கூட எனக்கு இடம் கிடைத்திருக்காது. எப்படியோ, என் அண்ணனின் செல்வாக்கால் கோவையில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் அப்ளிகேஷன் வாங்கிப் போட்டுவிட்டேன். ஏதோ கொஞ்சம் வாசிப்பு... நிதானமாகப் பேசினாலும், தெளிவாகப் பேசக் கூடிய அளவில் நான் கற்றுவைத்திருந்த ஆங்கிலம்... ஆகியவற்றின் உதவியோடு குரூப் டிஸ்கஷன், இன்டர்வியூ எல்லாம் தேறினேன். அவர்கள் நிர்ணயித்திருந்த 100 மார்க்கிற்கு நான் பெற்றது 83! 'ங்கொய்யால்ல.... காலர தூக்கி விட்டுக்கோ...!’

வங்கிக் கடன் எல்லாம் கிடைத்து ஒரு வழியாக முதல் நாள் வகுப்பிற்குள் நுழைந்தேன். ஆக்ஸ்ஃபோர்டு யூனிவர்ஸிட்டியிலேயே உட்கார்ந்துவிட்டதான ஒரு நினைப்பு தோன்றியது. ஆயினும் 'ஸீ... டுடேஸ் மேனேஜ்மென்ட் எஜுகேஷன் பிகம்ஸ் வெரி வெரி இம்பார்டன்ட் ஃபார் குளோபல் எக்ஸ்போஷர்’, 'வாட் யூ திங்க் அபௌட் பிலிப் கோட்லர்ஸ் மார்க்கெட்டிங் ஸ்ட்ராடஜி..’ என வடநாட்டு இந்தி வாலாக்களின் 'எக்ஸ்டெம்போர்’கள்... 'எடோ... நம்மிளு ஃபைனல் இயர்ர் ப்ராஜெக்ட் மஸ்ட்ட் பீ டன் இன் ப்ராப்ப்பர் வேய்ய்ய்...’ என சேட்டன், சேச்சிகளின் டீ ஆற்றல்கள், 'வே... காலைல ஹாஸ்டல் கேசரி சூப்பர்லே...’ என மண்ணின் மைந்தர்களின் பிரதாபங்கள்... இவைகளுக்கு நடுவே நான் 'யா... ஸீ... யெஸ்... ஹா... ஹா.... ஈஸ் இட்... ஓ.கே. ஆமாங்க...’ என்று பம்மிக் கொண்டிருந்தேன்.

யார், என்ன, எப்படி என்று தெரியாமல் முதல் நாள் வகுப்பு கலகலத்தது. அடுத்த நாள் புன்னகைகள். அதற்கும் அடுத்த நாள் முதல் வகுப்பு 'ரிசர்ச் மெத்தடாலஜி’. தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு விட்டு, வகுப்பில் இருக்கும் ஒவ்வொருவரையும் முன்னால் வந்து தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளச் சொல்லிவிட்டு, ஏதேனும் ஒரு தலைப்பில் ஐந்து நிமிடங்கள் பேசச் சொன்னார் பேராசிரியர். வந்தார்கள். அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். சிலர் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் தோற்றம், வளர்ச்சி பற்றி உரையாற்றினார்கள். சிலர் தாமஸ் எல்.ஃப்ரீட்மேனின் 'த வேர்ல்ட் இஸ் ஃப்ளாட்’ பற்றி விமர்சித்தார்கள். சிலர் தங்களின் எதிர்காலக் கனவுகள் பற்றிச் சொன்னார்கள். எனக்குப் பக்கத்தில் இருந்த நண்பனின் கனவு பிரைம் மினிஸ்டர். எனக்கு ஐ.ஏ.எஸ்.!

எனக்கு அடுத்து இன்னும் இரண்டு மூன்று பேர் அறிமுகப்படுத்திக் கொள்ள, இறுதியாக வந்தாள் அவள். உயரம் கம்மி. ஆனால் முகம் அட்டகாச அழகு. நுனி நாக்கு ஆங்கிலம். பி.பி.ஓ.வில் ஓர் ஆண்டு அனுபவம். 'நான் மார்க்கெட்டிங் லைன்ல முன்னேற விரும்புறேன். என் கரியரை 'கேட்பரீஸ்’ நிறுவனத்தில் தொடங்க விரும்புகிறேன். ஏனென்றால், எனக்கு டைரி மில்க் ரொம்பப் பிடிக்கும்...’ என தெளிவான இலக்கு. அன்றில் இருந்து எனக்கும் கேட்பரீஸ் டைரி மில்க் ரொம்பப் பிடித்துப் போனது.olive angel

அன்றே எங்கள் வகுப்பிற்கான 'ரெப்ரசன்டேட்டிவ்’களைத் தேர்வு செய்யும் படலம் நடந்தது. மாணவிகளுக்கு அவள்தான் 'ஸ்டூடன்ட் ரெப்’. மாணவர்களுக்கு யார் என்று பேராசிரியர் தேடிக் கொண்டிருந்தார். கூச்சமோ, பயமோ, 'போட்டுப் பிழிஞ்சுடுவாங்கடா..’ எனும் நினைப்போ, எதுவோ... பசங்களில் பெரும்பாலானோர் டெஸ்கிற்குள் தலையைப் புதைத்துக் கொள்ள, நான் கைதூக்கினேன் வாலண்டரியாக! என்னை நான் அறிமுகம் செய்து கொள்ளும் போது, 'என்.எஸ்.எஸ்.ஸில் நான் கோல்ட் மெடல்’ என்று சொன்னதுக்கு பேராசிரியர் மற்றவர்களைக் கைதட்டச் சொன்னதும் வேறு எனக்குப் பலமாக இருந்ததால்... நான்தான் 'ரெப்... ரெப்.. ரெப்!’ பசங்கள் 'வலிய வந்து ஆடு மாட்டிக்குச்சுடா..’ என்று சொல்ல... எனக்கோ, ஆர்.ஆர்.-ல் 'ஒரு நாயகன்... உதயமாகிறான்...’!

அன்றைக்கு மாலையில் எங்கள் இருவரையும் தன் அறைக்கு அழைத்தார் பேராசிரியர். எங்களின் 'ரோல்ஸ் அண்ட் ரெஸ்பான்ஸிபிளிட்டீஸ்’ பற்றி விளக்கினார். அப்போதே சில ஃபார்ம்களைக் கொடுத்து ஜெராக்ஸ் எடுத்து வரச் சொன்னார். பல்கலையின் ட்ரிபிள் ஈ பிரிவு கட்டிடத்தில் இருந்த ஜெராக்ஸ் கடைக்குச் சென்றோம்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் ஜெராக்ஸ் இயந்திரத்தின் ஸ்கேன் ஒளியையே பார்த்துக்கொண்டிருந்தாள். '...ஷ்க்க்... ஷ்க்க்..’ ஒலி நயத்துடன் இயந்திரம் வெளியே காகிதங்களைத் துப்பிக் கொண்டிருந்தது.

''பத்து ரூபா ஆச்சுங்க...'' - ஜெராக்ஸ்.

அவள் பர்ஸைத் திறந்தாள். எனக்குச் சுட்டது.

''ஹலோ இருங்க... நான் தர்றேன்...''

''இருக்கட்டுமே.. நானே தர்றேன்..''

''அவங்கதான் கொடுக்கட்டுமே...'' - ஏதோ அர்த்தம் புரிந்த புன்னகையுடன் ஜெராக்ஸ்.

அவளே கொடுத்தாள். நடந்தோம். இல்லை... அவள் நடந்தாள். அவள் என்னை ஈர்த்துக் கொண்டாள்.

''ஏங்க... நானே கொடுத்திருப்பேனே..''

''அதனால என்ன...''

''இந்தாங்க...'' பத்து ரூபாயை நீட்டினேன். ''இல்லைன்னா என்னோட ப்ரஸ்டீஜ் ஒத்துக்காது..'' என்று மடத்தனமாக உளறினேன். வாங்கிக்கொண்டாள்.

''டேய்... அறிவுகெட்டவனே... ஒரு பொண்ணை வாங்க போங்கன்னுதான் கூப்டுவியா... பத்து ரூபாய்ல உனக்கு ப்ரஸ்டீஜ் போயிடுமா.. நீயெல்லாம் எங்க லவ் பண்ணப்போற...'' என்று கல்லூரிக் காலம் வரையிலும் என் ரூம் மேட் என்னைத் திட்டிக் கொண்டே இருந்தான். அப்படி நான் பேசியது தவறு என்று இன்று உணர்கிறேன்.

அதன் பிறகு வந்த நாட்களில் எல்லாம் அவள் வரும் வழியில் இருக்கும் புன்னை மரத்தின் கீழ் நின்று வேடிக்கை பார்ப்பது, அவள் நூலகத்திற்குள் நுழைந்தால் அவள் பின்னாடியே சென்று 'ஹார்வர்ட் பிஸினஸ் ரிவ்யூ’வை வைத்து சீன் போடுவது, வகுப்பில் அவள் பிரசன்டேஷன்கள் செய்தால் முதல் ஆளாக குறிப்பெடுப்பது என அளவுக்கு அதிகமாகவே வழிந்தேன். கத்தோலிக்க கிறிஸ்த்துவப் பெண் அவள். அதனால் அவள் 'சண்டே சர்வீஸு’க்குச் செல்லும் தேவாலயமும் எனக்கு நெருக்கமானது.

அந்த வருட ஆகஸ்டில் எனக்குப் பிறந்தநாள் வந்தது. மற்ற எல்லோருக்கும் இரண்டு ரூபாய் எக்ளேர்ஸ் மிட்டாய் கொடுத்துவிட்டு, அவளுக்கு மட்டும் இரண்டு 20 ரூபாய் கேட்பரீஸ் வாங்கிச் சென்றேன்.

வகுப்பின் முதல் செஷன் முடிந்து அரட்டையடித்துக் கொண்டு இருக்கும்போது, அவளிடம் சென்றேன். நீலக் கலர் சுடிதாரில் செம அசத்தலாக இருந்தாள்.

''ஹாய்... இந்தாங்க எடுத்துக்கோங்க!''

''?!.'' புன்னகையுடன் ஏறிட்டாள்.

''இன்னிக்கு எனக்கு பர்த்டே.. உங்களுக்கு கேட்பரீஸ்னா ரொம்பப் பிடிக்கும்ல... அதான்..''

''ஹோ... ஓ.கே.. மை விஷஸ்..'' புன்னகைத்துக் கொண்டே இருந்தாள்.

அப்புறம் அவள் சேத்தன் பகத் படித்தால், நான் 'ஈரோட்டுப் பெரியார் உயிரோடு’ படித்தேன். வகுப்பில் ஏதேனும் கேள்விக்கு அவள் ஒரு கருத்து கூறினால், உடனே தாமதிக்காமல் 'வழவழ.. கொழகொழ..’ என்று நானும் கருத்து கூறினேன். அவள் தோழிகளுடன் கேன்டீனுக்குச் சென்றால், 'மச்சி.. லெட்ஸ் ஹேவ் எ டீமா...’ என்று நண்பனின் காசில் மங்களம் பாடினேன். அந்த நிமிடங்கள் எல்லாம் ஜாலி... ஜாலி... ஹோலி... ஹோலி...!

நாங்கள் இருவரும் 'கிளாஸ் ரெப்’களாக இருந்ததால் அவளின் எண் என்னிடத்திலும், என் எண் அவளிடத்திலும் இருந்தது. தத்துவங்கள், ஜோக்குகள், குட்நைட்... குட்மார்னிங் குறுஞ்செய்திகள், ஸ்மைலிக்கள் என பரபரத்துக் கிடந்தேன். எல்லாமே ஒன் சைடுதான். நான் அனுப்பிய எந்த குறுஞ்செய்திகளுக்கும் அவளிடம் இருந்து பதில் வராது.

முதல் வருடம் முடிந்தது. மினி ப்ராஜெக்ட் செய்ய வேண்டும். நண்பர்கள் எல்லோரும் ஆளுக்கொரு நிறுவனம் பிடித்து பத்து நாட்களில் ப்ராஜெக்ட்டை முடித்திருந்தார்கள். நான் உட்பட இன்னும் சில நண்பர்களுக்கு எந்த நிறுவனமும் செட் ஆகவில்லை. இறுதியாக, சென்னையில் ஆங்கில வணிக நாளிதழில் ப்ராஜெக்ட் ப்ளஸ் சப்ஸ்கிரிப்ஷன் ஏஜெண்ட் வாய்ப்புக் கிடைத்தது. 'டிஸ்ட்ரிபியூஷனி’ல் நிறைய பிரச்னைகள் கொண்டிருந்த அந்த நாளிதழால் போகும் இடமெல்லாம் வசவு வாங்கிக் கொண்டே இருந்தோம். பாண்டி பஜார் செல்லா மால், தி.நகர் நண்பர்களின் அறை, மயிலை கபாலி கோயில், ஃப்ரூட் மிக்சர் என நாட்கள் ஓடியது. சேர்ந்து இருபது நாட்களில் ஒரு சப்ஸ்கிரிப்ஷன் கூடப் பிடிக்கவில்லை.

இன்று எப்படியாவது ஒரு சப்ஸ்கிரிப்ஷனாவது பிடித்துவிட வேண்டும் என்று சொல்லி, சென்னை டிரேட் சென்டருக்குப் புறப்பட்டேன். பில்டிங்கோ, பிரிண்டிங் சமாச்சாரங்களோ ஏதோ ஒரு 'எக்ஸ்போ’ நடந்து கொண்டிருந்தது. அந்த சென்டரை மூன்று முறை சுற்றிப் பார்த்து இறுதியாக, ஒரு சிங்கை சப்ஸ்கிரிப்ஷனுக்குப் பிடித்தேன். தாங்க முடியாத உற்சாகம். வெளியே வந்தேன். என்ன செய்யலாம் இந்த சந்தோஷத்தைக் கொண்டாடுவதற்கு என்று யோசித்துக் கொண்டிருந்த போது... 'அட... இங்க பக்கத்துல முகலிவாக்கத்துலதான அவ வீடு... போய்ப் பார்ப்போமே..’ என்று நினைத்துக் கொண்டு கிளம்பினேன்.

முன்பு அவளுடன் படித்த தோழன் ஒருவனுடன் கதைத்திருந்த போது...

''ஹே... இப்பவும் உங்க வீடு அங்கதான் இருக்கா...?'' அவன்.

''ஆமா... முகலிவாக்கத்துல கேதார் ஹாஸ்பிடல் வழியில வந்தா இரண்டாவது லெஃப்ட். ப்ர்ஸ்ட் ரைட். முதல் வீடு'' - அவள்.

அவள் வீட்டுக்குச் சென்றேன். கேட் சாத்தப்பட்டிருந்தது. அதன் பின்னே இரண்டு அல்சேஷன்கள் 'யாருப்பா நீ..?’ தோரணையில் என்னை முறைத்தன. தேவதைகளைப் பாதுகாத்து வைக்கும் வீடுகளில் எல்லாம் இப்படி ஓர் ஏற்பாடு இருக்குமோ என்னவோ..?

''சார்... சார்..''

''சார்... சார்...''

உள்ளிருந்து எந்தச் சலனமும் இல்லை. சுமார் பத்து நிமிடங்களுக்குப் பிறகு ''யாரு வேணும்..'' என்றபடி வந்தார் அவளின் தாத்தா. அந்தக் கால பி.ஏ.வாகவோ, எம்.ஏ. ஆகவோ இருக்கலாம். அட்சர சுத்தமாக ஆங்கிலம் வந்தது.

''சார்... மீ... ஐ ஆம் எ சப்ஸ்கிரிப்ஷன் ஏஜெண்ட் ஃப்ரம் எ டெல்லி... ஸாரி சார்... டெய்லி'' என்று தத்துபித்தாக உளறினேன். புரிந்துகொண்டாரோ என்னவோ... ''விடுப்பா... இப்ப எதுவும் வேண்டாம்'' என்று சொல்லி திரும்பப் பார்த்தவரை...

''சார்.. சார்.. ப்ளீஸ். நான் ஒரு எம்.பி.ஏ. ஸ்டூடண்ட். இது பிராஜெக்ட் வொர்க்...'' கல்லூரி பெயர் முதற்கொண்டு அனைத்தையும் சொன்னேன்.

''ஓ... நீ அங்கதான் படிக்கிறியா... என்னோட கிராண்ட் டாட்டர் கூட அங்கதான் படிக்கிறா.''

அதான் தெரியுமே... தெரிஞ்சுதானே வந்திருக்கோம்...

''அப்படியா சார்...'' ஆச்சர்யத்துடன் கேட்பது போல கேட்டேன். ''யாரு... ஆலிவ்வா...?''

''யெஸ்.. ஆலிவ். அவ என்னோட கிராண்ட் டாட்டர் தான். யம்மா ஆலிவ்... கீழே வாம்மா... உன் கிளாஸ்மெட் வந்திருக்கான்..'' என்று சொன்னபடி கேட்டைத் திறந்தார்.

அந்தக் காட்சி இப்போதும் என் கண்ணில் நிற்கிறது. ஃப்ரீ ஹேர், ஊதா நிற அரைக் கைச் சட்டையுடன், வெண் நிற பாவாடையும் அணிந்து மாடிப்படிகளில் இறங்கி அவள் வரும் அழகு... அடடா... தேவதைடா மச்சி... ''யப்பா...'' என எனக்குள் ஒரு பெருமூச்சு எழுந்து அடங்கியது.

''ஹேய்... இங்க என்ன பண்றே?''

மீண்டும் விவரங்கள் சொன்னேன். ''ஓ.கே... மேல வா...''

உள்ளே கால் எடுத்து வைக்கையில் அல்சேஷன்கள் முறைத்தார்கள். ''ஹேய்.. டாமி, ஜிம்மி.. பீ கொய்ட். ஒண்ணும் பண்ணமாட்டாங்க. வா..'' என்றபடி என்னை மேலே அழைத்துச் சென்றாள். தேவதைகள் அறைக்கான அத்தனை விஷயங்களும் இருந்தன. கண்ணாடிச் சட்டமிட்ட ஷோ கேஸில் புத்தகங்கள், அதற்குக் கீழே எல்.சி.டி. கணினி, நான் அமர்ந்திருந்த சோஃபாவிற்குப் பின் மாட்டியிருந்த நவீன ஓவியம், அந்த அறையின் ஓரத்தில் மூன்று படிகளில் இறங்கினால் அவளின் படுக்கை, அதன் மேல் விரிக்கப்பட்டிருந்த பூ வேலைப்பாடுகளுடன் கூடிய விரிப்புகள், ' Sweet Dreams ' எழுத்துக்கள் எம்பிராய்டரி செய்யப்பட்ட தலையணை... 'நம்ம வீட்டுல இப்படி வசதிகள் இருக்கா... இவ வந்தா நம்ம கூட வாழப் பழகிக்குவாளா..?’ என்று கேள்வி எழ, தாழ்வு மனப்பான்மையின் வாசலைத் தொட்டேன்.

''இந்தா... தண்ணி சாப்பிடு...'' கண்ணாடி டம்ளரில் ஐஸ் வாட்டர். வெயிலுக்கு இதமாக இறங்கியது தொண்டைக்குள்.

''நிறைய புக்ஸ் எல்லாம் படிப்பீங்க போல...''

''ஆமாம்... சிட்னி ஷெல்டன் ரொம்பப் பிடிக்கும்..''

அப்புறம் அவளின் ப்ராஜெக்ட் வொர்க், குடும்பம் அது, இது என்று பேசிவிட்டு கிளம்பினேன். இரண்டு வருட கல்லூரி வாழ்வில் அந்த இருபது நிமிடங்களை இன்னமும் நினைத்து நினைத்து நெகிழ்ந்து போகிறேன். அவள் வீட்டுக்குச் சென்று வந்ததை நண்பர்களிடம் சொல்லி மகிழ்ந்தேன். அதைக் கேட்கப் பொறுக்காமல் ஒரு நண்பன் அவளிடம் சென்று, ''என்ன அவன் உன் வீட்டுக்கு வந்தானாமே...'' என்றதற்கு, ''ஆமா.. வந்தான்..'' என்று 'ஜஸ்ட் லைக் தட்’ சொல்லிவிட்டுச் சென்றாள். அவன் கேட்டதை அவள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று அப்போது நினைத்தேன். பிறகொரு நாள்தான் புரிந்தது... நான் அவள் வீட்டுக்கு வந்து சென்றதைக் கூட ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை!

என்றாவது ஒருநாள் மனதுக்குள் இருப்பதைச் சொல்லித்தானே ஆக வேண்டும். அண்ணனின் திருமண வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருந்த ஒரு மகிழ்வான தருணத்தில் ''ஆலிவ்... ஐ லவ் யூ'' என்று எஸ்.எம்.எஸ்.சினேன். 'I am already in an affair with our senior guy' என்று செம கூலாக ஒரு பதில் வந்தது. அதற்கு மேல் நான் அவளிடம் எதையும் கேட்கவில்லை. மன்றாடத் தோன்றவில்லை.

ஆனாலும் வீம்பு விடுமா..? ''மச்சி... இன்னிக்கு நான் அவகிட்ட ப்ரபோஸ் பண்ணப் போறேன்டா நேருக்கு நேரா...'' என்றேன் நண்பனிடம். ''பார்த்துடா... இன்னிக்கு வேற ரக்ஷா பந்தன்... கையில கயிற கட்டிரப் போறா..'' என்றான்.

அவன் சொன்னதுபோலவே எவனோ ஒருவன் அவள் கையில் ரக்ஷா பந்தன் கயிறைக் கொடுத்து என் கையில் கட்டிவிடச் சொல்லி இருக்கிறான். அது தெரிந்ததும் உடனே ஹாஸ்டலுக்கு ஓட்டம்விட்டேன். அழுகை... அழுகை... அழுது தீர்க்க முடியாத அழுகை... எல்லோரும் என்னை நகைச்சுவையாளனாக பார்க்கிறார்களே என்ற காம்ப்ளெக்ஸ்ஸில் வந்த அழுகை... அவளுக்காக நான் நடந்துகொண்ட விதத்தை நினைத்து அழுகை... உறக்கத்திற்கு அழைத்துப் போனது அழுகை.

அந்த வருட இறுதியில் கிறிஸ்துமஸ் விழாவில்

" Heaven is the wonderful place...
Filled with glory and grace,
I want to see my saviour's face
Heaven is the wonderful place.."

என்று அவள் மேடையில் பாடிய பாடல்தான் இன்று வரைக்கும் நான் கண்ணீர் சிந்தும் இரவுகளில் கேட்க நினைக்கிற ஆறுதல் தாலாட்டு!

நாட்கள் மாதங்களாக ஓடி, வருடங்களாகி... இதோ இன்று ஒரு விளம்பர நிறுவனத்தில் காப்பி ரைட்டராக இருக்கிறேன். ராமகிருஷ்ணா மடத்தில் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்த கணம் ஒன்றில் எதேச்சையாக நண்பன் ஒருவன் சந்தித்தான். நலம் விசாரிப்புகள், வேலை, வருமான விசாரிப்புகள், குடும்ப சுகதுக்கங்கள், பிறகு... பழைய கல்லூரி நினைவுகள்!

''அந்தப் பொண்ணு சரியில்லடா... போன வாரம் கூட லே மெரிடியன்ல வேற ஒரு பையனோட போறதைப் பார்த்தேன். நிச்சயமா அவன் அவ லவ்வர் கிடையாது. வேற யாரோ...''

இப்படியான வார்த்தைகளை இவனுக்கு முன்பும், கல்லூரி காலத்திலேயே கூட கேட்டிருக்கிறேன். காதல் எதையும் நம்பச் செய்யாதே. இப்போதும் அப்படியே.. ''விடு மச்சி... நான் அவளை மறந்துட்டேன். வேற எதையாவது பேசுவோம்...''

ஆனால் உண்மையிலேயே உன்னை மறக்கக் கூடியவனா நான் ஆலிவ்...?

உனக்குத் தெரியுமா... 'கிறிஸ்துமஸ் விழாவுக்கு முன்பு நம் வகுப்பினர் விளையாடிய 'கிறிஸ்மா... கிறிஸ்பா’ விளையாட்டின் இறுதி நாளில் உனக்குப் பரிசாகத் தர விரும்பிய கல்வாரி மலை ஏசுவின் சிலை என் பெட்டிக்குள் பத்திரமாகப் பதுங்கிக் கிடக்கிறது.

'உனக்குப் பக்கத்தில்
நான் நிற்கும் போது
ஆலிவ் மரத்தைப் போன்று
கிளை பரப்புகிறது
என் அழகு...’

என்று உனக்கு வாசித்துக் காட்ட நான் எழுதிய கவிதை இப்போது வரை யாராலும் வாசிக்கப்படாமலேயே இருக்கிறது என்பதை நீ அறிவாயா..?

சமாதானப் புறா தன் அலகில் கொண்டு வருவது ஆலிவ் மர இலை. வெப்பம் படிந்த பக்கங்களில் சிறகு விரிக்கும் இந்தப் பறவை தேடி வருவது உன் மன நிழலை என்பதை உனக்கு யார் புரிய வைப்பது?

கிடாரை எடுக்கிற போதெல்லாம் நான் வாசிக்க விரும்புவது நீ பாடிய பாடல்தான் என்பது உனக்குத் தெரியாதல்லவா...?

இதை எல்லாம் நீ தெரிந்துகொள்ளாமல் இருந்தாலும் பரவாயில்லை ஆலிவ்... இன்றும் உன் பிறந்தநாளுக்கு கேட்பரீஸையும், சிட்னி ஷெல்டன் புத்தகத்தையும் அனுப்பி வைப்பது நான்தான் என்பதையாவது அறிந்து வைத்திருக்கிறாய் அல்லவா ஆலிவ்... எனக்கு அதுபோதும். இந்த வருடப் பிறந்தநாளுக்கும் என் பரிசை நீ எதிர்பார்த்திருப்பாயாக ஆலிவ்...!

லவ் ஈஸ் கிரேட்!

முந்தைய அத்தியாயம் :  'பிருந்த' நாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்து
Name:    Email Id:   
தமிழ்   English   (For type in tamil : அம்மா = ammaa, விகடன் = vikatan)
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவு நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும்)
விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் - வேண்டுகோளும்
GOOD5 Months ago
ஒரு தலை ராகம்
Aravindan9 Months ago
Very nice!!

Is it possible to read the previous episodes?

இந்த பகுதி ஆனந்த விகடனில் வரலாமே?
PANKAJA10 Months ago
அருமையான சுகமான நினைவலைகள்.
Anbu10 Months ago
Get a life buddies. I don't know when or how our guys will man up. Impress her and propose to her. If she is not interested, NEXT. There is no one perfect girl in the world. Wasting 2 or 3 years of life thinking about a girl is ridiculous.
PARTHA1 Years ago
அசடு வழிகிறதுகள். REAL LIFE IS NOT DREAM.
Displaying 1 - 5 of 5