கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் - 03
Posted Date : 14:05 (07/05/2012)Last updated : 11:05 (11/05/2012)

- செம்பியன்


உயிர்த் தொடர்க் குற்றியலுகரத்தையும் நெடில் தொடர்க் குற்றியலுகரத்தையும் எப்படிப் பிரித்தறிவது?

நாகு, காடு, மாசு, மாடு, ஆடு, தேடு, யாது, காது, பாகு, ஆறு -  இந்தச் சொற்களில் வரும் ‘உ’ கரம் நெடில் தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.

‘உ’கரத்தின் முன் ஒரு நெடில் எழுத்துதான் இருக்கவேண்டும்.

நாகு என்பதில் உள்ள ‘நா’ வை ‘ந்’ + ஆ எனப் பிரித்துப் பார்த்து, ‘உ’கரத்துக்கு முன் உயிர் எழுத்து வந்துள்ளதே..  அதனால் இதனை உயிர்த் தொடர் என்று சொல்ல வேண்டும் என்று எண்ணுவது தவறு.

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் என்றால் அதன் முன்பு இரண்டு மூன்று எழுத்துக்களுக்கு மேல் அமைந்திருக்க வேண்டும். அரசு, அழகு, பயறு, வயிறு, உதடு, செவிடு, குருடு, ஏற்காது, வாராது, போராடு, வருமாறு - இவை உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்கள்.

குசுடுதுபுறு என்பவற்றில் ஏதாவது ஓர் ‘உ’கரத்தைக்கொண்டு ஒரு சொல் முடிந்துவிட்டதாலேயே, அந்தச் சொல் குற்றியலுகரத்தில் முடிந்திருப்பதாகக் கருத முடியுமா?

முடியாது.

அது, ஒடு, முசு, பசு, கொசு, நடு, படு, குறு, பகு, தபு - இந்தச் சொற்கள் குசுடுதுபுறுவில் முடிந்தாலும், இந்த ‘உ’கரங்கள் குற்றியலுகரங்கள் ஆகாது. அதே வேளையில் யாது, ஓடு, மூசு, நாடு, பாடு, கூறு, பாகு என்று நெடிலாக வந்தால் குற்றியலுகரங்களாக மாறிவிடும்.

எழுத்துகளைப்பற்றி வேறு செய்திகள் உள்ளனவா?

உள்ளன. உயிர் எழுத்து, மெய்யெழுத்து, சார்பு எழுத்து என்று கண்டோம்.

போலி எழுத்து என்பது உண்டு. போலி எழுத்தாளர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.. எழுத்தில் போலியா?

ஆம். போலி எழுத்து குறி்த்து பார்ப்போம்.

 ‘ஐ’ என்னும் நெடில் எழுத்துடன் 'அ'  'இ' சேர்ந்து போலியாகும். எப்படி? 'ஐவனம்' என்பதை 'அஇவனம்' என எழுதலாம். (ஐவனம் என்றால் மலை நெல் என்று பொருள்)

'ஔவை' என்பதை 'அ உவை' என எழுதலாம்.

மேலும் ‘ஐ’ என்பது ‘ய’கரப் புள்ளியையும் ஔ என்பது ‘வ’கரப் புள்ளியையும் பெறும். அதாவது அய்வனம் என்றும், அவ்வை என்றும் எழுதலாம். ( இன்னமொரு உதாரணம் ' ஐயப்பன் '  'அய்யப்பன்' )

ஐவனம், அஇவனம்= அய்வனம்; ஔவை, அஉவை= அவ்வை என மூன்று மாதிரியாக எழுதலாம்.

ழுத்துக்களைப் பற்றி அறிந்தோம், இனி சொற்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாமா?

தமிழ் மொழியில் உயர்திணை சொற்கள், அஃறிணைச் சொற்கள் என இரு பிரிவுகள் உண்டு.

திணை என்றால் ஒழுக்கம் என்று பொருள்.

உயர்ந்த ஒழுக்கமுடையவன் மனிதன், கடவுள், தேவர்கள்.

அவர்களைக் குறிக்கும் சொற்கள் உயர்திணை என (திணைக்குப் பிரிவு என்றும் பொருள் உண்டு) குறிப்பிடப்படும்.

உயர்திணையில் ‘மூன்று பால்களும்’, அஃறிணையில் ‘இரண்டு பால்களும்’ எனக் கூடுதல் ‘ஐந்து பால்கள்’ உண்டு.

உயர்திணை : ஆண்பால், பெண்பால், பலர்பால்.
அஃறிணை : ஒன்றன்பால், பலவின்பால்.

பால் என்றால் அதை ‘பிரிவு’ என்று பொருள் கொள்ள வேண்டும்

அறத்துப்பால் என்றால் அறமாகிய பிரிவு என்று புரிந்து கொள்ளவேண்டும்.

பாலாகிய பிரிவினையை உதாரணமாக வைத்து பார்த்தால் இது நன்றாக விளங்கும்:

அவன் வந்தான்; அவள் வந்தாள்; அவர் வந்தார் (அவர் என்பது பன்மை); அது வந்தது; அவை வந்தன.

தமிழ்மொழியின் அடிப்படைகளில் வேறு என்னென்ன அறிந்துகொள்ள வேண்டும்?

திணை, பால், எண் (ஒருமை,பன்மை), இடம் (தன்மை -  நான், நாம்; முன்னிலை - நீ, நீவிர், நீங்கள்; படர்க்கை - அவன், அவள், அவர், அது, அவை), காலம் ( இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்) ஆகியவை அடிப்படையாக அறிந்து கொள்ள வேண்டியவை.

ஆங்கிலத்தில் பெயர்ச் சொல், வினைச் சொல் என்று சொற்களைப் பலவாறு பிரிக்கின்றார்களே, அப்படிப்பட்ட பிரிவு தமிழில் உண்டா?

உண்டு. பெயர்ச் சொல், வினைச் சொல், இடைச் சொல், உரிச் சொல், என்று நான்கு வகை உண்டு.

கனி=பெயர்ச் சொல்

பழுத்தது=வினைச் சொல்

கனியைச் சுவைத்தேன்= இதில் ‘ஐ’ என்பது இடைச் சொல் ( ஐ= வேற்றுமை உருபு);

கனி நனி சுவைத்தது - இதில் 'நனி' என்பது உரிச்சொல்.

எழுத்தாளர்கள் எழுதும் போது எப்படியெல்லாம் தவறுகள் ஏற்படுகின்றன?

தவறுகள் பலவகை. சொற்பொருள் தெரியாமல் ஏற்படுவது ( அரம் -அறம்)

ஒற்றெழுத்துப் பிழை  (விளையாட்டு செய்திகள்= கண்டிப்பாக ‘ச்’ வர வேண்டும்)

முயற்ச்சி (கண்டிப்பாக ‘ச்’ வரக் கூடாது)

ஒருமை பன்மை பிழைகள் - ( நிவாரணங்கள் வழங்கப்பட்டது. ( வழங்கப்பட்டன என்பதே சரி ) )

ஒரு போடவேண்டிய இடத்தில் ஓர் போடுவது - (ஓர் கண்ணாடி - ஒரு கண்ணாடி என்று தான் எழுத வேண்டும்)

செய்வினை, செயப்பாட்டுவினை தவறுகள் எனப் பலவகை உண்டு.

இவ்வகைத் தவறுகளைத் தவிர்ப்பது எப்படி என பின்வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.

ஆங்கில மொழியில் 'a', 'an'  எங்குப் பயன்படுத்த வேண்டும் என்று விதி உண்டு. அதைப்போல் தமிழிலும் உண்டா?

உண்டு. உயிர் எழுத்துக்கு முன்பு ‘ஓர்’ பயன்படுத்த வேண்டும்.

ஓர் இரவு
ஓர் இலை
ஓர் ஊர்
ஓர் அணு
ஓர் ஏர்
ஓர் இந்தியன்

உயிர்மெய் எழுத்துக்கு  முன்பு ‘ஒரு’ பயன்படுத்த வேண்டும்

ஒரு சொல்
ஒரு வில்
ஒரு வீடு
ஒரு நாற்காலி


‘ஓர், ஒரு’ போல வேறு சொல்லமைப்புகள் உண்டா?


உண்டு.
இரு, ஈர் என்னும் சொற்கள் உண்டு. உயிருக்கு முன்பு ஈரும், மெய்யுக்கு முன்பு இருவும் பயன்படுத்த வேண்டும்.

ஈருடல்
ஈர் ஓடை
ஈர் உருளி
ஈர் இரண்டு
ஈர் உளி

இரு கப்பல்கள்
இரு புலிகள்
இரு தலைகள்

தமிழ் மிக இனிமையான, எளிமையான மொழி தான்.

(தமிழ் தொடரும்)

சென்ற அத்தியாயம் : கொஞ்சம் தமிழ்.. கொஞ்சம் இலக்கணம் - 02

 

உங்கள் கருத்து
Name:    Email Id:   
தமிழ்   English   (For type in tamil : அம்மா = ammaa, விகடன் = vikatan)
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவு நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும்)
விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் - வேண்டுகோளும்
Maryanne2 Months ago
மிகுதி தொடராதா
subramania rao2 Months ago
எறும்பு பாம்பு இதர ஊர்ந்து செல்லும் உயிரினங்கள் ஆகவே ஊர என்பது தான் சரி. ஊற என்பது நீரில் நனைய வைப்பது. சில வட்டார வழக்குகளில் சொறி சிரங்குகளின் அரிப்பை ஊறல் எடுக்கிறது என்பார்கள்
subraania rao2 Months ago
அன்னைத்தமிழுக்கு அழகான ஆபரணங்களை அணிவித்து அழகு பார்ப்பது போல இந்த கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் பகுதி ஒளிர்கிறது எவரும் எளிதில் புரிந்து கொள்ளும் நடை அற்புதம் கொஞ்சும் தமிழ் இலக்கணத்தில் பட்டை தீட்டப்பட்டு ஒளிரும் வைரமாக கற்போருக்கு கண்டிப்பாக பயன் படும். நன்றி( இலட்சணம் இலக்கணம் இலட்சியம் இலக்கியம் இவை கள் மணிப்பிரவாள நடை சொற்களா என அறிய ஆவல்.
Avathaany6 Months ago
அன்புடன் திரு.செம்பியன் அவர்களுக்கு,

வணக்கம்,

கீழ்வரும் தொடரில் எனக்கு ஒரு விளக்கம் தேவை,அதனை தீர்த்து வைப்பீர்களென்று நம்புகின்றேன்.

இன்று (23.12.2012 ) விஜய் தொலைக்கட்சியில் நடைபெற்ற "ஒரு வார்த்தை ஒரு லட்சம்" நிகழ்ச்சியில்,மாணவர்களுக்கான போட்டியில்

"எறும்பு ஊற கல்லும் தேயும்" என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது.

இதில் "ஊற" என்பது இச்சொற்றொடருக்கு பொருத்தமற்றமென்பதாகும்.

"எறும்பு ஊர கல்லும் தேயும்" என்பதே சரியானதாகும்.

"ஊர" என்ற சொல்லே இவ்வரியில் இடம்பெர்றிருக்க வேண்டும்.

"ஊற" என்பதற்கு,

அரிசியை "ஊற" வைத்தல்.
பருப்பை அரைப்பதற்காக "ஊற"வைத்தல்.
பழங்களை "ஊற"வைத்து நொதியத்தைப் பெறலாம்

எறும்பு, பாம்பு, பல்லி, தேள் என்பன ஊர்வன பகுதிக்குள் அடங்குபவன.

எனவே எறும்பு "ஊர" என்பதே சரி என்பது எனது எண்ணம்.

ஆனாலும் "கற்றது கடுகளவு கல்லாதது பிரபஞ்சமளவு" என்பதனால்

எறும்பு "ஊற" என்பதா அல்லது
எறும்பு "ஊர"என்பதா சரி என்பதை அறிய்த்தருமாறு வேண்டுகிறேன்.இதனால் எனக்கு மட்டுமல்ல பலரும் விளக்கம் பெறுவார்கள்.

தயவு செய்து விகடன் இணயத்தளமும் இதில் ஒட்துழைக்க வேண்டும் என வேண்டுகிறேன்.


அன்புடன்
அவதானி
Raja.A5 Months ago
நன்றாக உள்ளது..
T.Siddarthan6 Months ago
வெகு நாட்களாக நான் எதிர்பார்த்திருந்த அருமையான தொடர்.தொடரட்டும் தமிழ் பணி
ARUNKUMAR7 Months ago
அருமை. மிக எளிமையாய்த் தமிழிலக்கணம். வாழ்த்துக்கள்
Prabakar1 Years ago
அருமை.
பிரபு1 Years ago
அருமை அருமை.
P.Pahirathan1 Years ago
மிகவும் பயன்பாடனது.
n.bhoopathiraja1 Years ago
நன்றி! மிகவும் பயனுள்ள தொடர்.
kanchana1 Years ago
தமிழ் இலக்கணம் கற்று கொடுக்கும் இந்தப் பகுதி மகிழ்ச்சியடைய வைக்கிறது. இரண்டாம் வேற்றுமையுருபு 'ஐ'யையும், நான்காம் வேற்றுமையுருபு 'கு'வையும் அடுத்து கண்டிப்பாக ஒற்றெழுத்து வர வேண்டும் என்று, என் தமிழாசிரியர் எட்டாம் வகுப்பில் எடுத்த பாடம் இன்னும் மறக்கவில்லை. அவருக்கும், இப்பொழுது விகடனுக்கும் நன்றி!
ஹரி1 Years ago
தருமபுரி மாவட்ட இளைஞர்கள் சார்பாக நன்றிகள் கோடி.....
Dr.Mrs.MeenakshiPrabhakar1 Years ago
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய தொன்மை வாய்ந்த தமிழ், இலக்கணத்திற்கு அப்பாற்பட்டது.தான் அறிந்த தமிழை இறுதியாக்க சில புலவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சி இலக்கணம்.பெரும்பாலும் இலக்கண விதிகளை "ஏன்" என்ற அறிதல் கொண்டு விளக்க முடியாது.ஓர், ஈர் என்பது இன்று நடைமுறையில் இல்லை.இவை கொண்டு குறிக்கும் சொற்கள் ஒரு, இரு என்று குறிக்கப்பட்டாலும் அதே அர்த்தத்தை தரும்.ஒருமித்த கருத்தாக நடைமுறையில் ஒப்புக்கொள்ளப்பட்ட வரி வடிவம் எழுத்து.இதற்கும் "ஏன்" என்ற காரணம் அறிய முடியாது.கொஞ்சம் தமிழ், கொஞ்சும் தமிழாகவே ஏற்றுக் கொள்ளப்படுகிற நிலையில், கொஞ்சம் இலக்கணம் எதற்கு?.கருத்து தெரிவிக்க எளிய சொல் பயன்பாடு போதும்.ஆங்கில சொற்களோடு கூடிய குறுங்கவிதைகள் தமிழ் என்று ஏற்றுக் கொள்ளக்கூடிய ஹைக்கூ காலம் இது.கருத்தில் கவனம் வைப்போம்.காவியத் தமிழ், சங்கத் தமிழ், நவீன தமிழ், மழலைத் தமிழ், கன்னித் தமிழ், மதுரைத் தமிழ், நெல்லைத் தமிழ்,கொங்கு தமிழ், இலங்கைத் தமிழ்,,,,,,, இவற்றில் எந்த இலக்கணம் சரி?
Arun Kumar1 Years ago
மிக மிக நல்ல தொடர்... விகடனுக்கும், செம்பியனுக்கும் மிக்க நன்றி...
Sethu1 Years ago
Good initiative! We can start with simple and interesting grammer...To make the present generation to have interest on it...
Ganapathy1 Years ago
மிக மிக நல்ல முயற்சி. தமிழ் மறந்த எங்களை போன்றோர்க்கெல்லாம், மிகவும் உபயோகமான பகுதி.

ஆனால், உங்கள் நிருபர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய பகுதி இது. அவர்கள் எழுதுவதில்தான் எத்தனை இலக்கணப்பிழைகள்.
kumar1 Years ago
நன்றி.. தொடரவும்..
saravanan1 Years ago
மிகவும் பயனுள்ள தொடர்.
BALA.R1 Years ago
நல்லதொரு தொடர்.வாழ்த்துகள் உங்களுக்கு:)
jambu1 Years ago
பாராட்டுக்கள். தயவு செய்து தொடரவும்
k1 Years ago
நன்றி.
Mahendran1 Years ago
மிகவும் அருமை. வாழ்த்துக்கள்!
Ramamurthy1 Years ago
அருமை. தயவு செய்து தொடரவும்.
V1 Years ago
அருமை!! அயல்வாழ் தமிழர்களுக்கு மிகவும் பயனுள்ளது.
 Displaying 1 - 25 of 27