
ஆளு அரப்பனை உயரம்
உழுவ இறங்கினா
முடிச்சிட்டுத்தான்
கரையேறுவாரு
காய்ச்ச மண்டயிடின்னு
ஒரு நாளும் படுத்ததில்லை
என தாத்தா பெருமை
பேசிக்கொண்டே
கட்டிலை நகர்த்திய என்
கைக்கு ஐயொடக்ஸ்
தேய்த்தாள் பாட்டி
உழைக்கத்தெரிஞ்சவருக்கு
நாளெழுத்து தெரியாம
பொழைக்கதெரியாம போச்சே
என ஏக்கப்பெருமூச்சு
விட்டவளிடம் -
எனக்கு அதை
வைத்து பிழைக்க தெரியும்
ஆனால் உடலால்
உழைக்க தெரியாது
என எப்படிச் சொல்ல?
*