|
- பி.ஆரோக்கியவேல்
புனே நகரின் பலேவாடி ஸ்டேடியம்.... 'ஃபோக்ஸ் வாகன் போலோ கப்' கார் ரேசுக்கான முதல் போட்டி! இதில் கலந்து கொண்ட இருபது கார்களும் புயல் வேகத்தில் உறுமியபடி பறந்து கொண்டிருந்தன. வளைவுகளில் எல்லாம் 'க்ரீச்ச்ச்' என்ற சத்தத்தின் இடையே பறந்த தீப்பொறியில் கார்களின் டயர்கள் பொசுங்கும் வாசம் அந்த நேரத்து திகிலை மேலும் அதிகப்படுத்தியது. ஒருவழியாக பந்தயம் முடிந்து, போட்டியாளர்கள் ஹெல்மெட்டை கழற்றியபோது 'பளிச்' என கண்ணில் பட்டார் இருபத்தியோரு வயது அலிஷா அப்துல்லா!
அலிஷா, நம்முடைய சென்னைப் பெண் என்பது, ஆச்சரியத்துடன் சந்தோஷத்தையும் கலந்து கொடுக்க, ஓடிச் சென்று கை கொடுத்தோம். வியர்வையில் குளித்திருந்த அலிஷாவின் விரல்களில் தகித்தது வெப்பம். அறுபது டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில், இருபத்தி ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து காரை ஓட்டியதால், உடம்பே தீப்பந்தம் போல அனலை உமிழ்ந்து கொண்டிருந்தது.
"ரேசுல, ஏ.சி. எல்லாம் போட்டுட்டு காரை ஓட்ட முடியாது. வெப்பம் அதிகமா இருக்கும்கறதுக்காக ஜன்னலோட கண்ணாடிகளை இறக்கிவிட்டா, எதிர்க்காற்று உள்ளே புகுந்து காரோட வேகத்துக்கு முட்டுக் கட்டை போடும். பாதுகாப்புக்காக அணியற இந்த தீப்பிடிக்காத உடைகளும் தன் பங்குக்கு வெப்பத்தைக் கூட்டும். அதனால, அரை மணிநேரம் ரேஸ்ல கார் ஓட்டினாலே, ரெண்டு கிலோ எடை குறைஞ்சுடலாம்!"
- படர்ந்த புன்னகை அலிஷாவிடம்இருந்து!
'போலோ கப்' என்பது உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. நம் நாட்டில் முதல் முதலாக இந்தப் 'போலோ கப்'புக்காக நடக்கும் கார் பந்தயத்தில் கலந்து கொள்வதற்கு, பல்வேறு கட்டங்களைத் தாண்டியாக வேண்டும்.
''ஆயிரம் ஆண்களோடு போட்டி போட்டு, இருபது ரேஸ் வீரர்களில் ஒருவராக எப்படி தேர்வானீர்கள்?'' என்றால்... அலிஷாவிடமிருந்து முதலில் பதிலாக வருவது மெல்லிய புன்னகை!
"கிரவுண்ட்ல ஆண், பெண்ங்கற பாகுபாடெல்லாம் கிடையாது... கூடாது. 'வேகம்' மட்டும்தான் அங்க செல்லுபடியாகும். எங்கப்பா, பைக் ரேஸர்ங்கறதால, ரேஸ் கிரவுண்ட்ல நான் ஆறு வயசுலயே இறங்கிட்டேன். 'கோ-கார்ட்டிங்' ரேஸ், 'யூகார் தேசிய பைக் ரேஸ்'ல எல்லாம் சாம்பியன் பட்டம் வாங்கியிருந்தாலும், 'ஜே.கே. நேஷனல் கார் ரேஸ்'ல பலமுறை கலந்துட்டிருந்தாலும், இந்த 'போலோ கப்'புக்கான செலக்ஷன் புராசஸ் எனக்கு கடினமாதான் இருந்தது.
இந்தப் போட்டிக்கு விண்ணப்பிச்சவங்கள்ல அனுபவம், உடல் தகுதி போன்ற அடிப்படை விஷயங்கள்ல தேர்வானவங்களுக்கு, கோயம்புத்தூர் ரேஸ் டிராக்ல அடுத்த பரீட்சை வச்சாங்க. கூடவே... கார் ஓட்டறவங்களோட வேகத்துக்கு ஈடுகொடுத்து கார் ஓட்டறோமா, நேரான பாதையில காரை வேகமா செலுத்தறதைவிட, திருப்பங்கள்ல வேகத்தை குறைக்காம ஓட்டறோமா, எந்தச் சூழ்நிலையில வேகத்தை கூட்டறோம், பிரேக் அடிக்கறோம்னு... எல்லா விஷயங்கள்லயும் நடுவர்கள்கிட்ட நான் 'குட்' வாங்கினதாலதான், இந்த வாய்ப்பு கிடைச்சுருக்கு.
இப்போ, புனேவுல ரெண்டு சுற்றுகள் முடிஞ்சுருக்கு. அடுத்ததா, கோவை-கரி மோட்டார் ஸ்பீட்வே ரேஸ் மைதானத்துலயும்... பிறகு, சென்னை- இருங்காட்டுக்கோட்டை ரேஸ் மைதானத்துல வர்ற டிசம்பர் மாசம் வரை போட்டிகள் நடக்கும். ஒவ்வொரு போட்டியிலயும் பாயின்ட்டுகள சேர்த்துட்டே போய், 'போலோ கப்'பை கையில அள்ளணும்.... இதுதான் என் அடுத்த ஆறு மாசத்துக்கான அட்டவணை!"
- தன் ரேஸ் காரை செல்லமாக தட்டிக் கொடுக்கிறார் அலிஷா!
*
அவள் விகடன் : 02-07-2010
|