|
மும்பை, மே 1,2010
பேன்டலூன்ஸ் ஃபெமினா மிஸ் இந்தியா 2010 ஆக மானஸ்வி (வயது 22) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரே, இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் உலக அழகி போட்டியில் இந்தியாவின் சார்பில் போட்டியிடுவார்.
மும்பையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற வண்ணமயமான நிகழ்ச்சியில், மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் 2010 ஆக நேஹா தேர்வு செய்யப்பட்டார்; மிஸ் இந்திய எர்த் 2010 ஆனார் நிக்கோல் ஃபாரியா.
மிஸ் இந்தியா போட்டிக்கான இறுதிச் சுற்றில் மொத்தம் 18 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் பிரபல ஆடை வடிவமைப்பாளர்கள் ரிது குமார் மற்றும் அனிதா டோங்ரே ஆகியோர் வடிவமைத்த விதவிதமான ஆடைகளை அணிந்துகொண்டு மேடையில் வலம் வந்தனர்.
இறுதிச் சுற்றில் வெற்றி பெற்று, 2010 ஆம் ஆண்டின் மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்ட மானஸ்வி, டெல்லியில் பிறந்தவர். தற்போது மும்பையில் மாடலாக இயங்கி வருபவர்.
 
மிஸ் இந்தியாவாக அறிவிக்கப்பட்டவுடன் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்ற மானஸ்வி, "இந்நேரத்தில் என் அம்மாவுக்கும் கடவுளுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்," என்றார்.
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, எழுத்தாளர் சேத்தன் பகத், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், இயக்குனர் அனுராக் பாஸு, ஆடை வடிவமைப்பாளர் ரிது பேரி மற்றும் நடிகர் குணால் கபூர் ஆகியோர் போட்டி நடுவர்களாக செயல்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பாலிவுட்டின் நட்சத்திரங்கள் ஷாகித் கபூர், சல்மான் கான், லாரா தத்தா, நேஹா தூபியா, விவேக் ஓபராய் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பெர்ஃபக்ட் 10... கிருத்திகா பாபு!

மதுரையில் பிறந்து பெங்களூருவில் கல்லூரியில் படித்து வரும் கிருத்திகா பாபு, மிஸ் இந்தியா போட்டியில் இறுதிச் சுற்றுவரை முன்னேறினார். எனினும், இவர் 'மிஸ் பெர்ஃபக்ட் 10' ஆக தேர்வு செய்யப்பட்டார். |
|