ஈர நெஞ்சன் 'பெட்ரோல்' ரஞ்சித்!

- ஞா.அண்ணாமலை ராஜா.

'பெட்ரோல்' ரஞ்சித்... மக்களை அச்சுறுத்தும் பெயர் என்று நினைத்துவிடாதீர், இது அரவணைக்கும் பெயர்!

கோவையில் சற்றே பிரபலான இவரது சேவைப் பாதைக்கு தூண்டுதலாக இருந்ததே பெட்ரோல் தான்.

இதன் பின்னணியை விவரிக்கும் அவர், "நான் தினமும் எனது டூவீலர் பயணத்தில் குறைந்தது ஒருவருக்காவது இலவசமாகப் பெட்ரோல் தருவதால், இந்தப் பெயர் எனக்குச் சொந்தமாகிவிட்டது. பெட்ரோல் பங்க் வெகுதூரமுள்ள புறநகர் அல்லது கிராமங்களில் இரவு நேரங்களில் பெட்ரோல் இல்லாமல் வண்டியை தள்ளிக் கொண்டு வரும் நிலைக்கு சிலர் தள்ளப்படுவதுண்டு. அத்தகையோருக்கு உதவுவதற்காக என் வண்டி பெட்ரோல் டேங்க் எப்போதும் நிரம்பியிருக்கும். பெட்ரோலை எடுத்து தருவதற்கான ரப்பர் பம்பும் வண்டியிலேயே இருக்கும்.

ஒருநாளுக்கு ஒருவருக்காவது பெட்ரோல் வழங்கும் வாய்ப்பும் கிடைத்துவிடுகிறது. அதுவே என் கொள்கையாக மாறிவிட்டது. இதைக் கடந்த 10 வருடங்களாக செய்து வருகிறேன். இது மட்டுமின்றி, யாருடைய வண்டியாவது இடையில் பழுதாகி நிற்பதைப் பார்த்தால் உடனே இலவசமாக சரி செய்து தர ஒரு மெக்கானிக் டீமே என்னிடம் இருக்கிறது. வொர்க்க்ஷாப் தொழிலாளர்களான என் நண்பர்கள் ஜேம்ஸ், கார்த்திக் ஆகியோருக்கு தகவல் கொடுத்தால் உடனே ஓடி வருவார்கள். மாதம் தோறும் எப்படியும் 50 மெக்கானிக்காவது இலவசமாக செய்து தருவது என உறுதியுடன் இருக்கிறோம்," என்கிறார் 'பெட்ரோல்' ரஞ்சித்.

'பெட்ரோல்' ரஞ்சித்துக்கு இன்னொரு முக்கிய முகமும் உண்டு. 'பிளஸிங் கேட்டரிங்' என்ற பெயரில் கோவையில் பரவலாக பாப்புலரான கேட்டரிங்கின் உரிமையாளரும் இவரே.

இவரது கேட்டரிங்கில் வேலை செய்பவர்கள் கூட ஆதரவற்ற பெண்கள், விதவைகள், கண்பார்வையற்றோர் போன்றவர்களே. தன்னிடம் பணிபுரிவோருடைய குழந்தைகளின் கல்விக்கான செலவுக்கும் இவரே பொறுப்பு.

'பெட்ரோல்' ரஞ்சித்துக்கு உறுதுணையாக இருப்பவர்களில் ஆறுச்சாமியும் ஒருவர். அவர் சிறையிலிருந்து விடுதலை ஆனவர். அவரது சேவையும் சற்று வித்தியாசமானதே. கோவையிலுள்ள எந்த ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கும் முடி திருத்த வேண்டும் என்றாலும் உடனே அங்கு சென்று விடுவார். அதுவும் முற்றிலும் இலவசமாக. அவரே பேசுகிறார்...

"நான் ஒரு குற்றத்துக்காக 8 ஆண்டுகளாக சிறையில் இருந்தபோது ஒரு விழாவுக்கு ரஞ்சித் சார் வந்திருந்தார். அப்போதே என்னிடம் அன்பாக பேசினார். இருவரும் நல்ல நண்பர்களானோம். அதன் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் விடுதலையாகி வெளியில் வந்தவுடன் ரஞ்சித் சாரைப் பார்த்தேன். அவர் முதலில் கேட்டது, 'உனக்கு என்ன வேலை தெரியும்? என்று, 'நான் முடி வெட்டுவேன்' என்றேன். உடனே, 'எங்களோடவே தங்கிக்கொள். இதுபோல் ஆதரவற்ற இல்லங்களில் அவர்கள் கூப்பிடும் பொது சென்று முடி வெட்டு,' என்று எனக்கும் வாழ்வில் தன்னம்பிக்கை கொடுத்து இந்த வேலையும் கொடுத்தார்," என்றார் பெருமிதத்துடன்.

இப்படிச் சேவையை முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கும் 'பெட்ரோல்' ரஞ்சித் படித்தது இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே. இப்போது, 35 சிறை கைதிகளின் குழந்தைகளின் கல்விக்காக ஆண்டுதோறும் 25 ஆயிரம் ருபாய் ஒதுக்கி வைத்துவிடுகிறார்.

"நம்மால் ஆன உதவிகளை செய்றதுக்கு பெரிய அளவு பாதிப்புள்ள பின்னணிகள் எல்லாம் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. நான் ஆரம்ப காலத்தில் இதுபோல் கஷ்டப்பட்ட குடும்பதில் இருந்து வந்தவன்தான். சமுகத்தில் எனக்கு கிடைத்த வாய்ப்பும், என் உழைப்பும் தான் என்னை இந்த இடத்துக்கு கொண்டு வந்து விட்டிருக்கு. 'நாம் பிறர்க்கு உதவும் போது இறைவன் நம்மை உயர்த்துவார்,' என்ற பைபிள் வாசகம்தான் தன் தாரக மந்திரம்," என்றவர், "நீங்களும் உங்களால் முடிந்த சேவைகளைச் செய்யலாமே?" எனக் கேட்டார்.

ஆம்.

*

Tamil English  
(tamil typing : ammaa = அம்மா, vikatan = விகடன்)
 Name
  E-Mail
  Comment
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவுக்கு நன்றி. நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும். காத்திருக்கவும்)
For contents & Feedback: youthful@vikatan.com I For technical issues : webmaster@vikatan.com I For Advt: dotcom@vikatan.com
Copyright © 2008 Vikatan.com Pvt Ltd. all rights reserved.