|
- ஏ.ஆர்.குமார்
சென்னை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடப்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் சுவாரஸ்யமான ஒரு கட்டுரைப் போட்டியும் நடந்திருப்பது நம்மில் பலருக்குத் தெரியாது. முதல்முறையாக இணையத்திலேயே இந்தக் கட்டுரைப் போட்டியை நடத்தி இருக்கிறது சென்னை மருத்துவக் கல்லூரியின் குடல் மற்றும் இரைப்பைத் துறை. இந்தப் போட்டி பற்றி இந்தத் துறையின் தலைவரான டாக்டர் சந்திரமோகனைச் சந்தித்துக் கேட்டோம்.

"குடல் மற்றும் இரைப்பையின் ஆரோக்கியம் பற்றி மக்களின் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஒரு போட்டி நடத்துவோம். இந்த ஆண்டு கொஞ்சம் வித்தியாசமாக, அநியாயத்துக்கு மாறிவிட்ட நம் வாழ்க்கை முறையால் நம் வயிறு எப்படி எல்லாம் கெட்டழிந்திருக்கிறது என்பது பற்றி கட்டுரையாக எழுதும்படி கல்லூரி மாணவர்களை அழைத்தோம். பல நூறு மாணவர்கள் இந்தக் கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டு எங்களைத் திக்குமுக்காட வைத்துவிட்டார்கள்.
மாறிவரும் வாழ்க்கைமுறை நம் வயிற்றை எப்படி எல்லாம் பாதித்திருக்கிறது? அதனைத் தடுக்கும் வழிகள் பற்றி நிறைய மாணவர்கள் தங்கள் கருத்துக்களைச் சொல்லி இருந்தார்கள். ஏறக்குறைய எல்லா மாணவர்களும் இரண்டு மிகப் பெரிய தீங்கைப் பற்றி சரியாகவே எச்சரித்திருந்தார்கள்.
அதில் ஒன்று, மதுப்பழக்கம். இன்னொன்று, புகைப்பழக்கம்.
தீமைகளிலேயே பெருந்தீமை விளைவிப்பது மதுவா, புகையா என்று டாக்டர்கள் ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். இந்த இரண்டு பழக்கங்களும் போட்டி போட்டுக் கொண்டு நம் உடம்புக்கு அதுவும் குறிப்பாக நம் குடலுக்குத் தீங்கு செய்கின்றன.
புகைப்பழக்கம் நம் இதயத்தில் ஆரம்பித்து சிறுகுடல், பெருங்குடல் என எல்லா முக்கிய பாகங்களை நாசப்படுத்துகிறது. மது இதயத்தைவிட குடல்பகுதியை சர்வநாசம் செய்துவிடுகிறது. இது நமக்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை என்பதால் திரும்பத் திரும்ப தவறு செய்கிறோம். கடைசியில் கண்கெட்ட பிறகு சூரிய தரிசனம் பார்க்க ஆசைப்படுகிறோம் என்பதை கல்லூரி மாணவர்கள் மிகச் சிறப்பாகவே எடுத்துச் சொல்லி இருந்தார்கள்.
இந்த கட்டுரைப் போட்டியை முழுக்க முழுக்க இணையத்திலேயே நடத்தினோம். இதற்கு முன்பு இதைச் செய்யாததற்குக் காரணம், பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிடுமோ என்கிற சந்தேகத்தால்தான். ஆனால் இப்போது இணையத்தொடர்பு எங்கும் வந்துவிட்டதால் துணிந்து நடத்தினோம்.
நாங்களே அசந்துபோகிற பல நூறு மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதில் ஆச்சரியம் என்னவெனில், இதில் கலந்துகொண்டவர்களில் மாணவர்களைவிட மாணவிகளே அதிகம். புகை மற்றும் மதுப்பழக்கத்துக்கு ஆளாகாத மாணவிகள் அது பற்றி நிறைய யோசிக்கிறார்கள் என்பது புரிந்தது. இந்த கட்டுரைப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றதும் மாணவிகளே. கிங்ஸ் என்ஜினியரிங் கல்லூரியைச் சேர்ந்த சவீதா, சென்னை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பி.எல். வித்யா, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியைச் சேர்ந்த அபர்னா அனந்தகிருஷ்ணன் ஆகிய மூன்று மாணவிகள் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.
இந்த கட்டுரைகளைத் தேர்வு செய்த தேர்வுக்குழுவில் இருப்பது யார், யார் என்பதையும் ரகசியமாக வைத்திருந்தோம். யார், யாருடைய கட்டுரையைப் படிக்கிறார்கள் என்பது மாதிரியான எல்லா விபரங்களையும் மறைத்தன் விளைவாக, மிகத் தரமான கட்டுரைகள் எந்த விருப்புவெறுப்பும் இன்றி தேர்வு செய்யப்பட்டன.
இந்தமுறை எங்களுக்குக் கிடைத்த ரெஸ்பான்ஸைப் பார்த்து அடுத்த ஆண்டுக்கு என்ன தலைப்பில் கட்டுரைப் போட்டி நடத்துவது என்று இப்போதே யோசிக்க ஆரம்பித்துவிட்டோம்," என உற்சாகமாகப் பேசி முடித்தார் டாக்டர் சந்திரமோகன்.
|