அசல் கதை

- ஃப்ராங்ளின்

தாமிரபரணியில் இன்று நல்ல கூட்டம். தண்ணீரும் அதிகமாக போகிறது. மணி பதினொன்றை தாண்டியும் கூட குளிர் குறையவில்லை. பக்கத்து ஊர்களிலிருந்தும் நிறைய பேர் வந்திருந்தனர். ஆமாம், முத்துமாலை அம்மன் கோயில் திருவிழாவாயிற்றே!

இந்த முக்கூடல் ஆற்றங்கரையைப் போல நெல்லை மாவட்டத்தில் வேறு எங்காவது இப்படி தாமிரபரணி பரந்து விரிந்து அழகாய் ஓடுகிற மாதிரி தெரியவில்லை. ஆறு மூன்றாய் விரிந்து ஓடும். நடு நடுவே மணல் மேடுகள். கிழக்கு வெளுக்கும் போது, தூரத்தில் ஓவியமாய் தெரியும் நாதசாமி ஆலயம். தெற்கே அக்கரையில் எப்போதுமே பச்சை. சின்னக் கோயில்தான். கோயிலுக்கு முன்னே பரந்து விரிந்து கிடக்கும் ஆல அரச மரங்கள். அந்த வேர்கள் எங்களுக்கு ஊஞ்சல்.

திருவிழாக் கூட்டம் ஜேஜே... ஒரு இடத்தில் கரகாட்டம், கொஞ்சம் தள்ளி சினிமா, அதோ அந்த மேடையில் சினிமாக்காரர்களின் நாடகம். இன்றைக்கு யாரோ?

திருவிழா முடியும் வரை ஆற்றில் சுத்தம் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். படித்துறை என்று தனியாக இல்லை. ஆனாலும் பெண்கள் அதிகம் குளிக்கும் பகுதிக்கு ஆண்கள் செல்வதில்லை. மதிய நேரத்திலும் ஆளில்லா மாலை நேரத்திலும் இது கொஞ்சம் மாறும்.

எனது சைக்கிளை மரத்தடியில் நிறுத்தி பூட்டினேன். சேகரும், செல்வமும் என்னோடு இணைந்தார்கள்.

"மாப்ளே, என்ன கூட்டம் அதிகமால்ல இருக்கு..!"

"எல்லாம் பக்கத்து ஊர்காரங்க, கோயிலுக்கு வந்தவங்க..."

"மச்சான் ஏகப்பட்ட கலர் வந்திருக்கு போல!"

"ஏல... முதுகு பத்திரம். கண்ணையும் வாயையும் வச்சிகிட்டு சும்மா வால.." என்று நான் கொஞ்சம் எரிச்சல் காட்டினேன்.

தண்ணீர் கொஞ்சம் கலங்கலாகவும் வேகமாகவும் ஓடியது. எங்களுக்கு முன்னே கொஞ்சம் தள்ளி பெண்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள்.

நாங்களும் குளிக்க ஆரம்பித்தோம். அப்போதுதான் அவர்கள் வந்தார்கள். பக்கத்து ஊர்ப் பசங்க. வம்பு பிடிச்சவனுங்க. கூட்டம் கூட்டமாத்தான் வருவானுங்க. வந்த இடத்துல வம்பு இழுக்காம போகவும் மாட்டானுங்க. அவர்களில் சிலர் தண்ணீரில் குதித்தபோது ஏதோ நாலைந்து எருமைகள் பாய்ந்தது போல இருந்தது. கொஞ்ச நேரம் கேலியும் கிண்டலுமாய் கழிந்ததது. தண்ணீரால் அடித்து விளையாடும் சாக்கில் பக்கத்தில் குளித்துக் கொண்டிருந்த பெண்கள் மீதும் தண்ணீரை அடித்தார்கள்.

அந்தப் பெண்கள் திரும்பி முறைத்தபோது, இவர்கள் எங்கள் பக்கம் திரும்பி, "என்னல சும்மா குளிக்க முடியலையா..? பொம்பள புள்ள பக்கத்துல என்னல வேல... தள்ளி வந்து குளிங்கல..!" என்று சீறினர். இப்போது சேகரும் செல்வமும் அவர்களை முறைத்தார்கள்.

"ஏல என்ன முறைக்க... நோண்டிருவேன்..."

"என்னல முறைச்சிட்டாப்ல... நீ என்ன பெரிய ..?

சேகரும் செல்வமும் பதில் ஏதும் சொல்லவில்லை. எங்களுக்குத் தெரியும் அவர்கள் வம்பிழுக்கிறார்கள். எனக்கென்ன்னா அந்தப் பெண்கள் நம்மை தப்பா புரிஞ்சிக்கக் கூடாதே.

"சேகர் வாடே... கிழக்கத் தள்ளிப் போவோம். அங்க கூட்டம் குறைய, ஆழமும் அதிகம்.. வா எதற்கு வம்பு," என்று அழைத்தேன்.

"ஏன் இங்க நல்லாத்தானே இருக்கு.."

"ஏல புரியாமப் பேசாத. அந்தப் பயலுக வம்பிளுக்கன்னு அலையுதானுக. இத என்ன சத்தமாவா சொல்லணும்.." என்று செல்வமும் சொன்னான்.

மூவரும் கரையேற ஆரம்பித்தோம். முதலில் என் மீது மணல் வந்து விழுந்தது. திரும்பிப் பார்த்தேன். அவர்கள் எதுவுமே நடக்காதது போல குளித்துக் கொண்டிருந்தார்கள். ஈரமான மணலை எரிந்தால் எப்படி ஈரமுதுகு எரியும் என்பது வாங்கிப் பார்த்தால் தான் தெரியும். நான் மீண்டும் தண்ணீரில் முங்கி எழுந்தேன்.

அடுத்து சேகர் மீதும், செல்வம் மீதும் வந்து விழுந்தது. சரி, இனி இங்க இருந்தா சரிப்படாது. தலை துவட்ட ஆரம்பித்தேன். அவங்களோட ஆட்டம் குறையவில்லை. நாங்க கரைக்கு வந்ததைப் பார்த்து கேலியும் கிண்டலும் இன்னும் அதிகமானது. அந்தப் பயல்களில் ஒன்றிரெண்டு பேராவது எங்க அப்பாகிட்ட படிக்கிற பயல்காளாத்தான் இருக்கணும். மணலில் கால்கள் பதிய கோயிலை நோக்கி நடந்தோம்.

எவ்வளவு நேரமானாலும் சரி, பசியெடுத்தாலும் சரி... குளித்துவிட்டு முத்துமாலை அம்மன் கோயிலுக்குள் செல்லாமல்
நான் வீட்டுக்குச் சென்றதில்லை. சாமி கும்பிட என்று நான் இதுவரை சென்றதில்லை. வெற்று உடம்பில் சந்தணம் பூசி வெளியே வரும்போது மணியை இரண்டு தட்டு தட்டி விட்டு, 'இது கட்டாயம் கடவுள் காதுக்குக் கேட்கும்,' என்ற திருப்தியுடன் திரும்புவேன். சில நேரம் சர்க்கரைப் பொங்கல் பிரசாதாம் வாங்கி ருசிப்பேன்.

சேகரும் செல்வமும் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்தார்கள். நான் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடந்தேன். அய்யய்யோ அந்த பயல்கள் இப்ப இங்கேயும் வர்ரானுங்களே...

"மாப்ளே.. டீ அடிப்போமா..?"

"இங்க வேண்டாம்டே. பஸ் ஸ்டாண்ட்டுக்குப் போவோம்." - இது நான்.

"எல பசி தாங்க முடியல. எப்ப வீட்டுக்குப் போயி... எப்ப வயித்த நிறைக்க..."

"திருவிழாக்குன்னு போட்ட டீக்கட நல்லா இருக்காதுடே."

"அப்படியெல்லாம் ஒண்ணுமில்லடே. 150 மில்லி டீக்கு இன்னும் ஏழு மைல் நடக்கச் சொல்வியோ..?"

இன்னமும் முடிவு செய்யவில்லை. எங்களுக்கு முன்னே கொஞ்சம் பெண்கள் கூட்டம். தாவணியும் சுடிதாருமாய்.. சத்தியமாய் திருவிழாவுக்கு வந்தவர்கள் தான். எங்களுக்குப் பின்னே அந்த ஊர்ப் பயல்க... எனக்குத்தான் வயிற்றைக் கலக்க ஆரம்பித்தது. என்ன வம்பிளுப்பான்களோ..?

எங்களுக்குப் பின்னால் வந்தவனில் ஒருவன் கொஞ்சம் முன்னே சென்று ஒரு பெண்ணின் துப்பட்டாவை இழுத்துவிட்டு ஓடிவிட்டான். அந்தப் பெண்ணோ திரும்பிப் பார்க்க, அவர்களுக்குப் பின்னே நாங்கள். எங்களுக்கோ தர்மசங்கடமாயிற்று.
பேசாமல் நடந்து வந்தோம். மறுபடியும் அதே வேலையைச் செய்தான். இப்போது அந்தப் பெண், அவள் அம்மாவின் காதில் ஏதோ சொல்ல ஆரம்பித்தாள்.

அந்தம்மா திரும்பி, "என்னப்பா சும்மா வர முடியலையா? பாத்தா படிக்கிற பையங்க மாதிரி இருக்கு. நான் போலிச கூப்பிடவா..?" என்றாள். இப்போது சேகரால் சும்மா இருக்க முடியவில்லை.

"நாங்க இல்ல.. இந்தா எங்க பின்னாடி வர்ராங்கள்ளா அவங்க தான். அந்தா அவன் தான் இழுத்தது." இப்போது அவர்கள் சேர்ந்துகொண்டார்கள்.

"ஏல நீங்க செய்துட்டு எங்கள சொல்றீங்களா? பல்ல ஒடப்பேன்."

"நீங்க குளிக்கிற இடத்திலயும் கலாட்டாப் பண்ணீங்க. வம்பிளிக்காம போங்க.." செல்வம் பதிலுக்கு எகிற...

"எல நாங்க யாருன்னு தெரியுமால?"

"தெரியும். அதுக்காக எது செஞ்சாலும் பாத்துட்டு சும்மாயிருக்கச் சொல்றீயா?"

"என்ன ரொம்ப பேசுற..!" - ஒருவன் ஓடிவந்து செல்வத்தை அடித்தான். அந்தப் பெண்கள் சண்டையைப் பார்த்து வேகமாய் நடக்க ஆரம்பித்தார்கள்.

இப்போது மற்றவர்களும் சேர்ந்து அடிக்க ஆரம்பித்தார்கள். இதற்குமேல் பொறுத்தால் சரி வராது. நான் சைக்கிளில் வைத்திருந்த ஸ்டெம்ப்-பை எடுத்தேன். அவர்கள் கையில் வேறு ஆயுதம் ஏதும் இல்லை. எங்களை விட நாலைந்து பேர் அதிகம், அவ்வளவே. யார், எந்த இடம் என்று பார்ககவில்லை. அடி பின்னியெடுத்துவிட்டேன். எனக்கே புரியவில்லை. இந்த தைரியம் எங்கிருந்து வந்ததென்று..! அதற்குள் கூட்டம் கூடிவிட்டது. திருவிழா பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸ்காரர்கள் ஓடிவந்து சண்டையை விலக்கினார்கள்.

"எல இன்னொருவாட்டி எங்க கிட்ட நீங்க சிக்காமலா போயிடுவீங்க. அப்ப பாத்துக்கிறோம்.." - அடிபட்ட வேதனையிலும் அவமானத்திலும் அவர்கள் முணகிக் கொண்டே கலைந்தார்கள்.

"நல்ல வேல செஞ்சடே.. நீ மட்டும் ஸ்டெம்ப எடுக்கலைன்னா, நம்மள இன்னும் பதம் பாத்திருப்பானுங்க."

"உனக்கெப்படிடே தைரியம் வந்திச்சி. அதான் ஆச்சரியமா இருக்கு!"

எங்களுக்கு இப்ப டீ குடிக்க மூடு இல்லை. வீட்டுக்குக் கிளம்பினோம்.

*

விநாயகமும் பாலாவும் வாசலில் வந்து நின்றார்கள். சைக்கிளின் பெல் சத்தம் கேட்டது. முன்னறையில் அப்பா பேப்பர் திருத்திக் திருத்திக்கொண்டிருந்தவர் ஏறிட்டு பார்த்தார். பார்வையிலேயே கேள்வி!

"மாட்ச் இருக்கு.. போயிட்டு வர்ரேன்.."

அவர் பதிலுக்கு நான் காத்திருக்கவில்லை. அவருக்கும் என்ன மூடோ, மீண்டும் திருத்தத் தொடங்கிவிட்டார். ஒழுங்கா எழுதாதவன் பாடு திண்டாட்டம் தான், எத்தனை மார்க் போடுவாரோ.. போ..!

"இன்னைக்கு மேட்ச் எங்கடே..?" - கொஞ்சம் மெதுவாகவே கேட்டேன்.

"சொக்கலால் ஸ்கூல் க்ரவுண்ட்ல. பெர்மிஷனெல்லாம் வாங்கியாச்சி. கிளம்பலாமா?" வீட்டில் கிடந்த ஸ்டெம்ப், பேட் எல்லாம் எனது சைக்கிளில் ஏறியது.

*

ஸ்கூல் கிரவுண்ட்.

அதிக கூட்டமில்லை. திருவிழா காலமாயிற்றே, கொஞ்ச பசங்கதான். இன்னைக்கி ஒரு டீமோடு தான் விளையாட்டு. எதிர் டீமில் உள்ள சிலரைப் பார்த்ததும் எனக்கு விளையாடுற மூடே போச்சி.

காலையில எங்ககிட்ட ஆத்துல வம்பிளுத்தவனுங்களாசே..!

கும்பலா வேற வந்திருக்கானுங்க. சரி பாத்துக்குவோம், என்ன நடக்குதுன்னு...

நாங்க டாஸ் வென்றோம். பேட்டிங் நாங்கள். அவர்கள் மைதானத்துக்குள் போனார்கள். அவனுங்கள பாத்தா ஏதோ ஸ்ரீலங்கா டீம்காரனுங்கள பாத்த மாதிரி எனக்குப் பத்திக்கிட்டு வந்தது. நாற்பது ஓவருக்குள் நாங்கள் முந்நூறுக்கும் அதிகமான ரன் எடுத்துவிட்டோம். இப்போது எனது முறை வந்தது. ஏற்கனவே மூடவுட்டாகிப் போன எனக்கு இருபது ரன்னுக்கு மேல எடுக்க முடியவில்லை. க்ளீன் போல்ட். கொஞ்சம் தள்ளி நின்ற கூட்டத்தில் இருந்து பயங்கர விசிலும் கூச்சலும். எனக்குப் புரிஞ்சிபோனது. அந்தப் பயல்கள் தான். நான் வெளியே வந்தேன்.

"என்னடே இப்படி சொதப்பிட்ட..."

"ஏ வேணும்னு அவுட் ஆவாங்களா என்ன..?"

"இல்லடே... நீ எப்படியும் ஒரு ஐம்பது ரன்னாவது எடுப்பேன்னு நினைச்சேன். அங்க பாத்தியா. நீ அவுட்டானதும் போட்ட சத்தத்த.."

"ம்ம்ம் கவனிச்சேன். சரி விடு. அதான் முந்நூறுக்கு மேல எடுத்தாச்சே. அவங்களால நிச்சயமா ஜெயிக்க முடியாது. கவலப்படாதே..."

ஒரு வழியாக ஐம்பது ஓவரும் தீர்ந்தது. அவர்கள் பேட்டிங் செய்ய வந்தார்கள். நாங்கள் ஜெயிக்கணும் என்பதைவிட அவர்களைத் தோற்கடிக்கணும் என்ற வெறியே எங்களுக்கு அதிகம் இருந்தது. நாங்கள் அருமையாக வீயூகம் அமைத்து நின்றோம்.

முதல் ஓவரிலேயே ஒருத்தன் அவுட். அதுவும் அவர்கள் டீமில் முக்கியமான ஆள். அவனை பஸ்சில் பார்த்திருக்கிறேன். பாளையங்கோட்டையில் படிக்கிறான். பக்கத்து காலேஜ். ஒரே ஒரு நோட்டு மட்டும் வைத்திருப்பான், அதையும் பேன்ட் பாக்கட்டில் சுருட்டி வைத்திருப்பான். நான் தான் ஒரு பொதிய முதுகில சுமந்துகிட்டு பஸ்ஸில போவேன். என்னப் பாத்ததும் எங்க காலேஜ கேலி செய்ய ஆரம்பிப்பான். அது அவனுக்கு அல்வா சாப்பிடுற மாதிரி.

தம்பி எந்தக் ஸ்கூல்டே.." - நாலு பொம்பளப் பிள்ளைங்க முன்னாடி வேணும்னே கேப்பான். எதுக்கு வம்புன்னு நான் பதிலேதும் சொல்லாம இருப்பேன். இன்னைக்கு அவன் சீக்கிரம் அவுட் ஆனதில் எனக்கு சந்தோஷம் தான்.

விக்கெட்டுகள் வேகமாய் விழ ஆரம்பித்தன. இனி தல கீழ நின்னாலும் ஜெயிக்க முடியாது. அவர்களுக்கே நம்பிக்கை போயிருக்கணும். வால நீட்ட ஆரம்பிச்சிட்டானுங்க. வெளியே இருந்து கல்லும் மண்ணுமாய் வந்து விழ ஆரம்பித்தது. கிரவுண்டில் நிற்க முடியவில்லை. எல்லோரும் சேர்ந்து அம்பயரிடம் போனோம். அவரு யாரு..? எங்கள விட
கொஞ்சம் பெரியவர். படிச்சி முடிச்சிட்டு வேல தேடிட்டிருகாரு.

"அண்ணே... பாருங்கண்ணே, கிரவுண்ட்ல நிக்க முடியல. கல்லெடுத்தடிக்கிறாங்க.."

"ஏல யாருல அது..? வம்பு பண்ணாம வெளிய போங்க. ஏ.. தம்பி, அவங்க உங்க கூட வந்தவங்களா? கொஞ்சம் சொல்லுப்பா.."

"நாங்கதான் வம்பிளுத்தோம்னு எவஞ்சொன்னான்..?" பதிலுக்கு கூட்டத்திலிருந்து குரல்கள் ஒரு சேர வந்தது.

பேசிக்கொண்டிருக்கும் போதே மீண்டும் கல்லும் மண்ணும் வந்து விழுந்தது. எவனோ ஓடிவந்து ஸ்டெம்பை உருவினான். என்ன ஏது என்று யோசிப்பதற்குள்ளே கலாட்டா ஆரம்பித்தது. எனக்குப் புரிந்து போனது. காலையில் போட்ட சண்டையின் எதிரொலி. எங்களை அடிக்கத்தான் வந்திருக்கிறார்கள். அதற்கு கிரிக்கெட். அதிலும் முக்கியமாக என்னைக் குறிவைப்பார்கள்.
நான் சுதாரிப்பதற்குள் என் பின்தலையில் யாரோ அடித்தார்கள். நான் வலிதாங்காமல் தலையில் கைவைத்தேன். நல்ல அடி.. கைமுழுதும் ரத்தம் வழிந்தது. நானும் என்ன சும்மாவா இருக்க முடியும்? முடிந்தவரை நானும் திருப்பியடித்தேன். எத்தனை பேருக்கு ரத்தக் காயம் என்பது போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன பிறகே தெரிந்தது.

*

போலீஸ் ஸ்டேஷன். அடிதடி கலாட்டா என்பதால் இரண்டு பக்கத்து ஆட்களும் திரண்டிருந்தார்கள். இந்த இரண்டு ஊர் பிரச்னை சாதிப் பிரச்சினையாகிவிடக் கூடாதே என்ற கவலை இன்ஸ்பெக்டர் முகத்தில் தெரிந்தது. அவர் பேச ஆரம்பித்தார்.

"என்னப்பா.. சாதாரண விளையாட்டுப் பிரச்னை. இதப் போய் இப்படி ஒருத்தன ஒருத்தன் அடிச்சி ரத்தகாயத்தோட வந்திருகீங்க." இங்கேயும் சேகர்தான் வாயைத் திறந்தான்.

"சார்.. காலையில இருந்து அவங்கதான் வம்பிளுத்துகிட்டே இருக்காங்க." அவர்கள் என்ன சும்மா இருப்பார்களா என்ன..?

"அப்படியெல்லாம் இல்ல சார். விளையாட்ட பாதியில நிறுத்தி கலாட்டாவ ஆரம்பிச்சதே அவங்கதான்."

இன்ஸ்பெக்டர் கொஞ்சம் கோபமாக, "என்னப்பா.. இப்ப யார் முதல்ல வம்பிளுத்ததுன்னு ஆராய்ச்சி பண்ணவா இங்க உங்கள கூப்பிட்டிருக்கோம்? ஒழுங்கு மரியாதையா சமாதானமாப் போறீங்களா.. இல்ல இங்க நாலு பேரு அங்க நாலு பேருண்ணு எப் ஐ ஆர் போட்டு அம்பாசமுத்திரம் கோர்ட்ல கொண்டுபோய் நிறுத்திடவா? இரண்டு ஊர்க்காரர்களும் முடிவு பண்ணிச் சொல்லுங்க..." என்றார் தீர்க்கமாக. அப்பா குறுக்கிட்டார். அவரோடு அந்த ஊர்ப் பெரிசுகள் சிலரும் சேர்ந்துகொண்டார்கள்.

"வேண்டாம் சார். சின்னப் பிரச்னை. இந்த அளவு போயிருக்க வேண்டாம். கொஞ்சம் கண்டிச்சி விட்டுருங்க. அதோட எல்லாம் சின்னப் பசங்க, படிக்கிற பசங்க."

"சார்வள் சொல்றது சரிதான். இதுல உங்க பையனும்லா இருக்கான் போல." இன்ஸ்பெக்டர் இப்படிச் சொல்லவும் அப்பா என்னைப் பார்த்து முறைத்தார். ஒருவழியா பேசி, இனி சண்டை போடமாட்டோம் - கோர்ட் கேஸ் எதுவும் வேண்டாம் என்று போலீஸ் ஸ்டேஷனிலேயே எழுதிக் கொடுத்து பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வந்தோம்.

வெளியே வந்ததும் எல்லோரும் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்களுக்குப் பதில் சொல்லிச் சொல்லியே எனக்கு அடிபட்ட இடம் இன்னும் வலித்தது. இன்னமும் கூட அந்த ஊர்ப் பசங்க அங்கன கூடி நின்னு, அதுவும் என்னைக் காட்டிப்
பேசிறாங்க..!

அதோ... அதுல முருகன், கதிரேசன் என் கூடப் படிக்கிறவங்க. நல்ல நண்பர்கள் தான். என்ன சொன்னான்களோ, இருவரும் என்னை நோக்கி வந்தார்கள்.

"என்ன மச்சான் இப்படி? ஒரு வார்த்தை எங்ககிட்ட சொல்லியிருக்கக் கூடாதா? இவ்வளவு தூரம் ஆயிருக்காதே."

"சத்தியமா இப்படி நினைக்கல. அவங்க உங்க ஊருன்னு தெரியும். உங்க சொந்தக்காரங்களா..?"

"ஆமாம். சொந்தக்காரங்க மாதிரி. எங்க சாதிக்காரங்க. என்ன செய்ய சொல்ற... எங்க போயி ஏழரைய இழுத்தாலும் நாங்களும் வந்துத் தொலைக்க வேண்டியதிருக்கு. சரி, இனி ஏதுன்னாச் சொல்லு. நாங்க பாத்துக்கிறோம்." முருகனும் கதிரேசனும் எங்களிடமிருந்து விடைபெற்றனர். அதோடு அந்தப் பிரச்னை முடிந்து போனது எனக்கு!

*

டிசம்பர் இரண்டாவது வாரத்தில் பாளையங்கோட்டை, திருநெல்வேலி பகுதியில் கிறிஸ்துமஸ் களைகட்ட ஆரம்பித்துவிடும். நம்ம ஊர்ப் பக்கம் கொஞ்சம் லேட் தான்.

அன்றைக்கு ஆற்றங்கரையில் மீட்டிங்கில் ஒரு புதிய முடிவு எடுத்தோம். பாளையங்கோட்டை போலவே நம்ம ஊரிலும் கிறிஸ்துமஸ் தாத்தா வேஷம் போட்டு அசத்தினால் என்ன? எல்லோரும் சம்மதம். சேகருக்கும் செல்வத்துக்கும் குஷி, வீடுவிடாய் ஜொள்ளு விட முடியுமே. ஏற்பாடு மும்முரமானது. கிடைக்கும் கலெக்ஷனை அனாதை இல்லத்துக்கு என முடிவானது.

அந்த நாளும் வந்தது. வலம் வர தொடங்கினோம். கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போட்ட மூவரும் யார் என்பது தெரியாத வகையில் ரகசியம் காக்கப்பட்டது. ஊர்ப் பெரிசுகளுக்கும், வாண்டுகளுக்கும் இது புது அனுபவம். எல்லாம் பல்லைக் காட்டியபடி வந்து நின்றார்கள். நம்ம ஊரில் எதிர்பார்த்ததை விட அமோக வரவேற்பு.

பக்கத்து ஊர்... ஏற்கெனவே சண்டைபோட்ட ஆட்கள். தெருக்களும் அவ்வளவு பழக்கமில்லை. பார்வைகளும் விநோதமாத் தெரிந்தது. இரண்டு தெருவைச் சுற்றியாச்சி. மூன்றாவது தெருவுக்குப் போகணும். தூரத்தில் அவர்கள் தெரிந்தார்கள். போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்துக்கு வந்தவர்கள்.

அய்யோ இன்னுமா அத மறக்காம இருக்காங்க..? தெரியலையே.. வம்பில்லாம் முடியணுமே...

தெருமுனையிலே பேண்ட் வாசிக்க கிறிஸ்துமஸ் தாத்தா வேஷம் போட்டவர்கள் அங்கே ஆடிக் கொண்டிருந்தார்கள். சுற்றிவந்த
சின்னப் பசங்களுக்கு சாக்லேட் கொடுக்க விசில் சத்தம் பறந்தது. சரி மேற்கொண்டு போகலாம் என்று முன்னேறியபோது...

"ஏ... நில்லுங்கப்பா. இது என்ன புதுசா..."

"இதெல்லாம் உங்க ஊர்ல, உங்க தெருவில வச்சிக்கோங்க என்ன.. இங்க வேண்டாம்..."

"யாரக்கேட்டுப்பா இங்க வந்தீங்க.. பேசாம திரும்பிப் போங்க.."

ஆளாளுக்கு பேச, எங்களுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. எங்களோடு பெரியவர்கள் யாரும் வரவுமில்லை.
'இதெல்லாம் வேண்டாத வேலை' என்று ஏற்கனவே சொல்லிவிட்டார்கள். அதிலும் சிலர் ஒருபடி மேலே 'போய் ஏற்கனவே உங்களால சாதிச் சண்ட வரப் பாத்திச்சி. இப்ப மதப் பிரச்னய உண்டாக்கப் போறீங்களா? சும்மாக் கிடக்க முடியல என்ன?'
என்று சொல்ல, எப்படியாவது இதைச் செய்து காட்டிவிடவேண்டும். சிலர் வாய் வச்சதுபோல ஏதாச்சும் நடந்திடுமோன்னு எனக்குப் பயாம் வேறு.

கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் மூவரும் ஆடிக்கொண்டே மேல நடக்க ஆரம்பித்தார்கள். கோபமாய் நின்றிருந்த சிலர் அவர்களைத் தடுத்தார்கள். அதில் ஒருத்தன் அவர்கள் சட்டையைப் பிடித்து இழுத்தான். முகமூடிய ஒருத்தன் கழட்ட...

உண்மையச் சொல்லணும்னா எல்லோரும் அப்படிச் சண்டைக்கு வரவில்லை. ஒரு சிலர்தான். அதற்கும் அவர்களுக்குக் காரணம் இருந்தது. அது பழைய பகை.

இப்போது பேண்ட் வாத்தியம் நின்றது. தாத்தா வேஷம் போட்டவங்களும் விடுற மாதிரி தெரியல. ஆட்டமும் நிற்கவில்லை. இது அவர்களுக்கு எரிச்சலைத் தந்திருக்க வேண்டும். தள்ளிவிட வந்தபோது மூவரும் தங்கள் முகமூடியைக் கழட்டினார்கள்.
வந்தவர்கள் ஒரு கணம் திகைத்தார்கள்.

இதுவரை வேற்று ஆளாய்த் தெரிந்தவர்களை கொஞ்சம் நட்போடு பார்த்தார்கள். இனி கிறிஸ்துமஸ் தாத்தாக்களை அவர்களால் தடுக்க முடியாது. ஏன்னா அவங்க அதே தெருவைச் சேர்ந்த முருகன், கதிரேசன், பாலாவாயிற்றே..!

மீண்டும் பேண்ட் சத்தம்... இப்போது எல்லோரும் ஆட்டத்தில் கலந்தார்கள். விசிலும் புழுதியும் பறக்க ஊர்வலம் முன்னேறியது... முகமூடியில் கிறிஸ்துமஸ் தாத்தா சிரித்துக் கொண்டிருந்தார்.

சரி, இவ்வளவு சொல்ற நான் யாருன்னு நீங்க கேட்கவேயில்லையே...

என் பெயர் ஜாகீர் ஹுசைன்.

Tamil English  
(tamil typing : ammaa = அம்மா, vikatan = விகடன்)
 Name
  E-Mail
  Comment
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவுக்கு நன்றி. நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும். காத்திருக்கவும்)
Click Photo To View Profile    
Name
Comments
Edwin Daniel
Great. Such a story is surely needed for today's socitey. I appreciate Mr. Jahir Hussein.

229 day ago | Report abuse

For contents & Feedback: youthful@vikatan.com I For technical issues : webmaster@vikatan.com I For Advt: dotcom@vikatan.com
Copyright © 2008 Vikatan.com Pvt Ltd. all rights reserved.