|
எஸ்.கலீல்ராஜா, படங்கள் :கே.ராஜசேகரன்

"எழுபதுகளில் இந்தியாவே வறுமையில தவிச்சுத் திண்டாடிட்டு இருந்தப்போ, நான் பிறந்தேன். திருநெல்வேலி பக்கத்துல ஆரைக்குளம்தான் சொந்த ஊர். அப்பா லாரி டிரைவர். அம்மா இல்லத் தலைவி. நாலு தங்கச்சிங்க. அவ்வளவு வறுமையிலும் தாத்தா, அப்பான்னு எல்லாருக்கும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருந்தது. எனக்கும் அந்தப் பழக்கம் அப்படியே தொத்திக்கிட்டது. பள்ளிக்கூடத்துல சுமாரான மாணவன்தான். ஆனா, எப்பவும் லைப்ரரியில்தான் இருப்பேன். நேசிச்சு வாசிச்ச ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு அனுபவத்தைக் கொடுத்தது.
அப்பாவின் வேலை, சென்னைக்கும் திருநெல்வேலிக்கும் ட்ரிப் அடிச்சுட்டே இருந்ததால இடப்பெயர்தலும் பயணங்களும் பழக்கமாச்சு. அப்பாவுக்கு நான் பத்திரிகையாளர் ஆகணும்னு ஆசை. அவருக்காகவே ஜர்னலிஸம் படிச்சேன். படிப்பு முடிஞ்சதும் சென்னை யிலயே நல்ல சம்பளத்தில் வேலை கிடைச்சது. ஆனா, நாலு தங்கச்சிகளை இன்னும் சீக்கிரம் கரையேத்தணுமேன்னு பாம்பே கிளம்பினேன். அங்கே முன்னணி ஆங்கில நாளிதழில் கிளார்க் மாதிரி ஒரு வேலை. ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்க வெறுப்பா இருந்தது.ஆனால், 'அடுத்து என்ன?'ங்கிற கேள்விக்கான பதிலும் என்கிட்ட இல்லை.
பைபிளில், 'பறவைகள் விதைப்பதும் இல்லை... அறுப்பதும் இல்லை'ன்னு ஒரு வாசகம் வரும். அது மனசுக்குள்ள பலமா எதிரொலித்துக்கொண்டே இருந்ததால், ஒரு நாள் சட்டுனு வேலையை விட்டுட்டேன். பிரின்டர்ஸ் ஆர்டர் எடுத்தேன். விளம்பர ஏஜென்ஸி, ஹோட்டல், ஐஸ்கிரீம் பார்லர்னு என்ன என்னவோ பண்ணேன். எல்லாமே தரமா பண்ணேன். ஆனா, வெற்றி கைக்கு எட்டலை. அப்பப்போ ஊருக் குப் போய் அம்மாகிட்ட பணம் கேட்பேன். நான் ஜெயிப்பேனான்னு தெரியலைன்னாலும், என் மேல இருந்த நம்பிக்கைக்காக நகையைக் கழட்டிக் கொடுத் தாங்க அம்மா. 'உங்க பையன் என்ன பண்றான்?'னு யாரும் கேட்டா, 'அவன் புத்திசாலி. சீக்கிரமே பெரிய ஆளா வருவான்'னு மட்டும் சொல்வாங்க.
அம்மாவுக் காகவாவது ஜெயிக்கணும்னு வெறி வரும். ஆனா, பாம்பே போய் இறங்கினதும் அதெல்லாம் மறந்துரும். ஏதாவது புதுசா டிரை பண்ணி அது ஃப்ளாப் ஆனதும் தான் திரும்ப அம்மா ஞாபகம் வரும். அந்த இலக்கற்ற பயணம்தான் எனக்கு அனுபவங்களையும் நல்லநண்பர் களையும் கொடுத்தது.
ஒரு முறை என் குஜராத்தி நண்பர் ஒருவர் சில இயந்திரங்களை விற்க முயற்சி பண்ணார். இயந்திரங்களைப் பார்த்தவங்க எல்லாருமே, ஒரே ஒரு குறிப்பிட்ட மெஷினை மட்டும் மனசுல வெச்சுக்கிட்டு, எல்லா மெஷினுக்கும் 85 ஆயிரம் ரூபாய் வரை விலைக்குக் கேட்டாங்க. ஏதோ யோசிச்சவர், 'விற்க விருப்பம் இல்லை'னு சொல்லிட்டார். நானே வெறுத்துப் போயி, 'வந்த விலைக்குத் தள்ளிவிட வேண்டியதுதானே'ன்னு கேட்டேன். 'அந்த ஒரு மெஷின் எல்லோருக்கும் ரொம்பப் பிடிச்சிருக்கு.
ஆனா, அந்த ஒரு மெஷினுக்காக மத்த எல்லா மெஷினுக்கும் நல்ல விலைகொடுக்க யாருக்கும் மனசில்லை'ன்னு சொன்னவர், அந்த ஒரு மெஷினை மட்டும் வேற ஒரு அறையில்வெச்சார். அடுத்ததா வந்த ஒருத்தர், மத்த மெஷின்களைப் பார்த்துட்டு 90 ஆயிரம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கிட்டார். பிறகு, அந்த மெஷினைக் கொண்டுவந்தார். இன்னொருத்தர் அதை 20 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிக்கிட்டார். தனித்தனியா வித்ததுல 30 ஆயிரம் ரூபாய் லாபம். 'எதையும் மாத்தி யோசி. அப்பதான் ஜெயிக்க முடியும்'னு சொன்னார். பளார்னு கன்னத்துல அறைஞ்ச மாதிரி இருந்தது அந்த அட்வைஸ்.
அடுத்து, சேனலுக்கு நிகழ்ச்சிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். கமல் தங்கச்சி நளினியைப் பேட்டி எடுத்துட்டு இருந்தாங்க. பேட்டி எடுத்தவர் ரொம்ப சாதாரணமான கேள்விகளா கேட்டுட்டு இருந்தார். என்னால சும்மா இருக்க முடியாம... நான் படிச்ச, கேள்விப்பட்ட விஷயங்களைக் கேள்வியா மாத்தினேன். நளினி உற்சாகமா பதில் சொன்னாங்க. நிகழ்ச்சி முடிஞ்சதும் என்கிட்ட வந்த தயாரிப்பாளர், 'ஷோ நடக்கும்போது டைரக்டரை ஓவர்லுக் பண்ணக் கூடாது. ஆனா, உன் கேள்விகள் நல்லா இருந்தது. இனிமே, நீதான் இந்த ஷோவுக்கு டைரக்டர்'னு சொல்லி, அட்வான்ஸ் கொடுத்தார். வாழ்க்கையோட முதல் வெற்றி. 'தயங்கி நின்னா ஜெயிக்க முடியாது'ங்கிற உண்மை புரிஞ்சது.
உடனே சென்னைக்குக் கிளம்பி வந்தேன். 'பிசினஸ் மகாராஜாக்கள்'னு ஒரு புத்தகம் படிச்சேன். அதை அப்படியே ஒரு நிகழ்ச்சி ஆக்கலாமேன்னு தோணுச்சு. கடன் வாங்கி நாட்டுக்கோட்டை செட்டியார்கள்பத்தி ஆராய்ந்து ஷூட்டிங் ஆரம்பிச்சுட்டேன். அதுக்கப்புறம் 'பேங்க் ஆஃப் பரோடா'வில் லோன் கேட்டு, அதன் ஜி.எம்மைச் சந்திச்சேன். 'இந்த புராஜெக்ட் நல்லா இருக்கு. எப்போ எடுப்பீங்க?'ன்னு அவர் கேட்டார். 'எடுக்க ஆரம்பிச்சுட்டேன்'னு சொன்னேன். அந்த ஒரு வரி பதில் அவருக்குப் பிடிச்சிருந்தது. உடனே, லோன் சாங்க்ஷன் பண்ணிட்டார். 'சொல்லிட்டு இருக்கிறதை விட செய்ய ஆரம்பிச்சிரணும்'னு புரிஞ்சுக்கிட்டேன்.
அப்புறம், விஜய் டி.வி-யில் 'கதையல்ல நிஜம்' டீமில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்புறம் 'கேள்விகள் ஆயிரம்'. லைவ் புரொகிராமில் இயக்குநர் பளீர்னு கேள்விகள் கேட்கலை. என்னைவிட சீனியர்கள் தயங்கி நிற்க, நான் கேள்விகள் கேட்டேன். இந்த முறையும் டைரக்ஷன் போஸ்ட் தேடி வந்தது. 'இனிமே நான் சேனலில் தவிர்க்க முடியாத ஆளா இருக்கணும்'கிற வெறி மட்டும் இருந்தது. காலையில் ஒரு நிகழ்ச்சி. சாயங்காலம் வேற நிகழ்ச்சி. ரெண்டு வருஷம் நிக்காம ஓடினேன். லோ-பிரஷரில் மயக்கம் வந்து விழுற அளவுக்கு உழைச்சேன்.
சென்னை வர்றதுக்கு இந்தியா முழுக்கச் சுத்தி யிருக்கேன். மனிதர்களையும், புத்தகங்களையும் படிச்ச அனுபவம் சென்னையில் அழகா கைகொடுத்தது. அனுப வங்களை முதலீடு ஆக்கினா அழகா ஜெயிச்சிரலாம்னு நம்பிக்கை வந்தது. மனைவியோட நகைகளை அடகு வெச்சு புரொடக்ஷன் கம்பெனி ஆரம்பிச்சேன்.
'சங்கமம்', 'நீயா... நானா?', 'நடந்தது என்ன?', 'இப்படிக்கு ரோஸ்', 'ரோஜாக்கூட்டம்'னு பல நிகழ்ச்சிகளை ஆரம்பிச்சேன். வழக்கமான ரூட்டைவிட்டுக் கொஞ்சம் மாத்தி யோசிச்சதால் எல்லாமே ஹிட். என்கிட்ட இப்போ 130 பேர் வேலை பார்க்குறாங்க. தமிழ் போக கன்னடத்திலும் நாலு ஷோ பண்றேன். கஷ்ட காலத்தில் எனக்குச் சோறு போட்ட நண்பர்கள் என்கூடவே இருக்காங்க. எல்லா கடனையும் அடைச்சாச்சு. ஆனா, என் வெற்றியைப் பார்க்க என் அப்பா, அம்மா மட்டும் இல்லை. நல்ல நண்பர்கள் சுத்தி இருக்குற தைரியத்தில் என்னை விட்டுட்டுப் போயிட்டாங்கன்னு நினைக் குறேன். நல்ல நண்பர்கள், நல்ல புத்தகங்கள், நல்ல பயணங்கள்... இதுதான் என் வாழ்க்கை. நீங்க நல்ல விஷயங்களைத் தேடித் தேடிப் போகும்போது வெற்றி உங்களைத் தேடி வரும். எந்த விஷயத்துக்கும் பயப்படாதீங்க. ஏன்னா, எதுவும் தெரியாதவன்தான் தயங்குவான்... பயப்படுவான்!"
மூலம் : ஆனந்த விகடன் |