|
- டி.எம்.ஃப்ராங்க
அ
கி.பி 2101, பிறக்கும் போதே போரோடு தொடங்கியது. உலகமெங்கும் ஆங்காங்கே தண்ணீருக்காக அடித்துக்கொண்டு சாகும் நாடுகளின் போரை எப்படி நிறுத்துவது என்பதற்காக ஐ.நா சபை தனது கூட்டத்தை அவசரமாகக் கூட்டியது. ஏழை நாடுகளின் தலைவர்கள் குளிக்க மறந்தாலும், மறக்காமல் குடிக்கத் தண்ணீர் மட்டும் எடுத்துக்கொண்டு ஐ.நா.வை நோக்கிப் பறந்தனர்.
ஆ
தமிழ்நாட்டின் பக்கத்து மாநிலங்களில் காடுகளும் அழிந்துபோய், மழை அளவும் குறைந்து நிலைமையை இன்னமும் மோசமாக்கியது. குடிக்கக் கூட தண்ணீர் தரமாட்டோம் என்று பிடிவாதம் பிடித்த மாநிலங்களை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்பது தெரியாமல் உச்ச நீதிமன்றம் விழி பிதுங்கி நின்றது.
தமிழ்நாட்டில் விளை நிலங்கள் எல்லாம் கான்கிரீட் காடுகளாயின. விவசாய நிலங்கள் இல்லை. இந்தியா முழுவதும் இதே நிலைமைதான். ரேஷன் கடைகளுக்கு வராதவர்களுக்கு அரசு கூடுதல் மானியம் கொடுத்தது. காலியாகக் கிடந்த மொட்டைமாடிகளெல்லாம் வயல் காடாகியது. மாடியை வெறுமையாக விட்டவர்களுக்கு ரேஷன், தண்ணீர் உட்பட எதுவும் கிடையாது என்று ஆணையிட்டது அரசு.
விளைபொருட்களை அரசே கொள்முதல் செய்து பொது விநியோகத் திட்டத்தில் அதை எல்லா மக்களுக்கும் கொடுத்தது. அரிசி, கோதுமை மற்றும் காணக்கிடைக்காத கத்தரி, வெண்டை மற்றும் கீரை வகைகளை வசதி படைத்தவர்களே வாங்கினர்.
பாரம்பரிய உணவுகளைத் தவிர்த்து அதற்குப் பதில் அந்தச் சுவையுள்ள மாத்திரகளை சாப்பிடுமாறு அரசு கேட்டுக்கொண்டது. சாதிச் சண்டைகளெல்லாம் மறைந்துபோய் இன்று தண்ணீருக்காக தென்மாவட்டங்களில் கலவரங்கள். துப்பாக்கிகளில் அதிக ரத்தம் வராததால் இப்போதும் திருப்பாச்சி அருவா தான் விருப்ப ஆயுதம்!
மணல் கொள்ளைக்காரகளுக்கு எங்குமே மணல் கிடைக்காமல் கடல் மணலை அள்ளலாமா என்று சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருந்தார்கள்.
இ
உச்ச நீதிமன்றத்தில் இன்று இறுதித் தீர்ப்பு வெளியாகிறது. மருதையா நம்பிக்கையில் காத்திருந்தார். சும்மாவா, ஐம்பது ஏக்கர் விவசாய நிலமாயிற்றே! பாகப் பிரிவினையில், போன தாலைமுறையில் நீதிமன்றம் போன வழக்கு இன்னும் முடிந்தபாடில்லை. வழக்கு தொடுத்த பங்காளிகள் ஒருத்தர்கூட இல்லை. எல்லோரும் பரலோகம் போயாயிற்று. போதாதற்கு அரசு வேறு அந்த நிலத்தை உரிமை கொண்டாடியது. நல்ல முடிவு வருமென்று நம்பினார் மருதையா. வந்தால், ஒரே வாரிசு முத்துவிடம் சொத்தை ஒப்படைத்துவிட்டு நிம்மதியாகக் கண்ணை மூடவேண்டியதுதான்.
நாட்டில் நிலவுகின்ற உணவுப் பஞ்சத்தைப் பார்த்து நீதிமன்றமும் ஒரு முடிவுக்கு வந்தது. விவசாய நிலத்தை மீண்டும் விவசாயத்துக்கே பயன்படுத்துவதாக இருந்தால் மருதையாவிற்கே உடனடியாக நிலத்தைத் திருப்பித் தர முன்வந்தது. மருதையா விவசாயம் செய்ய முன்வரவில்லையென்றால் அரசு அந்த நிலத்தையெடுத்துக்கொண்டு, அதற்கு ஈடாக பணத்தைக் கொடுக்கலாம் என்று தீர்ப்பளித்தது. தீர்ப்பைக் கேட்டதும் மருதையா, மகன் முத்துவைப் பார்க்க சோழவந்தானிலிருந்து சென்னைக்கு விரைந்தார்.
ஈ
சென்னை, மேம்பாலங்களால் மூடியிருந்தது. விமானங்களே பறவைகள். சிலசமயம் விமானங்கள் கூட வழி தவறி மேம்பாலங்களில் இறங்கி போக்குவரத்துக்கு இடையூறு செய்தன. மதுரையிலிருந்து இரண்டு மணி நேரத்தில் ரயிலில் வந்த மருதையாவுக்கு பெரம்பூருக்கு காரில் செல்ல இரண்டு மணி நேரமானது. மகன் முத்துவின் கார் ஒவ்வொரு சிக்னலைக் கடப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. சிக்னல்களில் காரின் கதவைத் தட்டி ஆங்கிலத்தில் சிலர் பிச்சை கேட்டனர். இன்னமுமா சாமி!? சிக்னலை மீறுகிறவர்கள் மீது நாற்றம் எடுக்கும் (கொஞ்சமாய் C4H9SeH கலந்த) வண்ணத் தண்ணீரை தானியங்கி இயந்திரம் ஓன்று பீச்சியடித்தது.
வண்ணக் கலவையோடு போன வண்டிகளை எதிரே காவல்துறையினர் மடக்கி வழக்கம் போல "எல்லாம்" சேர்த்து வசூலித்தனர். பல வசதிகள் செய்துகொடுத்தும், கடுமையான சட்டங்கள் பிறப்பித்தும் ஒன்றை மட்டும் இந்தியா முழுதும் மாற்ற முடியவில்லை. அது - "பயபுள்ளைக கண்ட இடத்துல உச்சா போயி ஊர நாறடிக்கிற சமாச்சாரத்தை!"
சத்தமேயில்லாமல் பயணித்த முத்துவின் கார் மேம்பாலத்திலிருந்தே நேரடியாக அந்த அடுக்கு மாடிக்குடியிருப்பிற்குள் நுழைந்தது. உடையை மாற்றிக்கொண்டு இருக்கையில் சாய்ந்தார் மருதையா.
"என்ன முத்து.. தீர்ப்பு நமக்கு சாதகமா வந்துவிட்டது. ஆனால் சில நிபந்தனைகள் இருக்கிறதே, என்ன செய்யலாம்? உன்னுடைய எண்ணம் என்னவோ?"
"நான் படிப்பை நிறுத்திவிடலாம் என்று நினைக்கின்றேன். படிப்பைவிட விவசாயம் நல்லதென்ற முடிவுக்கு வந்துவிட்டேன். நீதிமன்றத்தில் விவசாயம் செய்வதற்கான உறுதிமொழியைக் கொடுத்து நிலத்தை நாம் மீட்போம். நாம் காலகாலமாக செய்யும் தொழில் அதுதானே? நான் சொல்வது சரியா அய்யா?"
தமிழ் நாட்டில் பெரும்பாலோர் தூய தமிழில் பேசுவது போலவே அவர்களும் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.
"ஆனால் முத்து, நீ படிக்கிற படிப்பு மிக உயர்ந்த படிப்பாயிற்றே. எல்லோருக்கும் இந்தக் கல்விக்கான வாய்ப்பு கிடைக்காதே. அரிதாகக் கிடைத்த இந்த வாய்ப்பை விடுவானேன்?"
"இல்லை அய்யா, இன்றைக்கு யாருமே செய்யாத, செய்யத் தெரியாத விவசாயத்தை நான் செய்யலாம் என்றிருக்கிறேன். வருமானத்துக்கு வருமானம், அதோடு மக்களுக்கு சோரும் போடுகிறேன் அல்லவா? வள்ளுவன் வாக்கு இன்றைக்கும் பொருந்துகிறது தானே?!"
"ஆமாம். நீ சரியாகச் சொன்னாய். உனது வார்த்தைகள் உண்மையே.. வள்ளுவன் தீர்க்கதரிசி. உனது எண்ணம் போல மேற்கொண்டு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய். வாழ்த்துக்கள்!"
உ
சோழவந்தானில் உள்ள முத்துவின் பண்ணை நிலம் விதவிதமான விவசாயக் கருவிகளுடன் காத்திருந்தது. உழுவதற்கு, நடவுசெய்வதற்கு, களை பறிக்க என எல்லாம் இயந்திர மயம். அதை ரிமோட் மூலம் இயக்க உதவியாளன் மதி.
கொடைக்கானல் மலையடிவாரத்தில் கால்நடைகளை மேய்க்க ஹெலிகாப்டரில் மதியே சுற்றி வந்தான். அது போதுமே!
மதுரையைச் சேர்ந்த எழுபது வயதான சின்னத்தாயி விவசாய ஆலோசகராக உதவ முன்வந்தாள். மாதம் ஐந்து மணி நேரம் மட்டுமே வேலை, லட்சக்கணக்கான சம்பளங்களுடன். அவளுடைய வேலை... எப்போது விதைப்பது, நடுவது, களை பறிப்பது மற்றும் தண்ணீர் பாய்ச்சும் முறைகளைச் சொல்வது.
முத்துவும் இப்போது முழுநேர விவசாயி மாத்திரமல்ல, தாவிரவியல் ஆராய்ச்சியாளனாகவும் மாறிவிட்டான். மூன்றே வருடத்தில் காய்க்கும் தென்னையைப் போல மூன்றே வருடத்தில் ஐம்பதடி உயரம் வளரும் மரங்களை கண்டுபிடித்தான்.
நெல் மற்றும் கோதுமையின் முழு விளைச்சல் காலத்தை இருபது நாளாக்கினான். எல்லாம் சரி, ஆனால் நல்ல நிலம்? அதுதான் இல்லை! சரி இருக்கிற நிலத்தில் வைக்கலாம் என்றால் தண்ணீர்? இல்லாதது இயற்கையின் குற்றமல்ல! இங்கே இப்படியென்றால், ஜப்பானில் மூன்றடிக்குள் முழு வளர்ச்சியடைந்த யானையை வீட்டில் வளர்த்தனர். இதிலுமா போன்ஸாய்? அன்று தங்களை குள்ளமாகப் படைத்த இயற்கையை இன்று பழிவாங்குகிறார்களோ?
ஊ
இன்று அறுவடை நாள்!
முத்து தன் உதவியாளன் மதி வருவதற்காக காத்திருந்தான். வரிசையாக இரண்டு, மூன்று இயந்திரங்கள் காத்திருந்தன. அதோ தூரத்தில் மதியின் பென்ஸ் கார் தெரிந்தது. அவன் வந்ததும் ரிமோட்டை அவன் கையில் கொடுத்துவிட்டு, ஹெலிகாப்டரில் சுற்றி வரவேண்டியதுதான். வெளியே விவசாயத் துறை மந்திரி முதல் கலெக்டர் வரை காத்திருந்தனர். ஒப்பந்தப்படி இவன் ஐம்பது சதம் விளைச்சலைக் கொடுத்தால் போதும், ஆனால் அவர்கள் ஒரு எழுபது சதமாவது வேண்டும் என்று கெஞ்சிக்கேட்டுக் கொண்டிருந்தனர்.
இன்னும் இரண்டு மணி நேரத்தில் எத்தனை டன் அரிசி என்பது தெரிந்துவிடும். அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்றான். வயலையும், நெற்கதிர்களையும் பார்த்திராத ஒரு தலைமுறைக்கு, அறுவடை செய்வதை நேரில் ஒளிபரப்பு செய்ய தொலைக்காட்சிச் சேனல்களின் சாட்டிலைட்கள் வானத்தில் வல்லூருகளைப் போல வட்டமிட்டுக்கொண்டிருந்தன.
தூர்தர்ஷன் மட்டும் தனது வேனில் இருந்தபடியே காட்சிகளைப் பதிவு செய்யக்காத்திருந்தது, பாவம்! காகிதம் இல்லாமலேயே சுடச்சுட 'இ' விகடனில் கட்டுரைகளை கன்னியாகுமரியில் வாசித்துகொண்டிருந்தார் திருவாளர். வாசகர். மாலைப் பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்திகள் டிஜிட்டல் போர்டுகளில் ஓடிக்கொண்டிருந்தன. காகிதங்கள் காலி! காற்றில் எப்போதும் போல் இப்போதும் இளையராஜாவின் பாடல்கள்! அங்கே தலைநகர்...
எ
புது டெல்லிகளை கட்டியிருந்தது, ராணுவ அணிவகுப்புக்காக ஜனாதிபதி காத்திருந்தார். தேசியக்கொடி பட்டொளி வீசிப் பறந்துகொண்டிருந்தது. இந்திய - பாகிஸ்தான் எல்லையில் கங்கையாற்றில் எதிரி நாட்டு விமானங்கள் பறந்தபடியே திருட்டுத்தனமாக தண்ணீரைத் திருடிக்கொண்டிருந்தன.
எல்லா முக்கியமான அணைகளையும், நதிகளையும் ராணுவம் கைவசப்படுத்தியிருந்தது. சாட்டிலைட் கண்காணிப்பில் உஷாரன உளவுத்துறை ராணுவத்தை எச்சரிக்க, விண்ணில் நிறுத்தியிருந்த இந்தியப் போர் விமனங்கள் கங்கையை நோக்கி விரைந்தன.
செங்கோட்டையில் வீற்றிருந்த பிரதம மந்திரிக்கு உளவுத்துறை குறிப்பு அனுப்ப, அதை ஆளும் முழுமுதற் முற்போக்குக் கூட்டணியின் தலைவி ஸ்பெயின் நாட்டு மகள், இந்தியாவின் மருமகளுக்கு கொடுத்து விட்டு பணிவாகக் காத்திருந்தார், தலைவியின் முடிவுக்காக!
ஏ
நாடுகளிடையே நிலவும் தண்ணீர் தாவாவை தீர்க்க வழிதெரியாமல், முடிவெடுக்க முடியாமல் ஐ. நா சபைக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. உலகின் இருபெரும் வல்லரசாகிய இந்தியாவும், சீனாவும் இரு அணியாகப் பிரிந்து மோதிக்கொண்டன. பாவம் அமெரிக்கா!
ஐ
சோழவந்தானில் அறுவடையை முடித்த முத்துவை ஏற்றிச் செல்ல் அந்த குட்டி விமானம் உறுமிக்கொண்டிருந்தது. டெக்ஸாஸில் முத்துவின் காதலி தேகம் எங்கும் தமிழ் இலக்கியச் செழுமையோடு ஒயிலாகப் படுத்துக்காத்திருந்தாள், கையில் விலை உயர்ந்த எலுமிச்சைச் சாறு கோப்பையோடு! அருகில் தட்டு நிறைய எங்கேயும் கிடைக்காத சாத்தூர் வெள்ளரிப் பிஞ்சு!!!
*
|