சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்... இன்டர்நெட் தொழில்நுட்பம், டாட்காம் என்ற யுகத்தை உருவாக்கி, பரபரப்பாக ஐடியாக்களையும், ஐ.டி. கம்பெனி களையும் தொடங்கவைக்க அடித்தளமாக இருந்தது. கூகுளின் பெயர் பிரபலமாகியிருக்கவில்லை. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களைத் தொடங்கியவர்கள் அப்போது பள்ளிப் படிப்பையே முடித்திருக்கவில்லை. தொழில் முதலீட்டாளர்கள் பணத்தை வாரியிறைக்க, அதைப் பயன்படுத்தி, மாதந்தோறும் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. சிலிக்கான் வேலி மட்டுமல்லாமல், அமெரிக்காவின் பல இடங்களில் டாட்காம் காய்ச்சல் பரவியது. (இந்தியா அமெரிக்காவின் Y2K பழுதை நீக்கிய களைப்பில் இருந்து விடுபட்டு, ஐ.டி-யின் பல துறைகளில் அப்போது தான் நுழைய ஆரம்பித்தது. சில வருடங்களில் பிரமாண்டமாக வளர்ந்தது இந்தக் கட்டுரைக்கு அவ்வளவு முக்கியமில்லை!)
மிட்ச் மேட்டாக்ஸ், இந்தக் காய்ச்சலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஆசாமி. டாலஸ் நகரில் அப்போது இருந்த மிட்ச், ஒரு வருடம் முழுதும் வீட்டைவிட்டு வெளியே செல்லாமல், தேவையான அனைத்தையும் ஆன்லைனிலேயே ஆர்டர் செய்து, வெளிஉலகத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே தொடர்புகொண்டு வாழப்போவதாக அறிவிக்க, UPS, 3COM, Network Solutions போன்ற பெரிய நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு ஸ்பான்ஸர் செய்தன. இந்த ஒரு வருடத்தில் சட்டபூர்வமாகத் தனது பெயரை 'DotComGuy' என்று மாற்றிக்கொண்டதை, வடிவேலுவுக்குக் காமெடி டிராக் எழுதுபவர்கள் பயன்படுத்தலாம். அவரது வீட்டில் 24 மணி நேரமும் கேமரா மூலம் DotComGuy என்ன செய்துகொண்டு இருக்கிறார் என்பதை இன்டர்நெட் மூலமாகப் பார்க்கலாம்.
Fast forward. 10 years.... 2010
டாட்காம் யுகம் சில ஆண்டுகளிலேயே படுபாதாளத்தில் வீழ்ந்து போய், இணையம் 2.0 என்ற அடுத்த யுகம் பிரமிக்கத்தக்க சமூக வலைதள நிறுவனங்களை உருவாக்கி வருவதைப் பார்க்கிறோம். டாட்காம் கால அள வுக்குக் கோணங்கித்தனம் இல்லை என்றாலும், அவ்வப்போது சில ஸ்டன்ட்டுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. உதாரணத்துக்கு ஒன்று...
ஐந்து பத்திரிகையாளர்கள், பிரான்ஸ் பெரிகோர்ட் பிரதேசக் கிராமப்புறப் பண்ணை வீடு ஒன்றில் பிப்ரவரி ஒன்று முதல் தங்களை அடைத்துக்கொள்ளப் போகிறார்களாம். டிவி, டெலிபோன் எதுவும் இல்லாமல், ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் தளங்கள் மூலமாக மட்டுமே உலகைத் தொடர்புகொண்டு, இந்தத் தளங்கள் மூலமாக மட்டுமே செய்தி களைப் பெற்றுக்கொண்டு இருக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். சமூக வலைதளங்களின் ஆதிக்கமும், பயனும் எவ்வளவு தூரம் இருக்கிறது என்பதை அளந்தறியும் பரிசோதனை பற்றி http://news.ph.msn.com/sci-tech/article.aspx?cp-documentid=3807080 உரலியில் பாருங்கள்..
சென்ற இரண்டு வாரங்களின் இணைய இண்டஸ்ட்ரி நிகழ்வுகளை அலசலாம். முதலில் ஹைத்தி... ஜனவரி 12-ம் தேதி பூகம்பம் தாக்கிய இந்த கரீபியன் நாடு, வட - தென் அமெரிக்காவின் ஏழை நாடு. இங்கிருக்கும் சில சேரிப் பிரதேசங்கள் உலகிலேயே வறு மையானவை என்கிறது ஐக்கிய நாடு களின் ரிப்போர்ட். உலகம் முழுதும் பூகம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து கண்காணித்துப் பிரசுரிக்கும் அமெரிக்காவின் Geological Survey துறை ஜனவரி 12-ம் தேதி மாலை 4:53 மணிக்கு 7.3 அளவிளான பலமான பூகம்பத்தை சர்வதேச செய்தி நிறுவனங்களுக்குச் சில நிமிடங்களில் தெரியப்படுத்தியது. ஆனால், பூகம்பத்தைப்பற்றிய முதல் முக்கியத் தகவல்கள் வெளியுலகத்துக்குத் தெரியவந்தது ட்விட்டர் மூல மாகத்தான். பூகம்பம் நிகழ்ந்த சில நிமிடங்களில் ப்ரீடோ என்பவர் டிவிட்டிய, 'ஐயோ, பலத்த பூகம்பம் ஹைத்தியில்!' என்பதுதான் முதல் செய்தி. (http://twitter.com/fredodupoux) இவரைத் தொடர்ந்து பலரும் அளித்த ட்விட்டுகள் இந்தக் கோரச் சம்பவத்தின் விளைவுகளை உடனுக்குடன் தெரி யப்படுத்தின. பூகம்பத்தால் தொலைபேசி நெட்வொர்க்குகள் சேதமடைந்துவிட, இணையம் மூலமாகப் பேசும் தொழில்நுட்பமான ஸ்கைப் (www.skype.com) தான் உதவியது. இது மட்டுமல்லாமல், யூ டியூப்பில் மக்களால் (www.YouTube.com) பதிவேற்றம் செய்யப்பட்ட வீடி யோக்களை மட்டுமே சேட்டிலைட் சேனல்கள் சில நாட்களுக்குக் காட்ட வேண்டிய நிர்பந்தம். இணையம்தான் புதிய மீடியா என்பது சந்தேகம் இல்லாமல் மற்றுமொரு முறை நிரூபணமானது.
தகவல் பரிமாற்றம் மட்டுமல்ல... பூகம்பம் போன்ற பேரழிவுச் சம்பவங்களின்போது மற்றவர்களிடமிருந்து உதவி கேட்டுத் திரட்டப்படும் நிதியைத் தேவைப்படுபவர்களுக்கு கொண்டுசெல்வதற்குப் பல வாரங்கள் ஆகலாம். ஹைத்தியில் சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குள் கூகுள், ஹைத்திக்கு உதவுவதற்காக http://www.google.com/relief/haitiearthquake/ என்ற வலைப்பக்கத்தைத் தொடங்கி, முக்கியத் தகவல்களை அளித்ததோடு, இந்தப் பக்கத்திலேயே எளிதாகப் பணம் அனுப்பும் வசதியையும் கொடுக்க, மொபைல் அக்கார்ட் (www.mobileaccord.com) என்ற நிறுவனத்தின் குறுஞ்செய்தித் தொழில்நுட்ப உதவியுடன் ஒரே வாரத்தில் 20 மில்லியன் டாலர்களைத் திரட்ட முடிந்தது.
அடுத்தது, சீனா செய்துவரும் இணைய அடா வடித்தனமும் அதன் விளைவுகளும். பூகம்பம் நடந்த அதே ஜனவரி 12 அன்று, கூகுள் தனது நிறுவன வலைதளத்தில் முக்கியமான பதிவு ஒன்றை வெளியிட்டது. பதிவைப் படிக்க விரும்புபவர்கள் http://googleblog.blogspot.com/2010/01/new-approach-to-china.html உரலியைச் சொடுக்கவும். பதிவின் சுருக்கம் இதுதான்: சீனாவில் இருந்து இணையம் மூலமாக Cyber Attack எனப்படும் தாக்குதல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. கூகுள் நடத்திய விசாரணையில் வெளிவந்தவை திடுக்கிடவைப்பவை.
பொதுவாக இதுபோன்ற தாக்குதல்கள், ஒரு நிறுவனத்தின் இணையக் கட்டமைப்பைத் தகர்த்து, பலத்த பொருளாதாரச் சேதம் வர வழைப்பதாகவே இருக்கும். ஆனால், இந்தத் தாக் குதல்களின் நோக்கம்; அப்படியல்லாமல், மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் நபர்களைப் பற்றிய தகவல்களை அபகரிப்பதே.
கூகுள் மட்டுமல்லாமல், பிரபலமான இணைய நிறுவனங்கள் பலவற்றின்மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. இது இணையச் சுதந்திரத்துக்கு எதிராக எழுப்பப்பட்டு இருக்கும் தீவிரமான அச்சுறுத்தல். சீனாவின் இந்த நடவடிக்கை முதல் முறையல்ல.www.google.cn கூகுளின் சீன நாட்டு portal. மூன்று ஆண்டுகளுக்கு முன், இந்தத் தேடல் இயந்திரத் தளத்தில் குறிப் பிட்ட தகவல்களை தேடல் பதில்களில் (Search Results) கொடுக்கக் கூடாது; முடியாது என்றால் சீனாவில் இருந்து கூகுளை விரட்டிவிடுவோம் என்ற மிரட்டலுக்குப் பணிந்து, சீனாவுக்கென்று மட்டுமே சென்ஸார் செய்யச் சம்மதித்த கூகுள், இந்தத் தாக்குதல் சம்பவத்துக்குப் பின், இந்த சென்ஸார்ஷிப்பை ரத்து செய்துவிட, கூகுளுக்கு என்ன ஆகும் என்ற விவாதம் இணைய உலகின் பதிவுலகங்களில் பரபரப்பாக நடந்துவருகிறது!
- log off
முந்தைய அத்தியாயம் : வருங்காலத் தொழில்நுட்பம் 32 : இணைய இண்டஸ்ட்ரி போட்டிகள்!
|