|
பிப்.3,2010
குழந்தைத் தொழிலாளர்களின் அவலநிலையை எடுத்துரைக்கும் அமெரிக்க இயக்குனர் கிரேக் ஹெல்வேயின் இந்திப் படமான 'கவி' (Kavi), குறும்படம் பிரிவுக்கான 82வது ஆஸ்கர் விருதுகள் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
குனீத் மோங்கா, ஹரீஷ் அமின் மற்றும் ஹேல்வே ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள 'கவி', முழுக்க முழுக்க மும்பை அருகே படமாக்கப்பட்டது.
கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்ற காரணத்தினாலும் பள்ளிக்குச் செல்வதற்கு ஆசைப்படுகிறான், சிறுவன் கவி. ஆனால், செங்கல் சூளையில் வேலை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான்... இதுவே 'கவி' படத்தின் மையக்கதை. ஒவ்வொரு காட்சியும் குழந்தைத் தொழிலாளியின் வாழ்க்கையை மிக இயல்பாக பதிவுசெய்யப்பட்டிருப்பதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஸ்டூடன்ட் ஆஸ்கர் விருதை வென்ற இப்படம், ஆஸ்கர் விருதையும் வெல்லும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளது, 'கவி' படக்குழு.
தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழக மாணவரான ஹெல்வி, கவி படத்தை எடுப்பதற்காக இந்தியா வந்தபோது, அவரிடம் போதுமான நிதி இல்லை. குனீத் மோங்கா மற்றும் ஹரிஷ் அமின் ஆகியோர் முன்வந்ததால் கவி படத்தை எடுக்க முடிந்துள்ளது.
ஆங்கில சப்-டைட்டிலுடன் சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளைக் குவித்திருக்கும் இந்த இந்தி குறும்படத்துக்கு ஆன செலவு, ரூ.14 லட்சம். எட்டே நாட்களில் முடிக்கப்பட்ட படம் என்பது கூடுதல் சிறப்பு.
'கவி'யின் நோக்கம்...
கவி படத்தின் மூலம் தான் சொல்ல முனையும் நோக்கம் குறித்து அப்படத்துக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளக்கமாகவே விவரித்திருக்கிறார், இளம் படைப்பாளி கிரேக் ஹெல்வே.
"இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் சுமார் 3 கோடிக்கும் மேலானோர் அடிமைகளாக இருக்கிறார்கள் என்ற தகவலை அறிந்த போது அதிர்ச்சியுற்றேன். நவீன அடிமை முறையில் முக்கிய இடத்தில் இருக்கும் குழந்தைத் தொழிலாளர் அவல நிலை பற்றி ஆய்வுகளை மேற்கொண்டேன். இந்த நிலை குறித்து மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தச் செய்வதற்கான பங்களிப்பாக, கவி படத்தை எடுக்க முனைந்தேன். இந்த நவீன அடிமை நிலை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.
நவீன அடிமைத்தனத்தின் உண்மை நிலையை எடுத்துக்கூறும் படம் தான் 'கவி'. இப்படம் குறைந்தது 50 ஆயிரம் பேரையாவது சென்றடைய வேண்டும் என்பதே எனது இலக்கு. இதன் மூலம் உந்துதல் ஏற்பட்டு, தன்னால் இயன்ற வரை இந்த அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே முக்கிய நோக்கம்.
மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதுடன், நேரடியாக இறங்கி செயல்பட வெண்டும் என்ற எண்ணத்தில் அடிமை நிலைக்கு எதிராக இயக்கும் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன்.
நவீன அடிமைத்தனத்தை முற்றிலும் ஒழிப்பதற்கு உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் தேவை," என்கிறார் கிரேக் ஹேல்வே.
கவி படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஏனைய விவரங்களை மேலும் அறிய http://kavithemovie.com/
|