மறுகூட்டல் : சிறுகதை - ராமலக்ஷ்மி


- ராமலக்ஷ்மி

றுபடி மறுபடி கூட்டிப் பார்த்தான் குணா. எத்தனை முறை கூட்டினாலும் தொன்னூற்றெட்டே வந்தது. ஆசிரியரோ முதல் பக்கத்தில் நூற்றுக்கு தொன்னூற்றைந்து என பெரிதாக வட்டமிட்டுக் காட்டியிருந்தார்.

'தப்பு விட்டதோ ஒரே ஒரு ரெண்டு மார்க் கணக்கில். ஒருவேளை எதேனும் ஒரு கேள்வியை விட்டிருப்பேனோ?' வினாத்தாளை வைத்துக் கொண்டு பார்த்தால், அப்படியும் தெரியவில்லை.

சரியெனப் பக்கத்திலிருந்த பாலனிடம் கொடுத்துக் கூட்டிப் பார்க்கச் சொன்னான்.

பாலன் திணறித் திணறி இரண்டு முறை சரி பார்த்ததிலும் அதே தொன்னூற்றெட்டு. "போடா, போய் உடனே சார்கிட்டே சொல்லு. கூட்டலிலேதான் தப்பு!" என்று திருப்பிக் கொடுத்தான்.

அவசரப் படாமல் கவனமாய் இன்னொரு முறை பக்கம் பக்கமாய்ப் பார்த்தான் குணா. எல்லா விடைகளுக்கும் அவற்றின் இடப்பக்கத்தில் மதிப்பெண் இட்டிருந்த ஆசிரியர், நான்காம் பக்கத்தில் கடைசியாய் இருந்த கணக்குக்கு அதன் அடியிலே மூன்று எனச் சுழித்து விட்டிருந்தார். புரிந்து போயிற்று மூன்று மதிப்பெண்கள் எப்படிக் ஆற்றோடு போயிற்று என.

"என்னடா நீ சொல்றியா, இல்லே நான் சொல்லட்டுமா?" எழ எத்தனித்த பாலனை இழுத்து அமரவைத்தான் குணா.

"உனக்கென்ன பைத்தியமா? நீயும் சொல்ல மாட்டேன்கிற. என்னையும் விட மாட்டேன்கிற. பாரு அந்தப் பயலை. மொத மார்க்குன்னு கைதட்டல வாங்கிட்டான். இந்த மூணு மார்க்கால உன் க்ளாஸ் ராங்க்குமில்லே ரெண்டாவதாகுது?"

"தெரியும், போகட்டும் விடு" என்றான் முன் வரிசையில் வானத்தில் மிதக்கிற மாதிரி அமர்ந்திருந்த சரவணனைப் பார்த்தவாறே.

"கணக்கில முதல்னதுக்கே தலைகால் புரியல. ரேங்க கார்ட் வாங்கும் போது ரெண்டு கொம்பே மொளைச்சிடும்" முணுமுணுத்தபடியே இருந்த பாலனை சட்டை செய்யவில்லை குணா.

அப்போது மணி அடித்தது.

"எல்லோரும் மார்க்குகளைச் சரி பார்த்தாச்சா? நாளைக்கு ஆன்சர் பேப்பரில் மறக்காம வீட்டிலிருந்து கையெழுத்து வாங்கிட்டு வந்திடணும். ரிப்போர்ட் கார்ட் இன்னும் இன்னும் ரெண்டு நாளிலே ரெடியாகிடும்" எழுந்தார் வகுப்பாசிரியராகவும் இருந்த கணக்கு ஆசிரியர்.

"சார் நம்ம குணா..." எனத் தாங்க மாட்டாமல், கூவியபடி துள்ளி எழுந்தே விட்டான் இப்போது பாலன்.

அவன் கையை இறுகப் பிடித்தான் குணா. அந்த இரும்புப் பிடியிலும் நெருப்புப் பார்வையிலும் ஆடித்தான் போனான் பாலன். பால்ய காலத்திலிருந்து சிநேகிதனாய் இருப்பவனின் செயல், புரிந்து கொள்ள முடியாத தடுமாற்றத்தைத் தந்தது.

"குணாவுக்கு என்ன?" கேட்டார் ஆசிரியர்.

பாலன் திணறி நிற்க, "ஒண்ணுமில்லே சார். அம்மாவும் அப்பாவும் ஒரு கலியாணத்துக்கு வெளியூர் போயிருக்காங்க. கையெழுத்து உடனே வாங்க முடியாதே" சாதுவாகச் சமாளித்தான் குணா.

"சரி, அதனாலென்ன. இது ரிப்போர்ட் கார்ட் இல்லையே. உன் அண்ணன் குருவிடம் வாங்கிட்டு வா, பரவாயில்லை" எனச் சிரித்தார் ஆசிரியர்.

குரு அதே பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு. படிப்பில் சூரப்புலி. பள்ளியின் மாணவர் தலைவனும் என்பதால் அவனைத் தெரியாதவர் கிடையாது.

ஆசிரியர் வெளியேற, மாணவர்கள் பைகளைக் கட்ட ஆரம்பித்தார்கள். குணா எழுந்து சென்று சரவணனின் கைகளைப் பற்றிக் குலுக்க அதைச் சற்றும் எதிர்பாராதவனாய் சந்தோஷத்தில் நெளிந்தான் அவன்.

வாசலில் பையோடு முறைத்தபடி நின்றிருந்த பாலனை நெருங்கி அவன் தோள் மேலே கைபோட்டபடி அழைத்துச் சென்றான் சமாதானமாக. கைகள் விலக்கப்பட்ட வேகத்தில் தன் மேலான கோபம் தீரவில்லை அவனுக்கு எனப் புரிந்தது.

இருவரும் பள்ளியின் சைக்கிள் ஸ்டாண்டை அடைந்தபோது வழக்கம் போல அண்ணன் குரு தயாராக ஒற்றைக் காலைத் தரையில் ஊன்றியபடி சைக்கிள்மேல் காத்திருந்தான் அவனை டபுள்ஸில் அழைத்துச் செல்ல.

"என்னடா கணக்கு பேப்பர் வந்திடுச்சா?"

"தொன்னூத்தஞ்சு"

"போ! அஞ்சு மார்க் கோட்டை விட்டுட்டியா? அப்போ ரேங்க்?"

"அநேகமாய் செகண்டுதான்"

"இருந்திருந்து நைன்த் ஃபைனலில் இப்படி ச்றுக்கிட்டியேடா!"

"ஆனைக்கும் அடி சறுக்கும்ங்கிற கதையில்ல தலைவா இது. தானே தலையிலே மண் வாரிப் போட்டுக்கும்ங்கிற கத"

தன் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு அங்கு வந்த பாலன், தங்கள் மாணவர் தலைவனிடம் நடந்ததை விளக்கி, பொங்கிக் கொண்டிருந்த மனதை, போட்டுக் கொடுத்து ஆற்றிக் கொண்டான்.

"முட்டாளா நீ? பெரிய தியாகச் செம்மல்னு நினைப்போ?"

"அய்யோ அப்படில்லாம் இல்லேண்ணா. வீட்ல சொல்லிடாதே. பாரு அவன் இதுவரை என்னை முந்தினதே இல்லை. கைதட்டலும் முதல் மார்க்கும் எனக்கே சாஸ்வதம்ங்கிற மாதிரி ஆயிடுச்சு. எப்பவுமே என்னைவிட ஓரிரு மார்க்குதான் கம்மியா வாங்கிருப்பான். அதுவும் நல்ல மார்க்தான்னாலும் பேப்பரை கையில வாங்கும்போது அவன் சந்தோஷப்பட்டு நான் பார்த்ததே இல்லை.

இந்த முறை முதலாவதுன்னு சார் சொன்னதும் அவன் முகத்துல இருந்த ஆனந்தத்தைப் பார்க்கணுமே. அதுவுமில்லாம எனக்கு சொல்லித் தர வீட்ல நீ இருக்கே. அக்கா, அம்மா, அப்பா இருக்காங்க. அவன் அம்மாப்பா சாதாரண கூலி வேலை செய்யறவங்க. இனித் தன்னாலேயும் முடியுங்கிற நம்பிக்கையோடு பத்தாவது க்ளாஸிலே இன்னும் நல்லாப் பண்ணுவான். அவன் குடும்பமே அவனை நம்பித்தானேண்ணா இருக்கு."

நண்பனைப் பார்த்து பிரமித்து நின்றிருந்தான் பாலன்.

குருவோ சைக்கிளை ஸ்டாண்டு போட்டு நிறுத்தி விட்டு அப்படியே சகோதரனை இறுகக் கட்டிக் கொண்டான்.

மறுகூட்டலில் மதிப்பெண்களை மட்டும் கூட்டிப் பார்க்காமல் எத்தனை விஷயங்களைக் கூட்டிக் கழித்துப் பார்த்திருக்கிறான் தன் தம்பி என நினைக்க நினைக்க அவனுக்குப் பெருமையாக இருந்தது.

*

Tamil English  
(tamil typing : ammaa = அம்மா, vikatan = விகடன்)
 Name
  E-Mail
  Comment
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவுக்கு நன்றி. நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும். காத்திருக்கவும்)
Click Photo To View Profile    
Name
Comments
Ramalakshmi
என் நன்றிகள் எபே, சதங்கா, கவிநயா.

282 day ago | Report abuse

kavinaya
Excellent story Ramalakshmi!

282 day ago | Report abuse

sathanga
நல்ல கதை. வாழ்த்துக்கள்.

283 day ago | Report abuse

ebe
மிக அருமை... நல்ல கருத்து...

284 day ago | Report abuse

Ramalakshmi
கருத்துகளைப் பகிர்ந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள்.

286 day ago | Report abuse

sweety
I doubt anybody will do like this small boy. Very proud of him....I wish my kids are good like this...

286 day ago | Report abuse

Sangeetha
சுரேஷ் - தவறு நாம் வளர்ந்த சூழலிலும் .. இந்த தலைமுறையாவது மாறட்டும்....என் குற்ற நெஞ்சும் குறுகுறுக்கிறது.....

286 day ago | Report abuse

N Suresh
சிறுவயதிலேயே அந்த பிள்ளைக்கு எவ்வளவு நல்ல மனம் இருக்கிறது என்று நான் வாழ்த்தும் இவ்வேளையில் எனக்கு என்னுடைய பள்ளி நாட்களில் அப்போதெல்லாம் அப்படி இருந்ததில்லை என்ற உண்மை என் முன்னே வந்து, எப்போதும் எல்லாவற்றிலும் நானே முதல்வனாகவே வேண்டும் என்ற ஒரு தீவிர எண்ணம் இருந்ததை இன்று குற்ற உணர்வாக எண்ணவைக்கிறது இந்த சிறுகதை! என்னை சந்திக்க வரும் சில பள்ளி மானவர்களோடு அல்லது நான் சந்திக்கும் மாணவர்களோடு பகிர்ந்துகொள்ளக் கூடின சிறப்பான ஒரு சிறுகதையை இங்கு தந்த திருமதி ராமலக்ஷ்மி அவர்களுக்கு எனது நன்றி கலந்த வாழ்த்துக்களை பணிவன்போடு தெரிவித்துக்கொள்கிறேன். என் சுரேஷ்

287 day ago | Report abuse

Mohan Kumar
ரொம்ப நல்ல கதை. அவன் சொல்லும் சரியான காரணம் யாரையும் நெகிழ வைக்கும். ஒரு சின்ன சுக்கெச்டிஒன். சாசுவதம் என்ற வார்த்தையை தவிர்த்திருக்கலாம். அவ்வளவு சின்ன பையன் அந்த வார்த்தை பேசுவது சந்தேகம் என்பதால் சொல்கிறேன். நல்ல கதைக்கு பாராட்டுக்கள்

288 day ago | Report abuse

kamatchi
கதையின் கரு அழகானது. சகமாணவனின் சந்தோஷத்திற்காக தான் அனுபவித்த சந்தோஷத்தை அவனும் அடையட்டுமென, கேட்காமலும், சொல்லாமலும் விட்டுக் கொடுத்திருப்பது. எல்லோருமே சந்தோஷப் படுகிரோமே. சந்தோஷ தானம்.

288 day ago | Report abuse

parthasarathy s reddy
இதை படிக்கும் போது ஏழாம் வகுப்பில் எனக்கு போட்டிருந்த 88 மதிப்பெண் தான் ஞாபகம் வருகிறது.மொத்த மதிப்பெண்ணை கூட்டினால் 108 வருகிறது,ஆனால் ஆசிரியர்ரோ 88 போட்டிருக்கிறார்,நான் ஆசிரியரிடம் சென்று மதிப்பெண் கூட வருகிறது என்று சொன்னேன்,உடனே மகாலட்சுமி என்ற பெண்ணிடம் கூட்டச் சொன்னார்,அவர் 108 வருகிறது என்றார்,அதன் பின் குலசேகரனிடம் கூட்டச் சொன்னார்,அவனும் அதையே சொல்ல என்னிடம் கொடுத்து 108 எப்படி வருதுன்னு நீயே சொல்லு என்றார்,நான் சரியாக செய்தும் ஒரு கணக்கை அடித்து விட்டு இன்னொரு கணக்கு போட்டிருந்தேன்,அடித்தது சரியாகத்தெரியாததால் அதற்கு 8 மதிப்பெண் போட்டிருந்தார்.நான் ஒழுன்காக அடிக்க வில்லை என்பதற்காக தண்டனையாக 10 மார்க் பெற்ற கணக்கை அடித்து விட்டு 98 போட்டார்.இது போல் படிக்கையில் பழைய ஞாபகம் வருது.

288 day ago | Report abuse

Suj
மிக அருமையான கதை.

288 day ago | Report abuse

For contents & Feedback: youthful@vikatan.com I For technical issues : webmaster@vikatan.com I For Advt: dotcom@vikatan.com
Copyright © 2008 Vikatan.com Pvt Ltd. all rights reserved.