பட்சி : சிறுகதை - - எம்.ரிஷான் ஷெரீப்

- எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

'உண்மையாச் சொல்லணும்னா எனக்கு உன்கிட்ட இந்த எழுத்துத்தான் ரொம்பப் பிடிச்சிருக்கு. எவ்ளோ உணர்வுபூர்வமா எழுதுற பாரு.. அப்றம் அன்னிக்கு ஒரு பேட்டியில உன்னோட போட்டோ பார்த்தேன்.. யப்பா.. சான்ஸே இல்ல.. அழகு, திறமை, பணிவு, அடக்கம் எல்லாம் சேர்ந்து ஒரு பெண்ணா உருவானதுபோல... அதிலும் உன் கண்கள் இருக்கே.. காந்தம்.. அவ்ளோ அழகு.. பக்கத்துல இருந்து பார்த்துட்டே இருக்கணும்போல'

அவள் ஒரு கவிதாயினி. அப்படித்தான் எல்லோரும் சொன்னார்கள். அவள் அதை இயல்பாக வரும் புன்னகையோடு மறுத்துவந்தாள். இணைய உரையாடல்களின்போதும், மின்னஞ்சல்களிலும், நேரடியாகவும், கடிதங்களிலும் பலர் இதனைச் சொல்லும்போதும், பாராட்டும்போதும் முறுவலித்தாள். தான் மனதில் தோன்றுவதை மட்டுமே கிறுக்கிச் செல்வதாக விடைபகர்ந்தாள். பதில்கள் கண்டும் கேட்டும் சிலர் இது குறித்து, அருமையாக எழுதிவருவதாக வலியுறுத்திச் சொல்லும்போது ஏதும் சொல்லாமல் தொடர்ந்த புன்னகையோடு மௌனம் பேசினாள். அவளுக்குத் தெரியாமலேயே அவளது எழுத்துக்கள் ஒரு சிலந்தியைப் போல அவளைச் சூழவும் புகழை, ஒரு வலையாகப் பின்னியிருந்தன.

'நான் நேரடியாவே சொல்லிடுறேன். உன்னய எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இவ்ளோ நாளா நான் தேடிட்டிருந்த தேவதை கிடைச்சிட்டான்னு மனசு சொல்லுது. என்னை உனக்குப் பிடிக்குமான்னு தெரியல. ஆனா ஒண்ணு தெரியும். நீ எப்பவும் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்குறவ இல்லன்னு தெரியும். நான் இதுவரை யாரையும் லவ் பண்ணதில்ல. ஆனா உன்னப் பார்த்ததும் விழுந்துட்டேன். நீ என்ன சொல்ற?'

உண்மையாகவே அவள் மனதில் தோன்றுவதை மட்டும்தான் எழுதிவந்தாள். நிறைய வாசிப்பாள். தனிமை, அது தரும் துயரங்கள் நிரம்பி வழிவதைப் போல உணர்கையில் அதனைப் பக்கங்களில் வழியவிட்டாள். அவளது எழுத்துக்கள் எப்பொழுதும் உணர்ச்சி மயமாகவும் அழுகை தரக் கூடியதாகவும், சிலவேளை தன்னைப் பொறுத்தி உணரக்கூடியதாக இருப்பதாகவும் வாசகர்கள், ரசிகர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இணைய இதழ்களும் பிரபல பத்திரிகைகள் மற்றும் சிற்றிதழ்களும் அவளது படைப்புக்களைக் கேட்டு வாங்கிப் பிரசுரிக்கும் தரத்தில் அவளது எழுத்துக்கள் இருந்தன.

'ப்ளீஸ்.. ஒரு பொண்ணுக்கிட்ட கெஞ்சுறது கஷ்டமாத்தான் இருக்கு. நீ என்னை லவ் பண்ணக் கூட வேண்டாம். ஆனா, இப்படி பேசாம இருக்காதே. நீ இப்படி இருக்குறது எனக்கு இன்னும் ரொம்பக் கஷ்டமா இருக்கு. சாப்ட முடியல. தூங்க முடியல. எதுவுமே பண்ணத் தோணல. வேலைக்குப் போகணுமேங்குறதுக்காக போய் வந்துட்டிருக்கேன். நான் உனக்கு அனுப்பணும்னு விரலக் கிழிச்சி ரத்தத்துல ஒரு கடிதம் கூட எழுதி வச்சிருக்கேன். ஸ்கேன் பண்ணி அனுப்புறேன் பாரு. அதப் பார்த்தும் நீ மனசிறங்கலைன்னா, நான் என்னையே எரிச்சுப்பேன். அப்றம் சந்தோஷமா இரு.

அவளுக்கென்று யாருமற்று தனித்திருந்தாள். பெரும் மகிழ்வோடு இணைய நண்பர்களைக் குடும்பமெனக் கொண்டு எல்லோருடனும் வித்தியாசமெதுவுமின்றி அன்பானவளாகவே இருந்துவந்தாள். அவளுக்கென இணையமும் எழுத்தும் கூட இல்லையெனில், அவள் பெரிதாகப் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும். முதலில் தனிமை, ஏகாந்தம் குறித்துத் துயரமாக எழுதி வந்தவள் பின்னர் காதல் கவிதைகளும் எழுத ஆரம்பித்தாள். அவளது மின்னஞ்சலை நிறைத்த, அவள் நிராகரித்த காதல் விண்ணப்பங்களை அறிந்தவர்களெல்லாம் அவளை ஆச்சரியத்தோடு பார்க்கத் தொடங்கினர். யாரிடம் அவள் காதல் வயப்பட்டாள் எனக் கேட்டவர்களிடம் அவள் சொல்லவுமில்லை. யாருக்கும் தெரிந்திருக்கவுமில்லை. ஓட்டைகள் எதுவுமின்றி மூடிய ஒரு பெட்டிக்குள் அடைத்ததைப் போல அவள் அந்த இரகசியத்தைக் காத்து வந்தாள். வெளியேற வழியற்ற இரகசியம் அந்த இருளுக்குள்ளேயே புதைந்தபடி உயிருடன் கிடந்தது.

'ம்ம்.. ஊருல எனக்கொரு பொண்ணு பார்த்து வச்சிருக்காங்க. அண்ணாக்கிட்ட சொல்லிட்டேன். அவன் புரிஞ்சுக்கிட்டான். ஊருக்குப் போய் அம்மாப்பாக்கிட்டத்தான் சொல்லிப் பார்க்கணும். அவங்க எப்படியும் உன்னை மறுக்கமாட்டாங்க. பேரழகி நீ.. மகாலட்சுமி ஒருத்தி வீட்டுக்கு வரும்போது வேணான்னு சொல்வாங்களா? எதுக்கு நீ யோசிக்கிற? ஹேய்.. அழக்கூடாது. அவங்க உன்னை வேணான்னு சொன்னாங்கன்னாலும் நான் உன்னைக் கை விட்டுட மாட்டேன். என்னை நம்பு ப்ளீஸ்.. ஏன் எப்பப் பார்த்தாலும் எப்பவோ நடக்கப் போறதையெல்லாம் நெனச்சு நெனச்சு மனசப் போட்டுக் குழப்பிக்கிறே? இப்ப, இந்த நிமிஷம் சந்தோஷமாயிரு பெண்ணே.. இங்க வா.'

அவளது காதல் குறித்தான மகிழ்வான எழுத்துக்கள் தொடர்ந்தன. பின்னர் ஒரு நாள் திடீரென்று அவை நின்றன. அவள் எழுதுவதை விட்டிருந்தாள். இணையம் வருவது குறித்தும் எழுத்துக்களைப் பக்கங்களில் மேயவிடுவது குறித்தும் பெரிதும் அஞ்சினாள். முன்னர் பார்த்துப் பரவசப்பட்ட புத்தகங்களைப் பார்க்கையில் கலவரப்பட்டாள். அவற்றினிடையில் எப்பொழுதோ கிறுக்கிவைத்த காதல் குறிப்புகள் கொண்ட கடதாசிகள் சிக்குகையில் தீயிலிட்டு எரித்தாள். சிலவேளை அழுதாள். பசித்திருந்தாள். அவள் வளர்த்துவந்த பூச்செடிகளைப் பராமரிக்காது வாடவிட்டாள். ஈற்றில் ஒழுங்குமுறைப்படி அழகாக எல்லாம் செய்பவள் ஏனோதானோவென இயங்கத் தொடங்கினாள். முன்னைய வாழ்க்கையிலிருந்து முழுவதுமாகத் தப்பித்து வாழ முயன்றாள்.

'நீ எழுதுறது எனக்குப் பிடிக்கல. இதையெல்லாம் நீ விட்டுறணும். ஏன் எப்பப் பார்த்தாலும் உனக்கு மட்டும் இவ்ளோ மெயில் வருது நல்லா எழுதுறேன்னு பாராட்டி..? நானும்தான் எழுதுறேன். ஒருத்தன் சீண்ட மாட்டேங்குறான். பர்ஸனலா உன்னோட போட்டோஸ் அனுப்பிவச்சியா? பார்த்து வழிஞ்சுட்டு ஒவ்வொருத்தனும் பாராட்டுறானா? நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே இதையெல்லாம் நிறுத்திடு. எனக்கு நீ எழுதுறது பிடிக்கல. அப்றம் இந்த அழகு.. எதுக்கு நீ மட்டும் இவ்ளோ அழகா..? சினிமால நடிக்கப் போறியா? பக்கத்துல நான் கறுப்பா, குண்டா நிக்கும்போது ஜோடிப் பொருத்தமே இல்லாத மாதிரி தோணுது'

அவளது நண்பர்கள் அவளைத் தேடத் தொடங்கினர். அவளைக் குறித்த விசாரிப்புக்கள் அவளைத் தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் எல்லோரிடத்திலும் சுற்றிச் சுற்றி வந்தன. அவள் பிறரைச் சந்திக்கும் வாய்ப்புக்களைத் தரும் எல்லாத்திசைகளையும் அடைத்து தன்னை ஒளித்துக்கொண்டாள். வெளிச்சத்துக்கு வரப் பயந்தாள். அவளைச் சுற்றியிருந்த ஒளிவட்டம், அவளது எழுத்துக்கள் சென்ற வழியெங்கும் போய் அவளைத் தேடி அலைந்து கொண்டே இருந்தது.

'இங்க பாரு.. ஊருக்குப் போறப்ப எதுக்கு அழறே? எதுவும் யோசிக்காத. நான் உனக்குத்தான். உனக்குத்தான். உனக்குத்தான்.. உனக்கு இல்லன்னா வேற யாருக்கும் இல்ல. ப்ச்.. எனக்கே கூட இல்ல, என்னைய நம்பு. எப்பவும் சந்தோஷமா இரு. வீட்டு வேலயெல்லாம் கத்துக்கோ. சரியா?. ஊருக்குப் போன உடனே ஃபோன் பண்றேன்.'

அவள் அழைக்கப்படும் குரலொன்றுக்காக மட்டும் நெடுநாட்கள் காத்திருந்தாள். முன்னர் அவள் எழுதிவந்த இதழ்கள், பத்திரிகைகள், இன்னும் சில புது இதழ்கள் எல்லாம் தங்கள் புதிய பக்கங்களை அழகுபடுத்தவென அவளது படைப்புக்களைத் தருமாறு மின்னஞ்சல் வழி கேட்டுக்கொண்டே இருந்தன. அவள் அவ்வேண்டுகோள்களை இறந்துபோய்ப் புழுத்த எலியை அப்புறப்படுத்துவது போன்ற அறுவெறுப்போடும் அலட்சியத்தோடும் குப்பைக்கூடைக்குள் கொட்டியபடி இருந்தாள். முடியாப்பட்சத்தில் மின்னஞ்சல் முகவரியை வேறு பெயரில் மாற்றிக்கொண்டாள். அதையுமொரு நெருங்கிய சினேகிதி மோப்பம் பிடித்துக் கண்டுபிடித்து 'எப்படியிருக்கிறாய்?' என வினவியபோது அதிர்ந்தாள்.

அன்பான நண்பர்களை இழக்கவும் முடியாது. திரும்பவும் எழுத்துக்களின் கைப்பிடித்து நடக்கவும் முடியாது. தோழிக்கு நலமெனப் பொய்யாகப் பதிலனுப்பினாள். பின்னர் யாரும் அறியாமல் முற்றாக இருள் சூழ்ந்த வெளியொன்றில் தொலைந்துபோவதெப்படி எனச் சிந்திக்கத் தொடங்கினாள். பதில் தெரியாச் சிந்தனை அவளைச் சூழ இருந்த புகழெனும் மாயவலையில் சிக்கித் தொங்கியது. விடுவிக்கமுடியாமல் வருந்தினாள். நகரும் எல்லாப் பாதைகளும் யாராலோ கண்காணிக்கப்படுவதுபோலப் பயந்து அவள் தன் பாதங்களை ஒருவித யோசனையோடே எப்பொழுதும் எடுத்துவைத்தாள்.

தோழியின் மூலமோ, எப்படியோ அவளது மின்னஞ்சலை அறிந்துகொண்ட ஒரு சிற்றிதழ், அவளது கவிதைப் பாடல் குறித்தான ஒரு நேர்காணலை அவளிடமிருந்து பெறவிரும்பி மடலிட்டுக் கேட்டது. அச் சிற்றிதழ்தான் அவளை உலகுக்கு முதன்முதல் வெளிக்காட்டியது. அவளுக்கென்று வாசகர்களை உருவாக்கியது. அவளது எழுத்துக்களின் மீதான முதல் வெளிச்சத்தை அவ்விதழே எட்டுத் திக்கிலும் ஒளிரச் செய்தது. இவ் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் அவள் தவித்தாள். பின்னர் வேறு வழியற்று ஒருநாள் ஏற்றுக்கொண்டாள்.

தனக்கான கேள்விகளை விடுவிப்பவர் குரல்வளையிலிருந்து தனக்குத் தெரிந்தவை, இக்கட்டில் மாட்டிடாதவை, நல்லவை, சுயமும், இருப்பும், எழுத்தும், காதலும், ஆழ்மௌனமும் குறித்த சந்தேகங்களைக் கொண்டிராதவை மட்டுமே வெளியே வரவேண்டுமென அவள் மனதுக்குள் பிரார்த்தித்தபடி இருந்தாள். அவளுக்குத் தெரியும். ஒரு கலைஞரிடம் மேற்கூறியவை தொடர்பான கேள்விகள் தவிர்த்து வேறெதுவும் வந்து கைகுலுக்காதென அவளுக்கு நன்றாகவே தெரியும். எனினும் பிரார்த்தித்துக் கொண்டாள்.

பல கேள்விகள் அவளைச் சூழ்ந்தன. புகழ் வலையின் துளைக்கொன்றாக வந்து அவளைச் சேர்ந்தன. அவள் பயம் உதறி, உறுதியைப் போர்த்திக்கொண்டாள். வராத புன்னகையை இழுத்தெடுத்து இதழ்களில் சூடிக்கொண்டாள். ஒரு கவிஞருக்குரிய மென்மனதையும், அப்பொழுது தனக்கிருந்த படபடப்பையும் காட்டிக்கொள்ளாவண்ணம் அவள் தனது மொழியினை உதிர்க்கத் தொடங்கினாள். எல்லாக் கேள்விகளுக்கும் உண்மையைப் பதிலாகச் சொன்னாள். அவளது காதல் குறித்த கேள்வியின் போது மட்டும் பதிலெதுவும் சொல்லாமல் கேள்வியை அந்தரத்தில் நழுவவிட்டு அடுத்த கேள்வியின் முனையைப் பற்றிக்கொண்டாள்.

அவளே எதிர்பாராத வண்ணம் இறுதிக் கேள்வி இலகுவாக இருந்தது. அவளுக்குப் பிடித்த பறவை என்னவென்றும் ஏனதனைப் பிடித்திருக்கிறதென்றும் அக்கேள்வி அவளை வந்து சேர்ந்தது. அவள் சிறிதும் யோசிக்கவில்லை. முன்னைய கேள்விகளுக்குப் பதிலளிக்க, யோசிக்க எடுத்துக்கொண்ட நேரத்தைக் கூட அவள் இதற்காக எடுத்துக்கொள்ளவில்லை. அக்கேள்வி அவளது உள்ளங்கையில் வந்து உட்கார்ந்து கொண்டதைப் போல, அவள் ஒரு கணம் தன் கைகளைப் பார்த்துக் கொண்டாள். விழிகளில் துளிர்த்த நீரினை எச்சிலோடு விழுங்கிக் கொண்டாள். உதடுகளை நாவால் ஈரலிக்கச் செய்து பின்னர் ஒரு புன்னகையோடும் உறுதியான, நேர்பார்வையோடும் பதிலளித்தாள்.

"எனக்கு லவ்பேர்ட்ஸ் பிடிக்கும். அவை எப்பொழுதும் காதல் செய்துகொண்டே சோடியாக வாழும் காதல் பறவைகள். எவ்வளவு மூப்பெய்தினாலும் ஒன்றையொன்று பிரியாது, ஒருபோதும் நம்பிக்கைத் துரோகம் செய்யாது, உண்மையாகக் காதலித்துக் கொண்டே இருக்கும். தமக்கிடையே புதிதாக ஒருவர் நுழைந்தாலும் துரத்தியடிக்கும். காதலுக்கெனச் சண்டையிடும். இறுதிவரை போராடும். காதலுக்காகவே இறந்தும் விடும். முக்கியமாக ஆண் பறவை மட்டும் அவ்வளவு நாளும் கூடி வாழ்ந்த துணையை விட்டுவிட்டு ஊருக்குப் போய் அம்மா, அப்பா சொன்னார்களென அன்பான காதலியைக் கைவிட்டு வேறொரு இணையைத் தேடிக்கொண்டு முன்னைய காதலிக்கு 'என்னை மறந்துவிடு' என மெயிலனுப்பாது.".


 

Tamil English  
(tamil typing : ammaa = அம்மா, vikatan = விகடன்)
 Name
  E-Mail
  Comment
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவுக்கு நன்றி. நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும். காத்திருக்கவும்)
Click Photo To View Profile    
Name
Comments
???????
கதையின் போக்கை யூகிக்க முடிந்தது என்றாலும் கதை நகர்வும் உங்கள் எழுத்தும் கதையின் வேகத்தை துளி அளவும் குறைக்கவில்லை. மிக அருமையான கதை.

83 day ago | Report abuse

மழையோன்
கதையின் போக்கை யூகிக்க முடிந்தது என்றாலும் கதை நகர்வும் உங்கள் எழுத்தும் கதையின் வேகத்தை துளி அளவும் குறைக்கவில்லை. மிக அருமையான கதை.

83 day ago | Report abuse

Ramanathan
simply superb.Very good.All the best

211 day ago | Report abuse

Ramalakshmi
மிக நன்றாக உள்ளது ரிஷான். நல்வாழ்த்துக்கள்!

213 day ago | Report abuse

selvakumar
கலக்கல் ரிஷான். வாழ்த்துக்கள்.

214 day ago | Report abuse

For contents & Feedback: youthful@vikatan.com I For technical issues : webmaster@vikatan.com I For Advt: dotcom@vikatan.com
Copyright © 2008 Vikatan.com Pvt Ltd. all rights reserved.