|
- த.ஜீவராஜ்
எத்தனை சுலபமாகச் சொல்லிவிட முடிகிறது இவன் / இவள் அனாதை என்று. யாரும் உறவென்றில்லாத உலகை கணநேரம் கற்பனை செய்து பார்க்கவே நெஞ்சுறைந்து போய்விடுகிறது நமக்கு.
தனித்துப் போனவர்களின் துயரம் அவர்களோடு இணைந்திருக்கையில் மட்டுமே நம்மால் உணரப்படுகிறது. விலகி வந்தபின் நம் வேலைகளுக்குள், வீட்டுப் பிரச்னைகளுக்குள் சுலபமாக அவர்தம் நினைவுகளைத் தொலைத்துவிடுகிறோம்.
மறந்திருக்கும் ஓர்நாளில் ஏதோ காரணங்களால் சட்டென்று மீளுயிர்க்கும் அவலம் நிறைந்த அவர்களது ஞாபகங்கள் நம் எண்ணங்களைச் சுட்டெரிக்கிறது.
அண்மையில் நான் சந்தித்த, தன் சொந்த பந்தங்களில் இருந்து திடீரென தனித்து விடப்பட்ட நபர், நீண்ட நேரமாக என்னுடன் பேசமுடியாது தவித்தார். அவர் எண்ணங்கள் மு்ழுவதும் இழந்துபோனவர்களால் நிறைந்திருந்தது.
சிறிது நேரத்தின்பின் என்னிரு கைகளையும் திடீரென்று அவர் இறுகப் பற்றிக் கொண்டார். சந்திப்பின் இறுதிவரை எண்ணி ஓரிரு வார்த்தைகள் மட்டுமே இருவரும் பேசி இருந்தோம். அவருக்கான ஒருவர் என்பது தவிர்த்து தேவையற்றதாய் இருந்தது வார்த்தைகளின் ஆலாபனை.
பற்றி இருந்த என் கரம் வழி அவரது உறவுகள் பற்றிய நினைவுகளை ஓருவித நடுக்கத்துடன் அவர் மீள அசைபோட்டபடி இருந்திருக்கக்கூடும். பிரிதலுக்கான நேரம் வந்து என்கரம் தளர்ந்தபோது அவரும், நானும் அனுபவித்தது நரகவேதனை.
அவசரம் நிறைந்த இந்த உலகில் பிறப்பில் இருந்தோ அல்லது இடையிலோ தனித்து விடப்பட்டவர்களை நாளும் நாம் சந்தித்தவண்ணம் இருக்கிறோம்.
பெரியவர்களின் உணர்வுகளே இப்படி இருக்கையில் திடீரென தனித்துவிடப்பட்ட குழந்தைகளைப் பற்றி எண்ணிப் பார்க்கையில் தொண்டைக்குழி வரண்டுகொள்கிறது.
தனித்துவிடப்பட்டவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் ஏக்கங்களால் நிறைந்திருக்கும் இடைவெளிகளில் ஒரு சிறு பகுதியையாவது நிரப்ப வேண்டிய கடப்பாடு உடையவர்களாக இருக்கிறோம் என்பதோடு, அதற்குரிய தேவை நிறைந்த காலகட்டத்தில் வாழ்கிறோம் என்பதனையும் புரிந்து கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம்.
|