கருணையில் 'கால்' பதித்தவர்... 50வது 'உறுதுணை'யை நோக்கி!

-ஞா.அண்ணாமலை ராஜா

கால்களை இழந்ததால் தங்களது வாழ்க்கைப் பயணத்தைத் தவழ்ந்து தவழ்ந்து பயணிக்கும் மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கை பாரத்தை எழுத்துகளால் தான் சொல்ல வேண்டியதில்லை. அதனை, நம் சமூகத்தைப் பார்க்கும்போதே உணர முடியும்.

ஒரு சிறிய நான்கு சக்கர பலகை. அதில் உட்கார்ந்து கொண்டு வெயிலிலும் மழையிலும் ஒற்றைக் கையில் ஒரு பிய்ந்து போன செருப்பை தரையில் உரசி உரசி வருபவர்களை நாம் நிச்சயம் கடந்து வந்திருப்போம்.

அப்படி, நாம் கடந்து வரும் காலிழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிட வேண்டும் என்று எத்தனை பேருக்கு மனம் வரும்?

இங்கே ஒருவர், அத்தகைய இன்னல்களில் உழல்வோரைக் கண்டால், அவர்களுக்கு மூன்று சக்கர மிதிவண்டி வாங்கிக் கொடுத்து தன்னம்பிக்கை தருகிறார். அவரே, கோவையைச் சேர்ந்த சுசில்குமார்.

கோவை காந்திபுரத்தில் போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் இவர், கடந்த 10 வருடமாக இதுபோன்ற மாற்றுத் திறனாளிகள் 49 பேருக்கு தன் சொந்த செலவில் மூன்று சக்கர மிதிவண்டி வழங்கியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் இன்னும் பல சமூகச் சேவைகள் செய்யும் அவரை நாம் சந்தித்தபோது கூறியது:

"என்னுடைய சமுக சேவை, 1987 ஆம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போது ஆரம்பமானது. ஒரு செய்தித்தாளில் வறுமையால் ஒரு வேளை உணவுக்கே வழியில்லாத மனிதர்களின் வாழ்க்கைப் பற்றிய செய்தியைப் படித்தேன். அந்த சமயம் என் நண்பன் ஒருவனின் தந்தை இறந்திருந்தார். அப்போது, அவருக்கு மாலை வாங்கிபோடும் காசில் அவர் நினைவாக தெருவோரம் பசியில் வாடுபவர்களுக்கு அன்னதானம் செய்யலாமே என்று உணவு தானம் செய்தோம்.

அதன்பிறகு எங்கள் நண்பர்கள், உறவினர்கள் வட்டாரத்தில் யார் இறந்தாலும் இது போல் அன்னதானம் செய்வது வழக்கமாயிருச்சு. அப்படியே நான் படிச்சுட்டு இருந்த கால கட்டத்தில் என்வசதிக் கேட்ப சிறு சிறு சேவைகள் செய்து கொண்டு இருந்தேன்.

ஒரு முறை ஒரு டிராபிக் சிக்னலில் இரண்டு கால்களும் இல்லாத ஒருவர் நான்கு சக்கரம் உள்ள ஒரு பலகையில் உட்கார்ந்த படியே ஒவ்வொருவரிடமும் கை நீட்டி பிச்சை எடுப்பதைக் கண்டேன். அவர்களுக்கு ஒரு மூன்று சக்கர சைக்கிள் இருந்தால், அவர்களின் வாழ்கையிலும் மாறுதல் ஏற்படுமே என்று நினைத்தேன்.

இது போல் அல்லல்படுபவர்களை நேரில் சந்தித்தேன். அவர்களின் வேதனைகளை என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள். அவர்களில் யார் உண்மையான பயனாளிகள் என்பதை அறிந்து கொண்டு இந்த மூன்று சக்கர சைக்கிளைத் தர ஆரம்பித்தேன். இப்போது எண்ணிக்கை 49 ஆகியிருக்கு. கூடிய விரைவில் 50வது மாற்றுத் திறனாளிக்கு உறுதுணையாளராக இருக்கப் போகிறேன் என்று நினைக்கும் போது மன நிறைவு வருகிறது.

நான் சைக்கிள் கொடுத்ததில் பல பேர் கர்சிப் விற்பது, ஊதுபத்தி விற்பது என்று அவர்கள் தன்னம்பிக்கையுடன் உழைக்கிறார்கள். அது மட்டும் அல்லாமல் ஒவ்வொரு ஜனவரி-1ம் தேதியும் அரசு மருத்துவமனை சென்று இலவசமாக ஸ்ட்ரச்சர் தள்ளுவேன். அங்கு வரும் வசதியில்லாத அட்மிட்டாக வரும் நோயாளிகளை அழைத்து செல்வேன். எங்கள் கும்பத்தினரின் ஒவ்வொரு தீபாவளி, பொங்கல் என எல்லா விசேசங்களும் ஏதாவதொரு ஆதரவற்ற இல்லங்களிலேயே நடக்கும்.

இப்போது, கோவையில் 5 குழந்தைகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். இவை எல்லாவற்றையும் என் சொந்த வருவாயில் மட்டுமே செய்கிறேன். அவர்களின் இருவர் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதி ஒருவர் 413 மதிப்பெண்ணும், மற்றொரு மாணவி 429 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இதை விட எனக்கு வேற என்ன வேண்டும்.

என்னுடைய 50-வது சைக்கிள் வழங்கும் விழாவுக்கு நீங்களும் வரவேண்டும் என அழைப்பு விடுத்தவர், வேறு யாராவது இது போல் பயனாளிகள் இருந்தால் சொல்லுங்கள் மாற்றுத் திறனாளிகளும் வளமான இந்தியாவின் தூண்களே," என்றார் சுசில்குமார்.

தன்னுடைய சமுகப் பணிக்காக டெல்லியில் 2004ம் ஆண்டு "டைமண்ட் ஆப் இந்தியா" என்ற விருதையும், கோவை சமுக சேவையமைப்புகள் சார்பில் "எக்சலேன்ட் அச்சீவர்", "பெஸ்ட் டோனர்" என்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.

கால்களில்லாத, கல்வி கிடைக்காதவர்களுக்கு துணாக இருக்கும் சுசில்குமார் போன்றவர்களின் பாதையை நாமும் பின்பற்றலாமே..!

*

Tamil English  
(tamil typing : ammaa = அம்மா, vikatan = விகடன்)
 Name
  E-Mail
  Comment
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவுக்கு நன்றி. நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும். காத்திருக்கவும்)
For contents & Feedback: youthful@vikatan.com I For technical issues : webmaster@vikatan.com I For Advt: dotcom@vikatan.com
Copyright © 2008 Vikatan.com Pvt Ltd. all rights reserved.