சென்னை, செப்.30 : திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பெற்ற பட்டத்தையும், ரெகுலர் கல்லூரிகளில் பெற்ற பட்டத்தையும் ஒன்றாக கருத வேண்டும் என்று கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை பெருங்குடியை சேர்ந்த ஏ.ரமேஷ் என்கிற ரமேஷ் மணிகண்டன் பொதுநலன் கருதி தாக்கல் செய்த மனுவில், " தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் பல்வேறு பட்ட வகுப்புகளை நடத்தி வருகிறது. 18.8.2009 அன்று தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்த துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. 12-ம் வகுப்பு முடித்தவர்கள் திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் மூலம் டிப்ளமோ மற்றும் பட்டம் பெற்றவர்கள் அரசு பணி மற்றும் பதவி உயர்வுக்கு தகுதியுடையவர்கள் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் பொருளாதார சமூக ரீதியில் பின்தங்கியவர்கள். இவர்களை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டம் பெற்றதால் குற்றம் புரிந்தவர்களாக கருத முடியாது. இந்த நிலையில், திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. படித்துவிட்டு, பின்பு பி.எல். பட்டம் பெற்றவர்களை பார் கவுன்சில் பதிவு செய்ய மறுக்கிறது. காரணம், திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றதை பார் கவுன்சில் ஏற்கவில்லை.
திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றவர்களும், ரெகுலர் படிப்பில் எம்.ஏ. படித்தவர்களும் பி.எல். நுழைவு தேர்வில் வெற்றி பெற்று, 3 ஆண்டு பி.எல். படிப்பு படிக்கிறார்கள். ஆனால் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. படித்த மாணவர்களை மட்டும் பார்கவுன்சிலில் பதிவு செய்ய மறுக்கப்படுகிறது. இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழக மானியக்குழு, தொலைதூர பல்கலைக்கழகம் இடையே குழப்பமான நிலை உள்ளது.
ஆகவே, ரெகுலர் படிப்பில் பட்டம் பெற்றவர்களை போல், திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களையும் ஒன்றாக கருத வேண்டும். ஆகவே, திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் படித்த எம்.ஏ. படிப்பையும், ரெகுலர் கல்லூரிகளில் எம்.ஏ. படித்தவர்களையும் சமமாக பாவிக்க முறைப்படுத்தும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற குழப்பங்களை தவிர்க்க தெளிவான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்,' என்று அந்த மனுவில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதிகள் டி.முருகேசன், எம்.ஜெய்சந்திரன் ஆகியோர், இம்மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். மேலும், இதுபற்றி பதில் தருமாறு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
|