திருவாரூர், செப்.30 : மத்திய பல்கலைக்கழகங்களில் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் திருவாரூரில் மத்திய பல்கலைக் கழகம் துவக்க விழா இன்று நடைபெற்றது.
இதில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் கலந்து கொண்டு, பல்கலைக் கழகத்தை துவக்கி வைத்து, கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் கருணாநிதி பேசுகையில், "திமுக ஆட்சிக் காலத்தில் ஆரம்ப பள்ளிகள் மட்டுமல்லாமல், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் நிறுவப்பட்டன. கல்லூரிகளும் அதிகரித்தன. அதில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்தது.
இந்த திருவாரூர் பல்கலைக் கழகத்தை உருவாக்க காரணமாக இருந்த மத்திய அமைச்சர் கபில் சிபலுக்கும், முந்தைய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜூன் சிங்குக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கிராமப்புற மக்களும், அகில உலக மக்களுக்கு இணையாக கல்வி பெறவேண்டும் என்ற கபில் சிபலின் கருத்தை இந்திய பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர்களும், ஏனை துணை வேந்தர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த பல்கலைக்கழகங்களில், கிராமப்புற மாணவர்கள் அதிகம் கல்வி பயிலும் வகையில் 50 சதவீத மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் அனுமதியை மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்க கபில்சிபல் முயற்சி எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்," என்றார் முதலமைச்சர் கருணாநிதி.
முன்னதாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் பேசுகையில், "மனு நீதி சோழன் ஆண்ட திருவாரூரில் இந்தப் பல்கலைக் கழகத்தை அமைப்பது பொருத்தமானது. இந்தப் பல்கலைக் கழகத்தை அமைப்பது முதலமைச்சர் கருணாநிதி காட்டிய ஊக்கம் பாராட்டத்தக்கது.
உலக அளவில் எரிசக்தி தேவை தற்போது பெரும் சவாலாக உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை நிலக்கரியையும், எண்ணெய் போன்ற இயற்கை வளத்தையே நம்பியிருக்கிறோம். 70 சதவீத பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதி செய்யும் நிலையில் நாம் இருக்கிறோம். இதற்கு மாற்றாக என்ன செய்ய வேண்டும் என்ற அறிவை, ஞானத்தை போதிப்பதாக உயர்கல்வி இருக்க வேண்டும். இதுதான் மத்திய அரசின் நோக்கமாகும்.
கிராமப்புற பள்ளிகளிலிருந்து உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களின் விகிதாச்சாரம் இந்தியாவைப் பொறுத்தவரை 12 சதவீதமாக மட்டுமே உள்ளது. இது போதுமானது அல்ல. ஒரு நாடு வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் மிக அதிக அளவில் மாணவர்கள் உயர் கல்விக்கு செல்ல வேண்டும். இந்த நோக்கத்தை மையமாககொண்டு காங்கிரஸ் க்ட்சியும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் பல்கலைக்கழகங்களை அதிகரிக்க முடிவு செய்தது.
இதனை எட்டும் வகையில் 11வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் கல்விக்கான ஒதுக்கீடு 8 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாக அதிகரித்தது. இதை வைத்து 14 புதிய உலகத் தரத்திலான பல்கலைக் கழகங்களை நிறுவ திட்டமிடப்பட்டு தற்போது தமிழ்நாட்டின் முதல் மத்திய பல்கலைக்கழகம் தொடங்கப்படுகிறது.
இந்த பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் அறிவே பிரதானமாக இருக்க வேண்டும். அதற்கு தரமான கல்வி தேவை. இந்த தரமான கல்வியும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும். அதற்கு பிற்படுத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் உயர் கல்வி பயிலவேண்டும்.அந்த வகையில் இந்த பிற்படுத்தப்பட்ட பகுதியில் இந்த பல்கலைக்கழகம் அமைவது பொருத்தமாகும்.
இந்தப் பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை முழு சுதந்திரத்தை மத்திய அரசு அளிக்கும். இதனுடைய பாடத் திட்டங்கள் போன்ற அனைத்து துறைகளிலும் மத்திய அரசு தலையிடாது. உள்ளூர் பிரச்னைகளையும், உலக பிரச்னைகளையும் அறிவார்ந்த முறையில் அணுகி அவற்றிற்கு தீர்வு காணும் வகையில் இந்த பல்கலைக்கழகத்தை உயர்த்த வேண்டியது துணைவேந்தர் மற்றும் ஆசிரியர்களின் பணியாகும். இந்த பல்கலைக்கழகம் உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகமாக திகழ வாழ்த்துகிறேன்," என்றார் கபில் சிபல்.
இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்பட மத்திய, மாநில அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
|