|
- கிருஷ்ணவேணி
சுதாவின் இ-மெயிலைக் கண்டவுடன் துள்ளி குதித்தாள் மீரா. பிரசவத்துக்காக விடுப்பு எடுத்திருந்த சுதா மீண்டும் வேலையில் சேர்ந்துவிட்டாளாம், உடனே சென்று அவளை பார்க்க மீராவின் மனம் துடித்தது.
ஆனால், நினைத்ததை உடனே செயல்படுத்த அவளால் முடியுமா? அவள்தான் சாஃப்ட்வேர் சிறையில் மாட்டிக்கொண்ட புலியாயிற்றே!
தன் வேலையை நினைத்தபோது சட்டென்று வெறுப்பு மண்டியது. தலையை உதறிக்கொண்டாள். இத்தனை கஷ்டத்திலும் இன்று கெளரவமாக வாழ முடிவது, இந்த வேலையால்தான். சென்ற வாரம் நான்கு நாட்கள் நைட் ஷிஃப்ட்டுக்கு சென்றிருந்தாள், அதனால் திங்கட்கிழமை விடுப்பு கிடைத்தாலும் கிடைக்கலாம். திங்களன்று சுதாவை பார்க்க வருவதாக பதில் மெயிலை தட்டிவிட்டாள் மீரா.
காத்திருந்த நாளும் வந்தே விட்டது. உற்சாகமாக கிளம்பியவளை அரவிந்த் விநோதமாக பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு புன்னகையை மட்டும் வீசிவிட்டு கிளம்பினாள்.
மீராவுக்கும் அரவிந்துக்கும் திருமணமாகி நான்கு வருடங்கள் பூர்த்தியாகியிருந்தன. இருவரும் வீட்டிலிருப்பதே ஞாயிற்றுக்கிழமை தான். அன்றும் ஊரிலிருந்து அரவிந்தின் அம்மாவிடமிருந்து போன் வந்துவிட்டால் தொலைந்தது!
"ரெண்டு பேரும் என்னடா நெனச்சிட்டிருக்கீங்க மனசுல? யாரடா ஏமாத்த பாக்கறீங்க? பேரப்பிள்ளய பாத்துட்டுதான் கண்ண மூடணும்னு மாரியாத்தா கோயிலுக்கு நேந்துகிட்டு, செவ்வா வெள்ளி வெரதமிருக்கேன், ஒரு புள்ளைய பெத்து கொடுத்துட்டு என்ன வேணா செய்ங்க.."
குறைந்தது முக்கால் மணி நேரத்துக்கு ஓய மாட்டாள்.
அரவிந்துக்கும் குழந்தை வேண்டும் என்று கொள்ளை ஆசை தான். ஆனால், வீட்டு கடன் முடியும் வரை குழந்தை வேண்டாம் என்பது மீராவின் எண்ணம். இருவருக்குமிடையே வாக்குவாதம் நீண்டு சண்டையில் முடியும். இரண்டு மூன்று நாட்கள் கூட பேசாமல் இருப்பார்கள்.
*
அடையார் பேருந்து நிறுத்தத்தை அடைந்தாள், மீரா. பத்து மணி வெயில் சுள்ளென்று முகத்தில் அறைந்தது. சோழிங்கநல்லூர் செல்லும் பேருந்தில் உட்கார இடம் கிடைத்தது. அங்குதான் சுதாவின் அலுவலகம் உள்ளது.
மீராவும் சுதாவும் கல்லூரித் தோழிகள். ஹாஸ்டலிலும் ஒரே அறையில் இருந்தவர்கள். சுதாவை பற்றி நினைக்கும் போதே மீராவுக்குள் உற்சாகம் கரை புரண்டோடியது. சுதாவும் சாஃப்ட்வேர் துறையில் தான் பணி புரிந்தாள். அவளுடைய கணவன் ஒரு சாதாரண கம்பெனியில் வேலை பார்த்து வந்தான். அவளது தாய் வீடு செங்கல்பட்டில் இருந்தது. மூன்று மாதங்களுக்கு முன் அவளுக்கு குழந்தை பிறந்தவுடன், மீரா சென்று பார்த்துவிட்டு வந்தாள்.
சுதாவின் அலுவலகத்தை அடைந்து, தகவல் கூறிவிட்டு ரிசப்ஷனில் காத்திருந்தாள் மீரா. அரைமணி நேரத்துக்குப் பிறகும் அவள் வராததால், பொறுமை இழந்துகொண்டிருந்தபோது, தோளை தொட்டன சுதாவின் விரல்கள்.
"ஸாரி மீரா லேட்டாயிடுச்சு, மீட்டிங்ல இருந்தேன்."
சுதாவிடம் வாட்டம் தெரிந்தது. நிறைய அழுதிருப்பாள் போலும், முகம் வீங்கியிருந்தது.
"சுதா ஆர் யு ஆல் ரைட்? என்ன சொல்றா, உன் குட்டி பொண்ணு?"
"கேன்டீனுக்கு போய் பேசலாம் வா மீரா."
ஓரமாய் இருந்த இருக்கையில் உட்கார்ந்தவள், மனம் உடைந்து அழத் தொடங்கினாள்.
"என்னத்த சொல்றது மீரா, என் வாழ்க்கையே நரகமாயிடுச்சு. குழந்தையை அம்மாகிட்ட விட்டிருக்கேன். வாரம் ஒரு நாள்தான் போய் பாக்க முடியுது."
"அம்மா உன் கூட வந்து இருக்க மாட்டாங்களா?"
"வர மாட்டாங்க மீரா. ஏற்கெனவே ரெண்டு வீட்டுக்கும் பயங்கர சண்டை. இதுல என் கூடல்லாம் வந்து இருக்கமாட்டாங்க. இங்கேயும் யாரும் பார்த்துக்க தயாரா இல்ல. பால் வேற அது பாட்டுக்கு சுரந்துட்டே இருக்கு. அரை மணி நேரத்துக்கு ஒரு தரம் பாத்ரூமுக்கு போய் ட்ரெயின் பண்ணிகிட்டு வரேன். குழந்தை ஞாபகமாவே இருக்கு. வாழவே பிடிக்கல... ஏன்டா படிச்சோம்னு இருக்கு தெரியுமா? இதுல அடுத்த மாசம் யு.எஸ் ட்ரிப் வேற போகணும். ஒரு குழந்தைக்கு அம்மாவா இருக்க முடியல... என்ன ப்ரயோஜனம் சொல்லு..? நான் படிச்ச படிப்பு, வாங்கின யுனிவர்சிட்டி ராங்க் எல்லாம் கூட வேஸ்ட்னு தோணுது."
"கடவுளே, சுரேஷ் என்ன சொல்றார்?"
"என்ன சொல்லுவார், கொஞ்சம் பொறுத்துக்கோ என்கிறார்."
"சுதா கேக்கறேன்னு தப்பா நெனைக்காத, நீ இப்ப அவசியம் வேலைக்குப் போய்தான் ஆகணுமா?"
"என்ன மீரா இப்டி கேக்கற, என் சம்பளத்தை நம்பித்தான் முப்பது லட்சம் லோன் போட்டு வீடு கட்டியிருக்கோம். எல்லாம் என் தலைவிதி."
அவளை சமாதானப்படுத்திவிட்டு கிளம்புவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. தலைவலி மண்டையை பிளந்தது. பசித்தது, ஆனால் சாப்பிட பிடிக்கவில்லை. வீட்டுக்கு வந்ததும் டீ போட்டு குடித்துவிட்டு படுக்கையில் சாய்ந்தாள்.
பணத்துக்காக எதையெல்லாம் தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது என்று நினைத்தபோது வேதனை பொங்கியது. சுதாவின் கணவன் போலில்லை அரவிந்த். குழந்தை பெற்றுக்கொள் போதும், கடனை நான் அடைத்துக்கொள்கிறேன் என்கிறார். எல்லாம் இருந்தும், கொஞ்ச நாட்களாக ஏதோ ஒரு வெறுமை சூழ்வதைப் பற்றி யோசித்தபடியே தூங்கிப் போனாள்.
*
மாலையில் எழுந்தபோது மணி ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அரவிந்துடன் பேசி இரண்டு நாட்களாகிவிட்டன. அவனுக்குப் பிடித்த சப்பாத்தியும் குருமாவும் செய்து ஹாட்பேக்கில் வைத்தாள். குளித்துவிட்டு விளக்கேற்றினாள். கம்ப்யூட்டரை உயிர்ப்பித்து, இன்டர்நெட்டுக்குள் புகுந்தாள்.
அரவிந்த் வந்ததும் கம்ப்யூட்டரில் மும்முரமாக அவள் ஏதோ செய்து கொண்டிருந்ததை பார்த்துவிட்டு தொந்தரவு செய்ய மனமில்லாமல் தானே காபி கலந்து குடித்துவிட்டு பால்கனியில் போய் நின்றான். வானம் பார்த்தான். ஒன்றிரெண்டு நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்ததைத் தவிர வானம் நிச்சலனமாக இருந்தது. காலை ஆபீஸில் சித்ரா மேடம் பேசியது நினைவுக்கு வந்தது. அவர் அரவிந்தை விட பத்து வயது பெரியவர், திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாய்.
"கடவுள் கொடுப்பார் அரவிந்த், நமக்குத்தான் அதை காப்பாத்திக்க தெரியணும். எத்தனை பேர் குழந்தை இல்லைனு கோயிலுக்கும் ஆஸ்பத்தரிக்கும் அலைஞ்சிட்டிருக்காங்க. சீக்கிரமா குழந்தை பெத்துக்கோங்க, உங்களுக்காக நான் ப்ரே பண்றேன்," என்றார்.
மீராவைப் பற்றி யோசித்தான். எத்தனை உயர்ந்த மனம் அவளுக்கு. திருமணமாகி வந்த ஆறு மாதத்துக்குள் நாத்தனாரின் திருமணத்துக்கே மனமுவந்து லோன் போட எத்தனை பெண்களுக்கு மனம் வரும்? ஏதோ பிடிவாதம், எல்லோர் முன்னாலும் ஜெயித்துக் காட்ட வேண்டும் என்ற வெறி. குழந்தை விஷயத்தை எப்படி அவளுக்குச் சொல்லி புரிய வைப்பது என்று யோசித்தபடியே கீழே பார்த்தான். தெருவே காலியாக இருந்தது. அனைத்து வீடுகளும் சீரியலில் மூழ்கி இருந்தன. தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும் ஒன்றிரெண்டு குழந்தைகளைக் கூட காணவில்லை.
அழைப்பு மணி ஒலித்தது. திறந்தவன் ஆச்சர்யத்தில் மூழ்கினான். அவனது நண்பன் ரமேஷ் தன் மனைவி, குழந்தையுடன் நின்றிருந்தான். சத்தம் கேட்டு வெளியே வந்தாள் மீரா.
"வாங்க... வாங்க... எவ்வளவு நாளாச்சு பாத்து, உங்கள பத்தி அடிக்கடி பேசிகிட்டிருப்பாரு. எப்ப வந்தீங்க மதுரைலேர்ந்து?"
"நேத்து வந்தோம். ஒரு கல்யாண ஃபங்ஷனுக்கு வந்தோம். உங்க வீடு பக்கத்துல இருந்ததால, ஒரு சர்ப்ரைஸ் விசிட் அடிக்கலாம்னு வந்தோம். நைட் பாண்டியன்ல கெளம்பறோம்..."
பேசிக்கொண்டே இருக்கையில் ரமேஷின் ஆறுமாத குழந்தை மீராவிடம் தாவியது. ரோஜாப்பூக்குவியலாய் இருந்த அந்த பெண் குழந்தை அவள் தோளில் சாய்ந்துகொண்டு சுரிதாரை நக்கியது. அவள் முகத்தைப் பார்த்து சிரித்தது. குழந்தையின் ஸ்பரிசம் மீராவை என்னவோ செய்தது. அவளை அறியாமல் கண்கள் பனித்தன.
விருந்து சாப்பிட்டதால் எதுவும் வேண்டாம் என்று மறுக்க, மீரா அவர்களுக்கு ஜுஸும், குழந்தைக்கு பாலும் கொண்டு வந்தாள்.
அவர்கள் இருந்த அந்த அரைமணி நேரமும் குழந்தை மீராவிடம் இருந்தது. கீழே சென்று அவர்களை வழியனுப்பிவிட்டு வந்தவள் ஏதோ சூன்யமாக உணர்ந்தாள். அரவிந்த் அவளை பொருட்படுத்தாமல் மறுபடி பால்கனியில் நின்றுகொண்டிருந்தான். டைனிங் டேபிளில் தலைகவிழ்ந்து படுத்துக்கொண்டிருந்த மீராவைப் பார்த்தான். அருகில் சென்று அவள் தலையை மெல்ல வருடினான். மீரா அவன் தோளில் சாய்ந்து கதறத் தொடங்கினாள்.
"எனக்கு குழந்தை வேணும், அரவிந்த்... குழந்தை வேணும்..."
|