- த.கதிரவன்
சென்னை, அக்.30,2009 :
யாரைத் திருப்திப்படுத்துவதற்காக சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்துவதில் தமிழக அரசு அவசரம் காட்டி வருகிறது? என தமிழ்நாடு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
சமச்சீர் கல்வி முறையை அமுல்படுத்துவதில் தமிழக அரசு அசுர வேகம் காட்டி வருகிறது. இந்த அசுர வேகத்துக்கு தடைபோட மெட்ரிக் பள்ளிகளும் முழு மூச்சாக போராட்டக் கொடி பிடித்துவருவதும் தெரிந்ததே!
இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை - சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் வெள்ளிக்கிழமை காலை தமிழ்நாடு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் சங்கம் சார்பாக கண்டனக் கூட்டம் நடத்திக் கலைந்தார்கள்.
இக்கூட்டத்தில் பேசிய எல்லோருமே மெட்ரிக் கல்வி பயின்றவர்கள் பல்துறையில் பெற்ற வெற்றி விகிதாசாரத்தை மறக்காமல் குறிப்பிட்டனர்.
சமச்சீர் கல்வி முறையை பெரும் முனைப்போடு கொண்டு வர நினைக்கும் தமிழக அரசுக்கு அதனை திறம்பட நடத்திச் செல்லும் நிர்வாகத் திறமை இருக்கிறதா? அவசர அவசரமாக சமச்சீர் கல்வி முறையை அமுல்படுத்த துடிப்பது யாரைத் திருப்திப்படுத்த? என்று வரிசையாக கேள்விக் கணைகளை வீசவும் தவறவில்லை.
கேள்விகளுக்கு உரிய பதில் கிடைக்குமா?
|