சமத்துவம் : மோகன் குமார் கவிதைகள்


- மோகன் குமார்

முயற்சி

குரங்கு பெடலில்
சைக்கிள் ஒட்டியும்
முட்டி தேய விழுந்து
ரத்தம் பார்த்திருக்கிறேன்.

நீந்த தெரியாமல்
தண்ணீர் குடித்து
நீருள் வீசிய அண்ணனை
ஏசியிருக்கிறேன்..

தேர்வுக்கு
முந்தைய வாரத்தில்
தலையணை நனைய
பயந்து அழுதிருக்கிறேன்..

பிரச்னைகள்
விஸ்வரூபம் எடுக்கையில் எல்லாம்
விக்கித்து நின்றிருக்கிறேன்..

என்றாலும் கூட
நான் நீந்துகிறேன்..
தேர்வுகளை வெல்கிறேன்

முயற்சி தரும் சுகத்தில்
லயித்து வாழ்கிறேன்...

*


சமத்துவம்


கணவனை இழந்த
அடுத்த வீட்டு சிவகாமி
பத்தாம் நாள்
பூவும் போட்டும் விடுத்து
திரு நீறு அணிந்தாள்...

மனைவியை இழந்த
எதிர் வீட்டு முருகையன்
மூணாம் மாசம்
துக்கமெல்லாம் தலை முழுகி
பட்டு வேட்டி அணிந்தான்...

*

முன்னேற்றம்

வேக வேகமாய் போனால் தான்
முன்னே போக முடியும்...

முன்னே போன சந்தோஷம்
மனசுள் இருந்தாலும்
புற்கள் மிதி பட்ட வருத்தம் மட்டும்
நெருடலாக நினைவினிலே...

*

புரிதல்

ஒன்றன்
அருகில் உள்ள போதல்ல
ஒன்றை விட்டு
தூரமான பின்பே
ஒன்றைப் புரிய முடியும்


*

வேலை


படிக்கட்டுகள்...
புன்சிரிப்புகள்...
அலைக்கழிப்புகள்...
நிராகரிப்புகள்...
எனினும்
என்னுள் உண்டு
நம்பிக்கை...


*

நேயம்

எல்லோருக்கும் தர
என்ன உண்டு என்னிடம்
புன்னகை தவிர...

*

Tamil English  
(tamil typing : ammaa = அம்மா, vikatan = விகடன்)
 Name
  E-Mail
  Comment
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவுக்கு நன்றி. நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும். காத்திருக்கவும்)
For contents & Feedback: youthful@vikatan.com I For technical issues : webmaster@vikatan.com I For Advt: dotcom@vikatan.com
Copyright © 2008 Vikatan.com Pvt Ltd. all rights reserved.