தமிழ் இளைஞர்களே... பன்மொழித் தேர்ச்சி பெறுங்கள்!

- க.நா.சாந்தி லெக்ஷ்மணன், போர்ட் பிளேயர், அந்தமான்

டாலர் கனவுகளில் மூழ்கிக் கிடக்கிறார்கள், இளைய சமுதாயத்தின் பெரும்பான்மையானோர்.

உலகளாவிய வர்த்தகம், உலகமயமாக்கப்படுதல், அன்னிய நாட்டில் வேலைவாய்ப்பு... இவை இன்று அதிகம் பேசப்படும், இலக்காக நிர்ணயிக்கப்படும் விஷயங்கள் ஆகிவிட்டன.

இளைஞர்களின் ஆசையும் குறிக்கோளும் இதுதான். ஆனால், அவற்றை நிறைவேற்றிகொள்ள எல்லோருக்கும் சமவாய்ப்புக்கள் உள்ளதா என்றால் இல்லை. ஆசைகள் நிறைவேற தகுதிகளை உயர்த்திக்கொள்ள வேண்டும்.

இன்று எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று சொல்லி தமிழைத் தவிர மற்ற மொழிகளைத் தமிழர்கள் கற்க வழியில்லாத ஒரு சூழலை நம் அரசியல்வாதிகள் உருவாக்கியுள்ளனர். அவர்களின் வாரிசுகள் சரளமாக ஆங்கிலத்திலும் இந்தியிலும் நேர்காணல் தருகிறார்களே... அது எப்படி?

நகரவாசிகளுக்கு தனி வகுப்புகள் மூலம் பிறமொழி கற்க வாய்ப்புகள் உள்ளன. ஆனால், கிராமப்புற இளைஞர்களுக்கு தமிழைத் தவிர வேற்று மொழி கற்கும் வாய்ப்புகள் மிகுதியாக இல்லை. கல்லூரிப் பாடங்களைத் தமிழ் படுத்தியதில் தமிழ் இளைஞர்களை பெரிய வணிக நிறுவனங்களில் எழுத்தர் வேலைக்குக் கூட தகுதியற்றவர்களாய் ஆக்கியிருக்கும் நிலையை என்னவென்றுச் சொல்வது?

தமிழ் நம் தாய் மொழி. தமிழ் மிகப் பழமையான உயர் தனிச் செம்மொழி. உயர்ந்த இலக்கியப் பிண்ணனி கொண்ட மொழி. இதில் இரு வேறு கருத்து கிடையாது.

ஆனால், தமிழை மட்டுமே கற்றால் தான் தாய் மொழிப் பற்று என்றோ, அப்போதுதான் தமிழ் வளரும் என்பதோ ஏற்றுக் கொள்ளக்கூடியதா?

தனியார் பள்ளிகளில் இந்தி, ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால் எழுதவும் படிக்கவும் மட்டுமே சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆசிரியர்களுக்கே பேசத் தெரியாது.

தமிழை மட்டுமே கற்பதால் எங்கு சென்றாலும் நாம் தனித்து விடப்படுவோம். அந்தமானுக்கு வருகை தரும் மற்ற மாநில மக்கள் அனைவரும் அரசு வேலை பெற்று விட நம்மவர்கள் கடைகளிலும், கடைநிலைத் தொழிலாளர்களாகவும் தான் ஆக வேண்டியுள்ளது.

மத்திய அரசின் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்றும், இந்தி மொழி எழுதப் படிக்கத் தெரியாத ஒரே காரணத்துக்காகவே, அரசு வேலை இழந்தவர்களில் ஒருத்தி என்ற தகுதி ஒன்றே என்னை இப்படி ஒரு கட்டுரை எழுதத் தூண்டியது.

தமிழ் இளைஞர்களே..!

இந்தியாவை ஆள இந்தி மொழியையும், உலகை ஆள ஆங்கில மொழியையும் கற்றுத் தேர்ச்சி பெறுங்கள்.

ஓட்டு வாங்க அரசியல்வாதிகள் வரும் போது, உங்களின் கோரிக்கைகளுள் ஒன்றாக இதையும் முன் வையுங்கள். அப்புறமென்ன? உலகின் எந்த மூலைக்கும் உங்களின் கரம் ஓங்கும்!

Tamil English  
(tamil typing : ammaa = அம்மா, vikatan = விகடன்)
 Name
  E-Mail
  Comment
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவுக்கு நன்றி. நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும். காத்திருக்கவும்)
For contents & Feedback: youthful@vikatan.com I For technical issues : webmaster@vikatan.com I For Advt: dotcom@vikatan.com
Copyright © 2008 Vikatan.com Pvt Ltd. all rights reserved.