ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு... பீகாரின் 'சூப்பர் 30' மீண்டும் சதமடித்து சாதனை!

பாட்னா, மே 26,2010

பீகாரிலுள்ள 'சூப்பர் 30' திட்டத்தின் கீழ் பயிற்சி மையத்தைச் சேர்ந்த 30 மாணவர்களுமே இந்த ஆண்டின் ஐ.ஐ.டி. கூட்டு நுழைவுத் தேர்வில் (IIT - JEE) தேர்ச்சி பெற்று மீண்டும் சாதனை படைத்துள்ளனர்.

இளம் கணித வல்லுனர் ஆனந்த் குமாரால் நிறுவப்பட்டு ஏழை மாணவர்களுக்காக நடத்தப்படும் ராமானுஜர் கணிதப் பள்ளி மையத்தின் மாணவர்கள் அனைவருமே கடந்த ஆண்டின் ஐ.ஐ.டி. கூட்டு நுழைவுத் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ள திறமை வாய்ந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இலவசமாக உரிய பயிற்சிகள் அளித்து, அவர்களை ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அடைய வித்திடுவதே 'சூப்பர் 30' திட்டத்தின் முதன்மை நோக்கம்.

பீகாரின் பாட்னாவில் கடந்த 2002 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தை உருவாக்கி தனது 'ராமானுஜன் ஸ்கூல் ஆஃப் மேத்தமெடிக்ஸ்' மூலம் செயல்படுத்தி வருகிறார் ஆனந்த் குமார்.

முந்தைய ஏழு ஆண்டுகளில், சூப்பர் 30 மூலம் பயிற்சி பெற்ற 210 மாணவர்களில் 183 பேர் ஐ.ஐ.டி. மையங்களில் சேர்ந்துள்ளனர். துவக்க ஆண்டில் 18 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலை படிப்படியாக உயர்ந்து, கடந்த ஆண்டில் 30 மாணவர்களுமே தேர்ச்சி பெற்று 100% தேர்ச்சி விகிதம் என்ற சாதனை நிகழ்ந்தது.

இந்நிலையில், இந்த ஆண்டும் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது குறித்து நிருபர்களிடம் ஆனந்த் குமார் கூறுகையில், "மீண்டும் சாதித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் பயிற்சி மையத்தில் இருந்து ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றோர் எண்ணிக்கை 212 ஆக உயர்ந்திருக்கிறது," என்றார்.

"தற்போது, வெற்றி பெற்ற ஏழை மாணவர்களுக்கு கல்விக் கடனை ஏற்பாடு செய்வதற்கு முயற்சி செய்து வருகிறேன்," என்று கூறும் ஆனந்த், கேம்பிரிட்ஜ்ஜில் வாய்ப்பு கிடைத்தும், ஏழ்மை நிலையால் அங்குச் சென்று படிக்க முடியாதது இங்கே நினைவுகூரத்தக்கது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு 'லிஸ்த் ஆஃப் பெஸ்ட் ஆஃப் ஆசியா 2010' (Best of Asia 2010) பட்டியலின் பெஸ்ட் ஃபார் தி மைண்ட் பிரிவில் ஆனந்த் குமாரின் 'சூப்பர் 30' இடம்பெற்றிருந்தது கவனத்துக்குரியது.

தொடர்புடைய செய்தி : ஏழைகளின் ஆசான்... ஆனந்த் குமாரின் 'சூப்பர் 30'-க்கு டைம் இதழ் சிறப்பிடம்!

Tamil English  
(tamil typing : ammaa = அம்மா, vikatan = விகடன்)
 Name
  E-Mail
  Comment
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவுக்கு நன்றி. நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும். காத்திருக்கவும்)
For contents & Feedback: youthful@vikatan.com I For technical issues : webmaster@vikatan.com I For Advt: dotcom@vikatan.com
Copyright © 2008 Vikatan.com Pvt Ltd. all rights reserved.