|
- செந்தில் வேலன்
நாம் ஏடுகளில் படித்துத் தெரியாத பல விஷயங்களையும் நமக்குச் சொல்லிக் கொடுக்கவல்லது, பயணங்கள். அதுவும் தெரியாத ஊர், அறியாத மொழி என்றால் நமக்குக் கிடைக்கும் அனுபவங்களுக்கு அளவே கிடையாது!
சில வருடங்களுக்கு முன்பு பணி நிமித்தமாக சில மாதங்கள் ஜான்சியில் தங்க வேண்டியிருந்தது. டெல்லிக்கு இரயிலில் சென்றிருக்கும் அனைவருக்கும் ஜான்சியை நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். மேலும், ஜான்சி என்றால் நினைவுக்கு வருவது ஜான்சி ராணி லக்ஷ்மி பாயும் அவரது விடுதலைப் போராட்டமும்.
மத்திய பிரதேச, உத்திரப் பிரதேச எல்லையில் அமைந்த நகரம் ஜான்சி. இது, ஒரு திசையில் வழிப்பறிக் கொள்ளையில் புகழ்பெற்ற சம்பால் பள்ளத்தாக்கும், ஒரு திசையில் கான்பூரும், மற்றோரு திசையில் காஜூராஹோ செல்லும் வழியும், நகரைச் சுற்றி ஏற்ற இறக்கங்கள் நிறைந்த பீடபூமி நில அமைப்புள்ள ஊர். புந்தில்கண்ட் என்ற அழைக்கப்படும் பகுதிக்கு தலைநகர் என்று ஜான்சியை கூறுகிறார்கள். இங்குள்ள மக்கள் புந்தில்கண்டி என்ற வட்டார மொழியையும், இந்தியையும் பேசி வருகின்றனர்.
ஜான்சி இரயில் நிலையத்தில் என்னை அழைக்க வந்திருந்த சக ஊழியர், "ஜான்சி நகரைச் சுற்றி வரும் பொழுது கொஞ்சம் கவனமாக இருக்கவும். இங்கே சர்வ சாதாரணமாக நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதைப் பார்க்க முடியும்" என்று கூறியது எனக்கு கொஞ்சம் திக்கென்று இருந்தது. அலுவல வேலை நேரத்தில் சக ஊழியர்களிடம் ஆங்கிலத்தில் பேசி வந்த நான், தங்கியிருந்த இடத்திலும் ஏதோ தெரிந்த இந்தியை வைத்து சமாளித்தேன்.
ஒரு வார காலமாக சப்பாத்தியும் பருப்பையும் சாப்பிட்டு வந்ததால் தங்கியிருந்த விடுதியில், "இங்கே இட்லி தோசை எல்லாம் கிடைக்காதா?" என்றேன். அவர், இங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சதர் பஜார் என்ற இடத்தில் "மெட்ராஸ் மெஸ்" என்ற பெயரில் ஒரு கையேந்திபவன் இருப்பதாகக் கூறினார். சரி, ஜான்சி நகரைச் சுற்றிப் பார்த்த மாதிரியும் இருக்கும், நம்ம இட்லி தோசையைப் பார்த்த மாதிரியும் இருக்கும் என்று சதர் பஜாருக்கு நடக்க ஆரம்பித்தேன்.
ஜான்சி நகரச் சுவரெங்கும் ஒட்டப் பட்டிருந்த போஜ்பூரி மொழிப் படங்களின் சுவரொட்டிகளைப் பார்த்த படியே நடக்க ஆரம்பித்த எனக்கு, வழியை மறந்து விட்டேனோ என்று தோன்றியது. ஆங்கிலம் தெரிந்த ஒருவரைக் கேட்க வேண்டும் என்று எதிரே யாராவது நன்றாக உடையணிந்தவர் (??) வருகிறாரா என்று பார்த்தபடியே நடந்தேன். நான் எதிர்பார்த்தது போல ஒருவர் வர அவரிடம் நான்,
"எக்ஸ்கியூஸ் மி, கேன் யூ ப்ளீஸ் டெல் மீ ஹவ் டு கோ டு சதர் பஜார்" என்றேன்.
சற்றும் எதிர்பார்ககாத படி என் சட்டை எட்டிப் பிடித்து, "இங்கிலாந்து மேன் ஆங்கிரேஷி பாத் கரோ, ஹிந்தூஸ்தான் மேன் ஹிந்தி பாத் கரோ" என்றவர், "தும் மதராஸி ஹே கியா?" என்றார். பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை இந்திலேயே நேராக சென்று வலப்பக்கமாகத் திரும்பிச் செல்லுமாறு கூறினார்.
சில நிமிடங்களில் சதர் பஜாரில் உள்ள மெட்ராஸ் மெஸ்ஸை அடைந்தேன். அங்கே பணியாற்றி வந்த தமிழன்பர்களிடம் எனக்கு நடந்ததை விவரித்த போது, இங்கே இந்தியில் பேசுவதையே அனைவரும் விரும்புவதாகவும், கூடிய விரைவில் இந்தியைப் பயிலுமாறும் அறிவுறுத்தினர்.
நாம் செல்லும் ஊரில் என்ன மாதிரியான மக்கள் உள்ளனர், என்ன மொழி பேசுவார்கள் எனபதை எல்லாம் தெரிந்து வைத்திருப்பது எவ்வளவு முக்கியம் என்பது எனக்குப் புரிந்தது. மேலும், பள்ளிக் காலத்தில் இந்தி கற்றிருக்க வேண்டுமோ என்ற எண்ணமும் மனதில் எழுந்தது.
ஆங்கிலத்தை மட்டும் வைத்துக் கொண்டு மும்பை, டெல்லி, பெங்களூர் போன்ற நகரங்களில் வேண்டுமானால் சமாளிக்க முடியும். தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் செல்லும் பொழுது ஆந்திர எல்லை வரையில் மட்டுமே ஆங்கிலம் செல்லும். மகாராஸ்டிராவில் உள்ள பல்லார்ஷாவை தொட்டுவிட்டால் இந்தி தான்.
அதேசமயம் என் சட்டையைப் பிடித்த அன்பர் தமிழகத்துக்கு வந்தால் என்ன செய்வார்? ஏதாவதொரு மாநகரத்தில் வேலை வேண்டி விண்ணப்பித்தால் இந்தியை மட்டும் வைத்துச் சமாளிக்க முடியுமா? கடந்த இருபது ஆண்டுகளாக இந்தியா ஓரளவு வளர்ந்து வருவதற்கும், தொழில்துறையில் முன்னேறுவதற்கும், இந்தியர்கள் வெளிநாட்டில் சிறப்பாக பணியாற்றுவதற்கும், ஐடி மற்றும் ஐடி சார்ந்த சேவைத் துறையில் முன்னேறி வருவதற்கும் நம் ஆங்கில அறிவு ஒரு முக்கிய காரணம்.
அண்மையில் நமது மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் இந்தியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று கூறியது கவனிக்கத் தக்கது.
நம் நாடு ஆங்கிலேயர்கள் கைக்கு வரும்வரை ஆயிரக்கணக்கான சிறிய மற்றும் பெரிய சமஸ்தானங்களையும், நாடுகளையும் கொண்டதாகவே இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே. தமிழ், தெலுங்கு, கன்னடம், வங்காளம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, சிந்தி, காஷ்மீரி என பிராந்திய மொழிகளே அந்தந்த நாட்டின் ஆட்சிமொழியாகவும் இருந்தது.
நம் நாட்டின் விடுதலைக்குப் பின்னரே இந்தி பிரதானமான ஆட்சி மொழியாக்கப்பட்டது. இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 40 சதவிகிதமும், பிற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மற்ற 60 சதவிகிதமும் உள்ளனர்.
மேலும் இங்குள்ள ஒவ்வொரு மொழியும் ஐரோப்பிய மொழிகளைப் போலல்லாமல், தனிப்பட்ட எழுத்து வடிவமும், சிறப்பான இலக்கண முறையும் கொண்டவை. அப்படி இருக்க தாய்மொழியையும் பயில்வதும் வளர்ப்பதும் ஒவ்வொருரின் கடமை தானே!
நாட்டில் உள்ள அனைவரும் பேசும் படியாக ஒரு மொழி தேவைப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. அதே சமயம், அது எந்த மொழி என்பதையும், அந்த மொழியைக் கற்பிப்பதில் என்ன மாதிரியான அனுகுமுறைக் கடைப்பிடிக்கப்போகிறோம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.
இந்திப் பாடத்தை பள்ளிகளில் புகுத்துவது என்று முடிவெடுத்தால், அது தேர்வுகள் இல்லாத பாடமாக இருந்தால் நன்றாக இருக்கும். அதைவிடுத்து தமிழ் அல்லது இந்தி என்று அறிவித்தால், 20 அல்லது 30 மதிப்பெண்கள் அதிகம் பெறுவதற்காகத் தமிழ் போன்ற மொழிகளைப் புறக்கணிக்கும் போக்கே வளரும்.
என்ன செய்யப்போகிறார்கள் நம்மை ஆள்வோர்?
எனக்கு ஜான்சியில் நேர்ந்ததைப் போல பிறர்க்கு நேரவும் கூடாது, தாய்மொழியைப் போற்றவும் பாராட்டவும் வேண்டும், உலக அரங்கில் போட்டியிடும் அளவிற்கு ஆங்கிலப் புலமையும் வேண்டும்.
நம் முன் சூடாக பாயாசம் உள்ளது. பாயாசமும் வேண்டும், நாக்கும் சுட்டுவிடக்கூடாது, மீசையிலும் ஒட்டக்கூடாது. எப்படி?
|