|
- ச.செந்தில்வேலன்
நம் பேருந்துகளில் "புகைப் பிடிக்காதீர்" என்று எழுதியிருப்பார்கள்.
அதைச் சில குறும்பர்கள் "பு"வை அழித்து, "கைப் பிடிக்காதீர்" ஆக்கியிருப்பார்கள். அவர்கள் "பிறர் கையைப் பிடிக்காதீர்" என்று பொருளை மாற்றுவதற்காக அப்படி செய்வதுண்டு!
ஆனால் "கை பிடி" என்பதற்கும் "கைப் பிடி" என்பதற்கும் வேறுபாடு உள்ளது.
"கை பிடி" என்றால் கையைப் பிடி என்றும், "கைப் பிடி" என்றால் பேருந்தில் வரும் கைப்பிடியையும் உணர்த்தும்.
******
அலைகடல் என்பதற்கும் அலைக்கடல் என்பதற்கும் வேறுபாடு உள்ளதாம். "அலைகடல்" என்றால் அலைகின்ற கடலையும் "அலைக்கடல்" என்றால் அலையை உடைய கடல் என்றும் பொருள்படும்.
*****
நம் திருமண அழைப்பிதழ்களில் திருவளர்ச்செல்வி என்று அச்சிடுவதைக் காண முடியும். இது தவறு. செல்வம் சிறக்கும் செல்வியாக என்றென்றும் இருக்கவேண்டும் என்றால் திருவளர்செல்வி என்றே எழுத வேண்டும்.
*****
நான் ஒரு வலைப்பதிவோ அல்லது கட்டுரையோ எழுதும் பொழுது, எனக்கு வரும் ஐயங்களில் சந்திக்குத் தான் முதலிடம். (இந்தக் கட்டுரையில் எத்தனை பிழை உள்ளதோ?). படிக்கும் பொழுது தமிழில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், எழுதும் போது பிழை வருவதைத் தவிர்க்க முடிவதில்லை.
நாம் சொல்ல வரும் கருத்தைச் சரியாக எழுத நமக்கு சந்தியைப் பற்றிய அறிவு மிகவும் தேவை. ஆகவே ஓர் இலக்கண நூல் நம் கையில் இருப்பதும் தமிழில் எழுத மிகவும் உதவும்.
*****
எத்தனை - எத்துணை என்ன வேறுபாடு?
எண்ணிக்கையைக் குறிக்கும் இடத்தில் "எத்தனை" என்ற சொல்லையும், எண்ணிக்கையில்லாத அளவு, குணம், நிறம், போன்றவற்றைக் குறிக்கும் போது "எத்துணைப் பெரியது", "எத்துணைச் சிவப்பு" என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும்.
*****
அன்று - அல்ல பயன்படுத்துவது எப்படி?
அஃது உண்மை அன்று
அவை உண்மை அல்ல
இவற்றில் அன்று என்பதை ஒருமைக்கும் அல்ல என்பதை பன்மைக்கும் பயன்படுத்துவது முறையாகும்.
*****
கீழே இணைத்துள்ளது நான் கூகுள் வேவைப் பற்றி எழுதிய கட்டுரையில் ஒரு பத்தி..
"நாம் சாட் செய்யும் போது டைப் செய்து வருகிறோம் என்றால் "typing.... " என்று ஒரு கமெண்ட் கீழே காணப்படும்.. நாம் என்ன டைப் செய்கிறோம் என்பது எதிரில் இருப்பரும் பார்த்தால்..? மிக விரைவாக சாட் செய்யாலாம் தானே? ( நாம் டைப் செய்வதை பார்க்க முடியாமல் செய்யவும் வசதி உள்ளதாம்!!)"
இதில், சாட் (chat), டைப் (type), கமெண்ட் (Comment) என்று ஆங்கில சொற்களைத் தமிழில் எழுதியிருப்பேன். அந்த சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொல் என்ன என்று தெரியாதது தான் காரணம். இது போல ஐயங்களைத் தீர்க்க நமது பயன்பாட்டில் உள்ள சில சொற்களைக் கீழே கொடுத்துள்ளேன்.
தகவல் தொழில்நுட்பத்துறை தொடர்பான ஆங்கிலச் சொற்களும் நிகரான தமிழ்ச்சொற்களும் கீழே...
Backspace - பின் நகர்வு
Backup - காப்பு
Bar Code - பட்டைக் குறிமுறை
Boot - தொடங்குதல்
Bottleneck - இடர்
Bug - பிழை
Bypass - புறவழி
Calibration - அளவீடு செய்தல்
Capacity - கொள்திறன்.
Cancel - நீக்கு
Cartridge - பெட்டகம்
Certification - சான்றளிப்பு
Channel - தடம்
Character - உரு
Charge - மின்னூட்டம்
Chat - உரையாடு
Check out - சரிபார்த்து அனுப்பு, சரி பார்
Chip - சில்லு
Chop - நீக்கு
Clip Board - பிடிப்புப் பலகை
Clone - நகலி
Coding - குறிமுறையாக்கம்
Coherence - ஓரியல்பு
Collector - திரட்டி
Concatenate - தொகு
Command - கட்டளை
Communication - தொடர்பு
Compile - தொகு
Condition - நிபந்தனை
Configure - உருவாக்கு
Contrast - வேறுபாடு
Copy - நகல்
Counter - எண்ணி
Crash - முறிவு
Credit Card - கடனட்டை
Cursor - சுட்டி
Customize - தனிப்பயனாக்கு
Cut and Paste - வெட்டி ஒட்டு
Cycle - சுழற்சி.
Data - தரவு
அவை, அவைகள் என்ன வேறுபாடு?
நமது பயன்பாட்டில் உள்ள பிற தொழில்நுட்பம் சார்ந்த கலைச்சொற்கள் அடுத்த அத்தியாயத்தில்...
நமது பயன்பாட்டில் தமிழ் - 6
|