Hi... உங்கள் படைப்புகள் எதுவானாலும் யுனிகோட் ஃபான்ட்டில் டைப் செய்து, உங்கள் புகைப்படத்துடன் youthful@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்       
   
   
நமது பயன்பாட்டில் தமிழ் - 1
 

- ச.செந்தில்வேலன்.

ண்மையில் என்னுடைய உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.

மதிய உணவுவேளையின் போது உறவினரின் மகன், "அம்மா 'சோறு' போடுங்க!!" என்றான். அதற்கு உறவினரோ, "சோறுன்னு சொல்லாதே. சாதம்னு சொல்லு..!" என்றார்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு வியப்பாக இருந்தது.

"சாதம்" என்பது தூய தமிழ்ச் சொல் கிடையாது என்பது தான் வியப்புக்குக் காரணம்.

"சோறு" என்பதே தூய தமிழ்ச் சொல். "சாதம்" என்பது வடசொல் என்பது நமக்குத் தெரியுமா?

ஆனால், நமது பயன்பாட்டில் "சோறு" என்பது தரக் குறைவான சொல்!?

*

சுத்தம் - துப்புரவு இந்த இரண்டு சொற்களில் எது தூய தமிழ்ச் சொல்?

துப்புரவு தான் தூய தமிழ்ச் சொல். ஆனால் நாம், "துப்புரவு" என்ற சொல்லை அதிகமாக பயன்படுத்துவது, துப்புரவுத் தொழிலைக் குறிப்பிடுவதற்குத் தான். இப்படி, நமக்கு தெரியாமலேயே தூய தமிழ்ச் சொற்களுக்கு நாம் இரண்டாம் இடத்தையே தருகிறோம் என்பது சிறிது யோசிக்க வேண்டிய ஒன்று.

*

ஆசிர்வாதம் - வாழ்த்து

வாழ்த்து என்பதன் வடசொல்லே ஆசிர்வாதம். ஆனால் நமது பயன்பாட்டில், "பெரியோரின் காலில் விழுந்து வாழ்த்து வாங்க வேண்டும்" என்று கூறுவது மிகவும் அரிதே. அந்த இடத்தில், "ஆசிர்வாதம்" என்ற வார்த்தையையே பயன்படுத்துகிறோம்.

இது போல, நாம் பயன்படுத்தும் பல சொற்கள் வடசொற்களே. கீழே சில எடுத்துக்காட்டுகள் (உதாரணம் என்பது வடசொல்)

வடசொல் - தமிழ்ச்சொல்

அகங்காரம் - செருக்கு
அகதி - ஆதரவற்றவர்
அகிம்சை - ஊறு செய்யாமை
அங்கத்தினர் - உறுப்பினர்
அங்கீகாரம் - ஒப்புதல்
அசுத்தம் - துப்புரவின்மை
அதிகாரி - உயர் அலுவலர்
அநீதி - முறையற்றது
அபயம் - அடைக்கலம்
அபிவிருத்தி - பெருவளர்ச்சி
அபிஷேகம் - திருமுழுக்கு
அபிப்பிராயம் - உட்கருத்து

*

திங்க் (Think) பண்ணி, யூஸ் (use) பண்ணி, டிரைவ் (drive) பண்ணி என தமிழ் பேசுபவர்களுக்கு இந்தக் கட்டுரைத் தொடர் பிடிக்காமல் போகலாம். ஆனால், நல்ல தமிழில் எழுத, பேச முனைவோருக்கு இந்தத் தொடர் பயனளிக்கும் என்றே நம்புகிறேன்.

*

"ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!" என்று நமது நினைவுக் குறிப்புகளை எழுதுவது இன்று நம் மத்தியில் அதிகமாகக் காணப்படுகிறது. அதற்கு நாம் (என்னையும் சேர்த்து) கொடுக்கும் பெயர் "அனுபவக் குறிப்புகள்".

சின்ன வயதில் நாம் ஏதாவது குறும்பு செய்தோம் என்றால், வீட்டில் நம்மிடம் கூறுவது, "அத எடுக்காதன்னு சொன்னா கேட்க மாட்டீங்கற... உனக்கு பட்டாத்தான் தெரியும்!!". அதே போல, ஒருவர் வாழ்க்கையில் அடிபட்டு முன்னேறி இருந்தால், நாம் கூறுவது, "அவருக்கு பட்டறிவு அதிகம்," என்பது தான்.

"பட்டறிவு" என்ற தமிழ்ச் சொல்லின் வடசொல்லே "அனுபவம்".

நல்லதோ கெட்டதோ "பட்டால்" தானே நமக்கு மறக்க முடியாத நினைவாகிறது? ஆனால் இன்றைய பயன்பாட்டில் "பட்டறிவு" என்ற சொல்லையும் "அனுபவம்" என்ற சொல்லையும் வெவ்வேறு பொருளுக்குப் பயன்படுத்துகிறோம்.

வட இந்தியப் பெயர்களில், "அனுபவ்" என்ற சொல் வரும் போது, "பரவாயில்லையே தமிழ்ச் சொல்லை அங்கேயும் பயன்படுத்துகிறார்கள்" என்று மகிழ்ச்சி அடைந்ததுண்டு. ஆனால், அது எனது அறியாமை என்பது புரிகிறது.

("ஞாபகம்" என்பதே "நினைவு" என்பதன் வடசொல்லே!)

*

வட மாநிலங்களில் "கார்யாலயி" என்ற வார்த்தை பெரும்பாலான அலுவகங்களில் பார்க்க முடியும். அதையே நாம் "காரியம்" என்ற சொல்லால் பயன்படுத்துகிறோம்.

காரியம் - செயல்

காரியம் என்ற வடசொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் 'செயல்'.

காரியாலயம் - செயலகம்.
காரியதரிசி - செயலர், செயலாளர்.

இங்கே, "காரியவாதி" என்ற சொல் "தனது செயலில் மட்டும் குறியாக இருப்பவரை" குறிக்கும்படி பயன்படுத்தும் வழக்கம் எப்படி வந்தது?

*

இலட்சணம் - அழகு

உனக்கு எப்படி பெண் தேட வேண்டும் என்ற கேள்வி வரும் போது, "அழகா, கண்ணுக்கு இலட்சணமா இருக்க வேண்டும்" என்று நாம் கூறுவது வழக்கம். இதனை, "அழகா, கண்ணுக்கு "அழகா" இருக்க வேண்டும்" என்று கூறுவதாகவே பொருள் கொள்ள வேண்டும்.

ஏனென்றால், இலட்சணம் என்ற வடசொல்லின் தமிழ்ச்சொல் அழகு.

மேலும் "உத்தியோகம் புருஷ இலட்சணம்" என்ற வாக்கியத்தை தூய தமிழில், "நல்ல அலுவல் ஆண்மகனுக்கு அழகு!" என்று எழுதலாம்.

*

அர்ச்சணை - மலரிட்டு ஓதுதல்

இன்று பெரும்பாலான கோயில்களில் "இங்கு தமிழில் அர்ச்சணை செய்யப்படும்" என்று எழுதி இருப்பதைக் காண்கிறோம்.

அர்ச்சணை என்பது மலரிட்டு ஓதுதல் என்பதன் வடசொல். இதே வரிசையில் கோயில்களில் பயன்படுத்தும் சில வடசொற்களுக்கான தமிழ்ச்சொல் கீழே...

வடசொல் - தமிழ்ச்சொல்

அனுக்கிரகம் - அருள் செய்தல்
ஆராதனை - வழிபாடு
உற்சவம் - விழா
கும்பாபிஷேகம் - குடமுழுக்கு
கோத்திரம் - குடி
சந்தியாவந்தனம் - வேளை வழிபாடு
சரணம் - அடைக்கலம்
சிவமதம் - சிவநெறி
பஜனை - கூட்டுப்பாடல் வழிபாடு
பிரசாதம் - திருப்பொருள்
பிரகாரம் - திருச்சுற்று
(அங்கப்) பிரதட்சனம் - வலம் வருதல்
பிரார்த்தனை - நேர்த்திக்கடன்
மந்திரம் - மறைமொழி
மார்க்கம் - நெறி, வழி
விக்கிரகம் - திருவுருவம்
யாத்திரை - திருச்செலவு.
க்ஷேத்திரங்கள் - திருப்பதிகள்

இந்த சொற்களை நாம் பயன்படுத்துகிறோமோ இல்லையோ, புதிதாக நமக்குத் தெரிந்தால் நல்லது தானே!

*

பொறியியல் கல்லூரி மாணவர்கள் வெளிநாடுகளில் மேற்படிப்புக்காகத் தயாராகும் போது, BARRON'S WORDLIST என்ற புத்தகத்தில் உள்ள சொற்களையும், அதன் அர்த்தங்களையும் மனப்பாடம் செய்வதைப் பார்க்க முடியும். அது போல நமது கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு தமிழிலும் ஒரு தேர்வு வைத்தால் எப்படி இருக்கும்?

அபூர்வம், அவசரம், அவகாசம், அவசியம் - இதில் எது தூய தமிழ்ச்சொல்..? அடுத்தக் கட்டுரையில் அலசுவோம்!

 

Tamil English  
(tamil typing : ammaa = அம்மா, vikatan = விகடன்)
 Name
  E-Mail
  Comment
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவுக்கு நன்றி. நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும். காத்திருக்கவும்)
Click Photo To View Profile    
Name
Comments
வடிவேல் கன்னியப்பன்
அய்யா! தங்களின் கருத்துக்கள் யாவும் என்னை நெகிழச் செய்தன்.தங்களின் கருத்துக்கள் செயல்பட்டால் நல்ல பலன் ஏற்படும். வாழ்க வளமுடன்.

84 day ago | Report abuse

nishar
மிக்க நன்றி நிஷார் ஆலாடன்

120 day ago | Report abuse

Daniel T. Rajan
This article is very useful for all to improve their Their Tamil language. Congratulations for your effort.

219 day ago | Report abuse

ganee
ரொமப நல்லா இருக்கு

225 day ago | Report abuse

Rajesh-Mettupalayam
நல்ல தகவல், அற்புதம். தொடரட்டும்.

225 day ago | Report abuse

tamil
சென்னைத் தமிழ் எதில் சேர்ந்தது? முதலில் நம் மக்கள் ' இருக்கிற தமிழைக் கொலை செய்யாமல் பேசினாலே பெரிது என்ற நிலை. இதில் நீங்க வேற.....

226 day ago | Report abuse

K.Ravi
பழையன கழிதலும் புதியன புகுதலும் மரபே !!!

226 day ago | Report abuse

Shankar
எல்லா மொழிகளும் கடன் வாங்கிதான் வளர்தன. எதுவும் திணிக்க பட்டால் தவறு. இல்லையேல் வழக்கம், வீட்டு பழக்கம் மொழி வளர்வதர்க்கும் தேய்வதர்க்கும் காரணம்.

226 day ago | Report abuse

Sen
திரு. செந்தில் வேலன், உங்கள் நோக்கத்தை பாராட்டுகிறேன். சொற்களை கற்றுக்கொள்வது நல்லதே. அதே நேரம், மொழி வளர்வது புதிய சொற்களை புகுத்துவதன் மூலமும் தான். எடுத்துக்காட்டாக உங்கள் கட்டுரையில் உள்ள 'மதிய', 'யோசிக்க', 'மத்தியில்', 'அதிகமாக(?)' போன்ற சொற்கள் உள்ளன. இவை எல்லாம் வடமொழியிலிருந்து வந்தவையே!

226 day ago | Report abuse

Selvakumar
அருமையான கட்டுரை. தொடரட்டும்

227 day ago | Report abuse