|
- ச.செந்தில்வேலன்
இந்த தலைப்பைப் பார்த்தவுடனே உங்களுக்கு என்ன ஞாபகமுங்க வருது?
எனக்கு என்னோட சின்ன வயசு ஞாபகம் தாங்க வருது...
ஆல் இந்தியா ரேடியோ, சீலோன் ரேடியோல மட்டும் தான் பாட்டு கேட்க முடியும்ங்கற காலத்துல தாங்க இந்த 'பாட்டு பஸ்' பிரபலம் ஆக ஆரம்பிச்சுது.
வீட்டுல டபுள் ஸ்பீக்கர் டேப் ரெக்காடர் இருந்தாலும் 'கம்பனி கேசட்டு' வாங்கறதுக்கு காசு கிடைக்காது. நம்ம மாதிரி ஆட்களுக்கு புது பாட்டு கேட்கனும்னா ஊர்ல ஏதாவது கோவில் விஷேசம் வரணும். அப்போ தான் 'மைக் செட்' போட்டு பாட்டு போடுவாங்க நம்ம 'மைக்செட்' அண்ணனுங்க!!
இந்த சீஸன்ல, தனியார் பஸ்காரங்க பாட்டு போடறது (Unique Selling Proposition) செம ஹிட் ஆக ஆரம்பிச்சுது. எங்கப்பாவுக்கு 'சேரன் ட்ரான்ஸ்போர்ட்'ல போறது தான் பிடிக்கும். ஏன்னா, பாட்டு போடாம இருந்தா தான தூங்க முடியும். நமக்கு அப்படியே நேரெதிர்!!
பாட்டு பஸ்ல ஏறி ஜன்னல் சீட்டுல உட்கார்ந்துட்டு பாட்டு கேக்கற சுகம் இருக்கே!!
ஒரு பக்கம் பாட்டு, ஜன்னல் வழியா மேற்கு மலைத்தொடர் அழகு, சிலு சிலு காத்துனு பஸ் போற அனுபவம் இருக்கே, அதுக்கு ஈடு வேற எதுவுமே கிடையாதுங்க!!
நமக்கு 'இளையராஜா' அறிமுகம் ஆனதே அப்படித்தான்!!
பாட்டு பஸ் இன்னோரு விஷயத்துக்கும் ரொம்ப பிரபலம். காதலர்களும், இளம்பெண்களும் அதிகமா சந்திக்கற இடமே பாட்டு பஸ்ஸா தாங்க இருக்கும். அங்கங்க சீட்ல காதலர்களோட பேர பதிக்கறதும், தன்னோட ஆளுக்கு சீட் பிடிச்சு வைக்கறதும் சாதாரணமாப் பார்க்க முடியுமுங்க!!
கொஞ்சம் குறும்பான ஆளுக 'புகை பிடிக்காதீர்'ல 'பு'வ சொரண்டி, 'கை பிடிக்காதீர்' ஆக்கி இருப்பாங்க!!
'சிரம் கரம் புறம் நீட்டாதே'யும் 'ரம் ரம் புறம் நீட்டாதே' ஆகியிருக்கும்!!
'பூவையர்'ங்கற போர்டு 'பூவை யார்?' ஆனதும் உண்டு!!
நம்ம பாட்டு பஸ்ல ஹீரோ யாருன்னு சொல்லுங்க?
டிரைவர் தாங்க ஹீரோ!!
எங்க ஊருப்பக்கம் (கோவை) 'பூவையர்'கள் சீட்னா டிரைவர் பக்கம் தான்!! நம்ம டிரைவர்க ஒரு கர்சீப்ப காலர்ல சுத்தீட்டு, கையில HMT வாட்ச் கட்டீட்டு, கீர் மாத்தற ஸ்டைல் இருக்கே!! அதுவும் ஒரு ஸ்டைலா ஆரன் அடிச்சுட்டே NHல ஒரு கட் அடிப்பார் பாருங்க, பஸ்ல இருக்கற பசங்களுக்கு கூட பொறாமையா இருக்கும்!
சென்னை மாதிரி பீச் எல்லாம் இல்லாத ஊருன்னா மத்த ஸ்கூல், காலேஜ் பொண்ணுகள பாக்கற வாய்ப்பே இந்த பாட்டு பஸ்ல மட்டும் தாங்க!!
தன்னோட ஆளுக்கு பிடிச்ச கேஸட்ட கொண்டு வந்து போடறதும், 'இந்தப்பாட்டு உனக்கு தான்'னு கண்ணுலயே ஜாடை பண்றதும் அடடா!! பாட்டு பஸ்ங்கற பேருக்கு ஏத்த மாதிரி சவுண்ட் சிஸ்டம் எல்லாம் லேட்டஸ்டா இருக்கும்.
'காலங்காத்தாலயே பஸ் ஸ்டாண்டுக்கு போயிடறான். எத்தன பஸ் வந்தாலும் ஏற மாட்டேங்கறான். எட்டரை மணி 'கமலம்' வந்தா மட்டும் தான் போறான்'னு வீட்ல பேசறது கேட்க முடியும். 'கமலம்' எங்க ஊரு பிரபலமான பாட்டு பஸ் பேரு. அந்த பஸ்ல போய் ஸ்கூல்ல இறங்கும் போது ஒரு பெருமை வரும் பாருங்க!! நம்ம 'ஓனிடா' விளம்பரத்துல சொல்ற மாதிரி 'அண்டை வீட்டாரின் பொறாமை, நமக்கோ பெருமை'!!
பாட்டு பஸ்களோட இன்னோரு அன்றாட விஷயம் பஸ் ஸ்டாண்டுல அரசுப்பேருந்து டிரைவர்களோட நடக்கற சண்டை!! பின்னே, அவங்க பஸ்ல கூட்டமே வரலைன்னா?
அப்படியே மெதுவா சேரன் பஸ்கள்லயும் பாட்டு போட ஆரம்பிச்சாங்க பாருங்க போட்டிய சமாளிக்க!! ( இதுக்கு தான் தனியார்கள உள்ள விடனும்னு சொல்றாங்களோ?) நம்ம இப்போ செல்போன் பார்க்கற Convergence, (அதாங்க வெவ்வெற சேவைய ஒருங்கிணைக்கறது) அப்பவே நம்ம பஸ்கள்ல வந்திருச்சு.
இப்ப நம்ம ஊருக்குப் போய் பார்த்தா, பாட்டு பஸ் எல்லாம் 'வீடியோ பஸ்'ஸா ஆயிடுச்சுங்க!! பின்ன காலத்துக்க ஏத்த மாதிரி மாற வேண்டாமா? அது தான் திரும்பற பக்கம் எல்லாம் FM சேனல் வந்திருச்சே!!
சும்மா சொல்ல கூடாதுங்க 'வீடியோ பஸ்'ல பாத்தம்னா, நாலு டிவி, DTS சவுண்ட்னு ஒரே அதகளப்படுத்தறாங்க!! முன்னாடியாவது வீடியோ, சிடி போடுவாங்க. இப்பல்லாம் USB தான். செல்போன் சார்ஜ் பண்ற சாக்கட்னு அசத்தறாங்க!! நம்ம கண்டக்டர் 'டிக்கட்' வாங்க சொல்ற சத்தத்தோட நமக்குக் கேட்கற இன்னோரு சத்தம் 'டிவிய மறைக்காதப்பா'ங்கறது தான்!!
உங்களுக்கு 'பாட்டு பஸ்' அனுபவங்கள் இருந்தா கீழே பதிவு செய்யுங்க!!
|