|
- செந்தில்வேலன்
2030ம் ஆண்டு - 'மின்சக்தியை வழங்கி நாட்டின் வறுமையை ஒழித்த ஞாயிறைப் போற்றி வெயில் அதிகமாக இருக்கும் மே மாதத்தின் முதல் நாளை சூரியசக்தித் திருநாளாகக் கொண்டாடவோம்' என்று அரசு ஆணையிட்டால் எப்படி இருக்கும்?
'ஏம்ப்பா இருக்கற பண்டிகைகள் போதாதா?' என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் உலகெங்கும் நடந்து வரும் மாற்றங்களைக் கவனிக்கையில் இது சாத்தியம் என்றே தோன்றுகிறது.
மின்சக்தி இல்லாமல் நம்மால் ஏதாவதொரு வேலையைச் செய்ய முடிகிறதா? அப்படி மின்சக்தி உற்பத்திக்காக இப்பொழுது நாம் பயன்படுத்தும் நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்றவை தீர்ந்து விட்டால் என்ன செய்வோம்?
நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்ற புதைவடிவ எரிபொருள்கள் யாவும் இந்த நூற்றாண்டுக்குள் தீர்ந்து விடும் என்று ஆராய்ச்சிக் கட்டுரைகள் கூறிவருவது அதிர்ச்சியளிக்கிறது. புதைவடிவ எரிபொருள்களுக்கு மாற்று என்ன என்று பார்க்கும் வேளையில், காற்றாற்றல், சூரிய சக்தி, உயிரெரிபொருள், நீர்மின்சாரம், கடலலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வகைகளைக் கூறலாம்.
இதில், சூரியசக்தியை உலக நாடுகள் அனைத்தும் வெகுவாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளன.
ஐக்கிய அரபு நாட்டின் அரசு, அபுதாபியை அடுத்து உருவாக்கி வரும் மஸ்தார் என்னும் நகரின் மொத்த மின்சக்தி தேவையையும் சூரிய சக்தியின் மூலமே பூர்த்தி செய்வது என்று திட்டமிட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள சான் ஜோஸ் என்ற நகரத்தின் மின்சக்தித் தேவையைச் சூரிய சக்தியின் மூலமே பூர்த்தி செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
நம் மத்திய அரசும் '2020ம் ஆண்டில் 20000 மெகா வாட் அளவுக்கு சூரியசக்தியை உற்பத்தி செய்ய முதலீடு செய்யப்படும்' என்று அறிவித்துள்ளது.
நாட்டின் வளர்ச்சியை மின்சக்தி உற்பத்தியின் வளர்ச்சியோடு ஒப்பிடுவது மிகவும் பொருத்தமுடையது. உழவுத்தொழில், மருத்துவம், கல்வி, தொழில்துறை என எந்தத் துறையானாலும் மின்சக்தியின் பங்கு இன்றியமையாதது. ஆக மின்சக்தியின் வளர்ச்சி வறுமையை ஒழிக்க வல்லது!
இரவில் விண்வெளியில் இருந்து பூமியை எடுத்த புகைப்படங்களைப் பார்த்திருக்கிறீர்களா?
கருநீல வண்ணத்தில் வெவ்வேறு நாடுகளும், கண்டங்களும் அழகாக காட்சியளிக்கும். ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் படங்களைப் பார்க்கும் போது ஒளிவெள்ளமாகவும், ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளின் மேலிருந்து எடுத்த படங்களைப் பார்த்தால் பெரும்பாலும் இருட்டாகவும் ஆங்காங்கே மின்மினிப் பூச்சி போல ஒளியும் காட்சியளிக்கும்.
இந்தியாவின் மேலிருந்து எடுத்த படங்களைப் பார்த்தால் ஓரளவு ஒளியும், இருண்டும் காட்சியளிக்கும்.
"அட, எவ்வளவு அழகா இருக்குது பாரேன்" என்று நாமும் ரசித்துவிட்டு செல்வதுண்டு!
ஆனால், எப்போதாவது இந்த இருளை வறுமையோடு ஒப்பிட்டதுண்டா? நம் நாட்டில் இன்னமும் 30 சதவிதத்தினருக்கு மின்சக்தி கிடைக்காத வறுமை நிலையைத் தான் மேலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களின் இருள் காட்டுகின்றன. இப்படி நாட்டின் வறுமையைப் போக்க இந்திய அரசு அறிவித்துள்ள திட்டம் மிகவும் பாராட்டத்தக்கதே!
இவ்வாறு சூரியசக்தியின் உற்பத்தியை அதிகரிக்க இந்திய அரசு முயல்வது இந்தத் துறை சார்ந்த தொழில்துறையை வளர்க்கக் கிடைத்த அருமையான வாய்ப்பு!
இங்கே, தமிழகத்தின் கால்வாசிப் பரப்பளவே உள்ள டென்மார்க் நாட்டில் நிகழ்ந்த மாற்றத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். 1980களில், அந்த நாட்டினர் நாட்டின் எண்ணெய் சார்பைக் குறைக்க காற்றாலைகளை நிறுவுவது என முடிவெடுத்து செயல்படுத்தினர். இன்று டென்மார்க்கின் 80% மின்சக்தித் தேவையைக் காற்றாலைகளில் இருந்தே எடுத்துக் கொள்கிறார்கள். அத்துடன் காற்றாலை தொடர்பான கருவிகள் உற்பத்தியிலும் முன்னனியில் உள்ளனர். உலகின் முன்னனி காற்றாலை உற்பத்தி நிறுவனமான வெஸ்டாஸும் டென்மார்க்கைச் சேர்ந்ததே!
இது போல, நம் நாட்டில் சூரியசக்தியின் உற்பத்தியைப் பெருக்கும் பொழுது நம் நாடும் இத்துறையில் முன்னணியில் வருவதுடன் இலட்சக் கணக்கானோர்க்கு வேலையும் கிடைக்க வாய்ப்புள்ளது!
சூரியசக்தியை ஏதோ அரசு மட்டும் தான் நிறுவ வேண்டும் என்று நினைக்க வேண்டாம். நம் வீடுகளில், அலுவலகங்களில், குடியிருப்புகளில் கூட நிறுவலாம். 20000 ரூபாய் செலவளித்து நம் வீட்டின் கூரையில் சூரியசக்தியை உற்பத்தி செய்யும் கருவியை நிறுவி விட்டால் போதும். வீட்டில் உள்ள ஒரு தொலைக்காட்சிப்பெட்டி, நான்கைந்து குழல் விளக்குகள், காத்தாடி போன்றவற்றை இயக்கலாம்.
இது தொடர்பான விளம்பரங்களைச் சில மாதங்களுக்கு முன்பே கோவை ரெயின்போ பண்பலையில் கேட்டிருக்கிறேன்!
இப்படி நாமே நமக்குத் தேவையான மின்சக்தியை உற்பத்தி செய்துகொண்டால் மின்வெட்டில் விடுபடுவதுடன், நாட்டின் முன்னேற்றத்திலும் பங்குபெற முடியுமே! இப்படி ஆகவே...
ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!
|