- சுரேகா
காதல் கவிதை ஒன்றை
காதலர் தினத்தன்று
எழுதச்சொன்னவளே!

வாழ்நாளே நமக்குத்தானென்று
நானிருக்கும் வேளையிலே
இன்றுமட்டும் எழுதச்சொல்லி
நம் தினத்தை
சுருக்கிவிட்டாயே!
உன் கையசைத்தலை
பரதமாகவும்
வாயசைத்தலை
பாசுரமாகவும் கொண்டவன்
கவிதை சொல்லாமல்
கலங்குவதைக்காண
உன் கயல்கள்
துடிப்பதை நான் அறிவேன்!
என்ன செய்வது?
உன்னுடன் இருக்கும்
மமதையிலேயே
மந்தமாகிப்போய்விட்டேன்.
உனக்கான கவிதையை
சொல்லும் மொழிக்காக
உலகம்முழுதும் தேடுகிறேன்.
கிட்டும் வரை காத்திரு!
அடுத்த யுகம் வரைக்குமாவது!
உன் காதலியாய் பிறந்து
கவிதை கேட்கிறேன் நான்!
|