என் தந்தையும் தேசமும்! - மு.உண்ணாமலை

முன் குறிப்பு : நம் நாடு சுதந்திரம் அடைய, மகாத்மா காந்தி போன்ற அசாதாரணமானவர்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானதாக இருந்ததோ, அந்த அளவுக்கு குறிப்பிடத்தக்கது, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பல தியாகங்களைச் செய்து, வெளியுலகுக்கு அதிகம் அறியப்படாத சாதாரணமானவர்களின் பங்களிப்பும்.

ன் தந்தை ஒன்றும் பெரிய தனவந்தர் வீட்டில் பிறக்கவில்லை. சாதாரண குடும்பத்தில் பிறந்த தலைப்பிள்ளை. அவருக்குப் பின் மூன்று சகோதரிகள், ஒரு தம்பி. வறுமையின் காரணமாக அப்பச்சி ஸ்வீகாரம் சென்றார்கள். அந்தக் காலத்தில் ஆண் குழந்தையில்லாத தம்பதியர், தங்கள் வம்சம் விருத்தியடையவும், தங்களுடைய செல்வம், வீடு, வாசல் அனைத்துக்கும் வாரிசாகவும், தங்களுக்கு கொள்ளி போடவும், சொந்தத்தில் அல்லது ஒரே கோவிலைச் சேர்ந்த குடும்பத்தில் இருந்து வளர்ந்த பையன்களை பதினெட்டு அல்லது இருபது வயதில் தத்து எடுத்துக் கொள்வார்கள்.

இந்தக் காலம் மாதிரி இல்லை. சிறு பிள்ளையிலேயே தத்து எடுத்து கஷ்டப்பட்டு வளர்க்க வேண்டாம். அது எங்கள் நாட்டுக்கோட்டை நகரத்தார் பழக்கம். இதிலே இன்னொரு செளகரியமும் இருக்கிறது. மகள் வீட்டுப் பேத்தியை, ஸ்வீகாரம் கூட்டிக்கொண்ட பையனுக்கே கட்டி வைத்துவிடுவார்கள்.

என் தந்தையின் கதைக்கு வருவோம். அவர் வீட்டில் இரண்டு பையன்கள் இருந்ததால் எங்கள் அப்பத்தா ஒருவனை ஸ்வீகாரம் கொடுக்க முன் வந்தார்கள். ஸ்வீகாரம் எடுத்துக்கொள்ளும் வீட்டார் ஒரு தொகை கொடுப்பார்கள். ஒரு இடத்தில் பிறந்து, தாயின் அன்புடன் வளர்ந்து, பின் இன்னொரு தாய்க்கு மகனாகி புது வீட்டில் எல்லாவற்றையும் அனுசரித்து வாழ்வது கொஞ்சம் சிரமம் தான்.

நிறைய குடும்பங்களில் தலைப்பிள்ளையைக் கொடுக்க மாட்டார்கள். என் தந்தையார் தன் சகோதரிகள் திருமணத்துக்கு பணம் வேண்டுமே என்று கவலைப்பட்டு, பிள்ளை போனால் நம் குடும்பம் மேலாகிவிடுமே என்று நினைத்து தன் தாயார் காளியம்மை ஆச்சியிடம் தான், பிள்ளை போவதாகச் சொன்னார்கள். தாயாரோ, "நீ தலைப்பிள்ளை; உன்னை நான் விடமாட்டேன். அப்படி விட்டாலும் தம்பியைத் தான் விடுவேன்," என்றார்கள். "தம்பி சின்னப் பிள்ளை. அவன் உன்னிடமே வளரட்டும், நானே போகிறேன்," என்று பிடிவாதம் பிடித்துச் சென்றதாகக் கேள்விப்பட்டேன்.

அப்படி வந்தவர்தான் என் தந்தை. வந்த இடத்தில் என் அப்பத்தா அலமேலு ஆச்சி மிகவும் நல்லவர். குழந்தைகளே இல்லை. அய்யாவும் இல்லை. அப்பத்தாவின் உறவில் தான் பெண்பிள்ளைகள் இருந்தார்கள். அப்பத்தாவின் மனதில் பையனை ஸ்வீகாரம் செய்து கொண்டு தங்கள் உறவினர் வீட்டுப்பெண்ணைக் கேட்கலாம் என்ற எண்ணம். அப்பத்தாவின் விருப்பப்படி உண்ணாமலைக்கும் தினமணிக்கும் திருமணம் நடைபெற்றது.

அப்பச்சி ரெம்ப அழகு. அழகென்றால் அழகு அவ்வளவு அழகு. நல்ல சிவப்பு. அப்பச்சிக்கு ஏற்ற மனைவியாய் அமைந்தார்கள். ஆனால் என்ன கொடுமை? திருமணமகி ஓராண்டில் உண்ணாமலைக்கு உடல்நிலை சரியில்லை. வயிற்றில் ஏதோ கட்டி. "பிறந்த வீட்டுத் தாய், தந்தை, சகோதரிகள், தம்பி எல்லோரையும் விட்டு இங்கு வந்தேன்; இப்ப நீயும் என்னை விட்டுப் போய் விடுவாயோ? நான் என்ன செய்வேன் என்று கதறியழும்போது, உண்ணாமலை "நீங்கள் கவலைப்படாதீர்கள். என் தங்கையை திருமணம் செய்து கொள்ளுங்கள். நன்றாக இருப்பீர்கள்," என சத்தியம் வாங்கிக் கொண்டார்களாம். எழுபது வருடங்களுக்கு முன் மருத்துவ வசதிகள் சரியாக இல்லாத காரணத்தால் உண்ணாமலை இறைவனடி சேர்ந்தார்கள். இரண்டு ஆண்டு காலம் மனைவியின் நினைவிலே வாழ்ந்து, பின்னர் எங்கள் பெரியத்தா சொல்லியபடி எங்கள் அம்மாவை மணமுடித்தார்கள்.

என் தந்தை மிகுந்த நாட்டுப்பற்றுக் கொண்டவர். காங்கிரஸ் கட்சியில் ஈடுபாடு உடையவர். 1940 ஆம் ஆண்டில் நம் இந்திய நாட்டு விடுதலைக்காக நாடெங்கும் 'வெள்ளையனே வெளியேறு' என்ற போராட்டம் நடந்து கொண்டிருந்த நேரம். இளம் பருவத்தினர் மிகத் தீவிரமாக ஈடுபட்டனர். அப்பாவும் நண்பர்கள் சிலரும் சேர்ந்து சுதந்திர போராட்டங்களில் தவறாமல் கலந்து கொண்டார்கள். காந்தி, நேரு, ராஜாஜீ, காமராஜ் போன்ற தலைவர்கள் மேல் அளவு கடந்த மரியாதை கொண்டவர். கடைசி மூச்சு வரை கதர் ஆடைகள் தவிர வேறு எதுவும் கட்டியதில்லை.

வீர முழக்கங்கள், கோஷங்கள் , ஊர்வலங்கள் என வெள்ளையனை எதிர்த்து ஆங்காங்கே போர்க்கொடி தூக்கிய வண்ணம் இருந்தனர் என் தந்தையும் அவர் நண்பர்களும். என் தாயும், பாட்டியும் எவ்வளவோ சொல்லிப் பார்த்திருக்கிறார்கள், இந்த கலவரத்தில் எல்லாம் கலந்து கொள்ள வேண்டாம் என்று. ஆனால் தந்தையின் சுதந்திர தாகம் அடங்கவில்லை. அப்பொழுது எங்கள் ஊர் தேவகோட்டையில் ஒரு கோர்ட் இருந்தது. அங்கு வெள்ளையர்கள் சிலர் கோர்ட் நடத்திக்கொண்டிருந்த நேரத்தில் கோர்ட்டுக்கு தீ வைத்து விட்டார்கள் என் தந்தையும் மற்ற நண்பர்களும்.

பின்னர், காவல் துறையினர் வீடு தேடி வந்து கைது செய்துவிட்டனர். என் தந்தை எதற்க்கும் பயப்படுபவர் இல்லை. 'நான் தான் தீ வைத்தேன். என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்,' என்று போலீஸிடம் கூறினாராம். தாய், மனைவி, உற்றார், உறவினர் கதறிக் கதறி அழ, நான் சென்று வருகிறேன். வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டு போகும் வரை நாங்கள் ஓயமாட்டோம். வெள்ளையனே வெளியேறு என்று கோஷமிட்டவாறே ஜீப்பில் ஏறிச் சென்றாராம்.

பாவம் என் தாயார். திருமணமாகி 5 மாதங்கள் தான் ஆகி இருந்தது. மூன்று மாத கர்ப்பிணி. வெள்ளைக்காரன் சிறை வைத்ததால், எப்ப வருவாரோ? நாடு எப்ப சுதந்திரம் அடையும்? என்ற பெரிய கேள்விக்குறிகள். என் பாட்டியோ எனக்குத்தான் பிள்ளை பிறக்கவில்லை. வந்த பிள்ளையையும் இப்படி இழுத்துக்கொண்டு போய்விட்டார்களே என்ற கவலை. இவர்களுக்கு யாரால் ஆறுதல் சொல்ல முடியும். காலமும், கடவுளும் தான் ஆறுதல் சொல்ல முடியும்.

காலம் ஓடியது. என் தந்தை சிறையில். என் தாயாருக்கு குழந்தை பிறந்தது. அழகிய ஆண் குழந்தை. தலைப்பிள்ளை. வெங்கட் ரமணி எனப் பெயர். பாட்டி வீட்டில் செல்லப்பிள்ளை. அனைவருக்கும் ஆறுதல் அந்தக் குழந்தை தான். சித்திகள் அனைவரும் சீராட்டி வளர்த்தனர். பார்க்க தந்தை தான் இல்லை. எங்கோ ஆந்திராவில் அலிப்பூர் ஜெயிலில் இருந்தார்கள். கம்யூனிகேஷன் வசதிகள் மிகக் குறைவான காலம்; எப்பொழுதோ வரும் கடிதம் தான். கடிதத்தின் மூலம் தான் குழந்தை பிறந்த செய்தியை அறிந்து கொள்ள வேண்டும். அதையும் வார்டன் படித்துவிட்டுத் தான் கொடுப்பாராம். எத்தனை துன்பங்கள் சிறையில். தண்ணீர் இல்லை. உணவு இல்லை. தூக்கம் இல்லை. மறுபுறம் மனைவி, தாய், குழந்தை நினைவு. இந்நிலையில் குழந்தை நன்றாக வளர்ந்து, பேசிய வார்த்தைகள் எத்தனை... பாடிய பாடல்கள் எத்தனை...

இரண்டு வருடம் ஓடி விட்டது. ஒரு நாள் திடீரென்று குழந்தைக்கு உடல் சரியில்லாது போய்விட்டது. அந்தோ என்ன கொடுமை. என் தாய்க்கு ஒரே ஆறுதலாய் இருந்த செல்லக் குழந்தையும் இறைவனடி சேர்ந்துவிட்டது. அந்தோ பரிதாபம். என் தந்தை அந்தக் குழந்தையைப் பார்க்கவே இல்லை. ஊரே கதறி அழுதது. இதென்ன கொடுமை. இந்த நிலை யாருக்கும் வரலாமா? என் தாய் என்ன செய்வாள்? அவளின் நிலை என்ன? ஒரே குழந்தையும் போய் விட்டதே. இனிமேல் இவருக்கு வாழ்வே இல்லையா?

காலம் ஓடியது. என்னே இறைவனின் கருணை. பல சுதந்திரப் போராட்ட வீரர்களால் இந்தியா விடுதலை அடைந்தது. அதனால் சிறையில் இருந்த போராட்டாளிகள் அனைவரும் விடுதலையானார்கள். என் தந்தை மூன்றாண்டு சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்தார். அப்புறம் தான் நாங்கள் அனைவரும் பிறந்தோம்.

என் தந்தை பிறந்தது ஓர் இடம். வாழ்ந்தது இன்னொரு இடம். சுதந்திர போராட்டங்கள். ஜெயிலில் கஷ்டங்கள். ஆறு குழந்தைகளை நல்லபடி ஆளாக்கபட்ட பாடுகள். இவற்றைவிட தலைப்பிள்ளையாகப் பிறந்த அவரை, இன்னல் அடைய வைத்தது, தன் தலைப்பிள்ளையை ஒரு முறை கூடப் பார்க்க முடியாதது தான். இந்த சுதந்திரப் போராட்ட வீரரை, தியாகியை தந்தையாக அடைய என்ன தவம் செய்தேனோ?

பின் குறிப்பு : இது ஒரு உண்மை சம்பவம். சுதந்திரப் போராட்ட தியாகி தேவகோட்டை தினமணி செட்டியாரின் புகைப்படத்தை, சென்னை - கிண்டி தியாகிகள் மண்டபத்தில் பார்க்கலாம்.

Tamil English  
(tamil typing : ammaa = அம்மா, vikatan = விகடன்)
 Name
  E-Mail
  Comment
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவுக்கு நன்றி. நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும். காத்திருக்கவும்)
For contents & Feedback: youthful@vikatan.com I For technical issues : webmaster@vikatan.com I For Advt: dotcom@vikatan.com
Copyright © 2008 Vikatan.com Pvt Ltd. all rights reserved.